பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்ற 188 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைப் பாராட்டுவதற்காக தில்லியில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர் மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி (ஐசிசிஆர்) ஒன்றுக்கு கலாச்சார உறவுகளுக்கான இந்தியக் கவுன்சில் இன்று ஏற்பாடு செய்திருந்தது.
188 பிரதிநிதிகளுடன் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க குழு புகைப்படத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியும், வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜூம் இணைந்தனர்.
இங்குக் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் இருந்து திரும்பியுள்ள பிரதிநிதிகளை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
கும்பமேளாவை நேரடியாகப் பார்க்கும்வரை ஒருவரால் முழுமையாக அதனைப் பாராட்ட இயலாது. எவ்வளவு மகத்தான பாரம்பரியம் அது என்று அவர் கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையீடு இல்லாமல் இந்தப் பாரம்பரியம் தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.
கும்பமேளா ஆன்மீகம் பற்றியது என்பதைப் போலவே, சமூக சீர்திருத்தம் பற்றியதும் ஆகும் என்று அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்திற்கான செயல் திட்டத்தை உருவாக்கவும், முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகள் விவாதிப்பதற்கான ஒரு அரங்காக கும்பமேளா திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கும்பமேளாவில் வாய்மை, ஆன்மீகம், கலாச்சார உணர்வு ஆகியவற்றுடன் நவீனம் மற்றும் தொழில்நுட்பத்தை இணைப்பதற்கான முயற்சி தற்போது நடைபெறுகிறது என்று பிரதமர் கூறினார். இந்தியா, அதன் நவீனத்திற்காகவும், வளமான பாரம்பரியத்திற்காகவும் உலகத்தால் அங்கீகரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், கும்பமேளாவின் வெற்றிக்கு இவர்களின் பங்கேற்பும் முக்கியமாக உள்ளது என்றார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களை “ஜனநாயகத்தின் கும்பமேளா” என்று பிரதமர் வர்ணித்தார். கும்பமேளாவைப் போலவே இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களும், பெரும் எண்ணிக்கை மற்றும் பாகுபாடேயில்லாமை என்பது உலகத்தை வியக்க வைக்கிறது என்று அவர் கூறினார். இந்தியா அதன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதைக் காண்பதற்கும் கூட உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வரவேண்டும் என்று அவர் கூறினார்.