ஜம்மு-காஷ்மீர் சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று ஜம்மு சென்றார். அம்மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். லே, ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் பிரதமர் இன்று ஒருநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
பிரதமரின் ஜம்மு பயணத்தைக் குறிக்கும் வகையில், சம்பா பகுதியில் உள்ள விஜய்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய திரு. மோடி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைப்பதுடன், மருத்துவ வல்லுநர்களின் பற்றாக்குறையையும் பூர்த்தி செய்வதாக அமையும் என்றார். இம்மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 500 இடங்கள் விரைவில் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
கத்துவாவில் இன்று பல்கலைக்கழக பொறியியல் & தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர், பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடு மூலம் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள இளைஞர்கள் பயனடைவார்கள் என்றார்.
இந்திய மக்கள் தொடர்பியல் பயிற்சி நிறுவனத்தின் வடக்கு மண்டல மையத்திற்கான ஜம்மு வளாக கட்டடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 2012-13 ஆம் கல்வியாண்டில் அமைக்கப்பட்ட இந்த ஜம்மு வளாகம், தொடங்கப்பட்டதிலிருந்தே தற்காலிக கட்டடத்தில் இயங்கி வருகிறது.
624 மெகாவாட் கிரு நீர்மின் திட்டம் மற்றும் ஜம்முவின் கிஷ்துவாரில் 850 மெகாவாட் ரட்லே நீர்மின் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். “இந்த புதிய மின் உற்பத்தி திட்டங்கள், இந்த பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும்” என்று அவர் கூறினார். சௌபாக்யா திட்டத்தின்கீழ், 100% மின் இணைப்பு பெற்ற குடியிருப்புகள் உள்ள மாநிலம் ஜம்மு-காஷ்மீர் என்றும் பிரதமர் அறிவித்தார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் புலம்பெயர்ந்த காஷ்மீரி பணியாளர்களுக்கான தங்குமிட கட்டுமானப் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். புலம்பெயர்ந்த காஷ்மீரி மக்களுக்கு 3 ஆயிரம் பணியிடங்களில் வேலைவாய்ப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் அறிவித்தார். “பண்டிட்கள், அவர்களது வீடுகளைவிட்டு வெளியேற நேர்ந்த சூழ்நிலைகளை இந்தியா மறக்காது” என்றும் அவர் குறிப்பிட்டார். அண்டை நாடுகளில் துன்பப்பட்டு வருவோருக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய நதிகள் பாதுகாப்பு (NRCP) திட்டத்தின்கீழ், தேவிகா & தாவி ஆறுகளில் மாசு ஏற்படுவதை குறைப்பதற்கான திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் மார்ச் 2021-க்குள் நிறைவேற்றி முடிக்கப்படும்.
நமது ராணுவ வீரர்களின் பாதுகாப்புக்காக எல்லைப்பகுதி நெடுகிலும் 14000 பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். முந்தைய ஆட்சியில், ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம் திட்டத்திற்கு ரூ.500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கர்தார்பூர்சாஹிப் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் பாடுபட்டார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பிரதமரின் ஜம்மு பயணத்தின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக, சஜ்வால் பகுதியில் ஜீனப் ஆற்றின் குறுக்கே 1640 மீட்டர் நீளமுள்ள இருவழிப் பாலத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தப் பாலம் அமைக்கப்படுவதன் மூலம், சஜ்வால் மற்றும் இந்த்ரி பட்டியான் பகுதிகளுக்கு இடையே மாற்றுப் பாதை ஏற்படுத்தப்படுவதுடன், பயணதூரமும் 47 கிலோமீட்டரிலிருந்து 5 கிலோமீட்டராகக் குறையும். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஜம்மு-காஷ்மீரில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த ரூ.40,000 கோடி அனுமதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.