பிரதமர் திரு. நரேந்திர மோடி அசாமில் இரண்டு மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், சோனிட்பூர் மாவட்டம் தேக்கியாஜுலியில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளை மேம்படுத்துவதற்கான `அசாம் மாலா' என்ற திட்டத்தையும் இன்று தொடங்கி வைத்தார்.
அசாம் முதலமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால், மத்திய அமைச்சர் திரு. ரமேஷ்வர் தெலி, அசாம் மாநில அமைச்சர்கள், போடோ பிராந்தியத் தலைவர் திரு.பிரமோத் போரோ ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அசாம் மாநில மக்கள் தம் மீது காட்டிய அன்பிற்கு நன்றியை தெரிவித்தார். அசாம் மாநிலத்தின் அதி விரைவான வளர்ச்சி மற்றும் சேவையை வழங்கியதற்காக மாநில முதல்வர் திரு சர்பானந்தா சோனோவால், அமைச்சர் திரு. ஹேமந்த் பிஸ்வாஸ், போடோ பிராந்திய தலைவர் திரு.பிரமோத் போரோ ஆகியோரை பிரதமர் பாராட்டினார்.
கடந்த 1942 ஆம் ஆண்டு மூவர்ண கொடிக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் போராட்டங்களையும், வரலாற்றையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
வன்முறை, கசப்பான அனுபவங்கள், இறுக்கம், பாகுபாடு மற்றும் போராட்டத்தைக் கைவிட்டு தற்போது வட கிழக்குப் பகுதிகள் முழுவதும் வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறுகிறது, இதில் அசாம் ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க போடோ ஒப்பந்தத்திற்குப் பிறகு அண்மையில் நடைபெற்ற போடோ கவுன்சில் தேர்தல், இந்தப் பகுதியின் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை பற்றிய புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது என்று திரு மோடி தெரிவித்தார்.
“அசாமின் பிஸ்வநாத் மற்றும் சாராய்தேவ் ஆகிய இடங்களில் இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகளும், அசாம் மாலா திட்டம் வாயிலாக நவீன உள்கட்டமைப்புக்கான அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் அசாம் மாநிலத்தின் வளமான எதிர்காலத்திற்கு, முக்கிய மாற்றத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக இன்றைய தினம் அமைந்துள்ளது”, என்று பிரதமர் கூறினார்.
கடந்த காலங்களில் நிலவிய மருத்துவ உள்கட்டமைப்பின் மோசமான நிலைகளை நினைவுகூர்ந்த பிரதமர், சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு வரை அசாமில் 6 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்ததாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பிஸ்வநாத் மற்றும் சாராய்தேவ் மருத்துவ கல்லூரிகள் வடக்கு மற்றும் மேல் அசாமின் தேவைகளை பூர்த்தி செய்யும். அதேபோல் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கிய பிறகு ஆண்டு தோறும் 1600 புதிய மருத்துவர்கள் பயிற்சியை நிறைவு செய்வார்கள். இதன் வாயிலாக மாநிலத்தின் தொலைதூர பகுதிகளின் மருத்துவ வசதிகள் மேம்பாடு அடையும். குவஹாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் அந்த நிறுவனத்தின் முதல் பிரிவு துவங்கப்பட்டுவிட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் அடுத்த ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும். கடந்த காலங்களில் அசாமின் பிரச்சினைகளுக்குப் போதிய அக்கறை காட்டப்படாததை குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய அரசு, அசாம் மக்களின் நல்வாழ்விற்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக உறுதியளித்தார்.
அசாம் மக்களின் மருத்துவத் தேவைகளை எதிர் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் வலியுறுத்தினார். அசாம் மாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 350 மருத்துவமனைகள் பதிவு செய்திருப்பதின் மூலம் 1.25 கோடி மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1.50 லட்சம் ஏழை மக்கள் இலவச சிகிச்சைகளை பெற்றுள்ளனர். இந்த மாநிலத்தில் இயங்கும் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களின் வாயிலாக சுமார் 55 லட்சம் மக்கள் ஆரம்ப சுகாதார சிகிச்சைகளை பெற்றுள்ளனர். மக்கள் மருந்தக மையங்கள், அதத் அம்ருத் திட்டம் மற்றும் பிரதமர் டயாலிசிஸ் திட்டம் ஆகியவை சாமானிய மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அசாமின் வளர்ச்சியில் தேயிலைத் தோட்டங்களின் முக்கிய பங்கை திரு மோடி சுட்டிக்காட்டினார். தன் புரஸ்கார் மேளா திட்டத்தின் கீழ் நேற்று 7.5 லட்சம் தேயிலைத் தோட்ட பணியாளர்களின் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கான தொகை பரிமாற்றம் செய்யப்பட்டதாக அவர் கூறினார். கர்ப்பிணி பெண்கள், ஓர் சிறப்பு திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். பணியாளர்களின் நலனை பாதுகாப்பதற்காக சிறப்பு மருத்துவ குழு தேயிலைத் தோட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றது. இலவச மருந்துகளும் வழங்கப்படுகின்றன. தேயிலை பணியாளர்களின் நல்வாழ்விற்காக ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம், நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தேயிலைக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் பற்றியும் பிரதமர் எடுத்துரைத்தார். இந்திய தேயிலையின் அடையாளத்திற்கு குந்தகம் ஏற்படுத்த அந்நிய சக்திகள் முயற்சி மேற்கொள்வது சம்பந்தமான ஆவணங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இது போன்ற எண்ணங்கள் வெற்றி அடையாது என்றும், இதில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்போரிடம் இருந்து இதற்கான உரிய பதிலை மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்றும் அசாம் மாநிலத்தில் இருந்து பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.
“நமது தேயிலை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் வெற்றி அடைவார்கள். இந்திய தேயிலை மீதான இந்த தாக்குதல்களை நடத்துபவர்களுக்கு, நமது தேயிலைத் தோட்ட பணியாளர்களின் கடும் உழைப்பை எதிர்கொள்ளும் சக்தி இல்லை”, என்று பிரதமர் கூறினார்.
அசாமின் செயல்திறனை அதிகரிப்பதில் நவீன சாலைகளும், உள்கட்டமைப்புகளும் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இதனைக் கருத்தில் கொண்டு பாரத்மாலா திட்டத்திற்கு இணையாக அசாம் மாலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைகளும், ஏராளமான பாலங்களும் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளதாக திரு.மோடி கூறினார்.
விரிவான சாலைகள் மற்றும் அனைத்து கிராமங்களுக்கும் இணைப்புகள் என்ற அசாமின் கனவுகளை அசாம் மாலா திட்டம் நிறைவேற்றும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். “முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த நிதிநிலை அறிக்கையில் விரைவான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக இந்த பணிகள் எதிர்வரும் நாட்களில் புதிய உத்வேகத்தை அடையும்”, என்று பிரதமர் கூறினார்.