குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பழங்குடி விருந்தினர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள், நாட்டுநலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி விருந்து நிகழ்ச்சியின்போது இன்று கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு அர்ஜுன் முண்டா, திரு கிரன் ரிஜிஜு, திருமதி ரேணுகா சிங் ஸ்ருதா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், குடியரசு தின அணிவகுப்பில் பழங்குடி விருந்தினர்கள், கலைஞர்கள், நாட்டு நல திட்டப்பணி மற்றும் தேசிய மாணவர் படை வீரர்களின் பங்களிப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆற்றலை வழங்குவதாகக் குறிப்பிட்டார். நாட்டின் பன்முகத்தன்மையை அவர்கள் எடுத்துக் காட்டுவது அனைவரையும் பெருமையில் ஆழ்த்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய சமூக- கலாச்சார பாரம்பரியத்திற்கும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு உயிர்தரும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் குடியரசு தின அணிவகுப்பு மரியாதை செலுத்துவதாக பிரதமர் கூறினார்.
இந்த வருடம் இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைப்பதையும், குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்த நாளை இந்த வருடம் நாம் கொண்டாடவிருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும் பராக்கிரம தினமாகக் கடைப்பிடிக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளும் இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் நமது நாட்டிற்காக மீண்டும் அர்ப்பணிக்க நம்மை ஊக்கப்படுத்துகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களது உயர்ந்த லட்சியத்தின் கூட்டு வலிமைக்கு இந்தியா எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் விருந்தினர்களிடம் தெரிவித்தார். பல மாநிலங்கள்- ஒரே தேசம், பல சமூகங்கள்-ஒரே உணர்ச்சி, பல பாதைகள்- ஒரே இலக்கு, பல பழக்கவழக்கங்கள்- ஒரே பயன், பல மொழிகள்- ஒரே வெளிப்பாடு பல நிறங்கள் ஒரு மூவண்ணம் என்பது தான் இந்தியா என்று அவர் கூறினார். இந்த பொதுவான இலக்குதான் ஒரே பாரதம் உன்னத பாரதம். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் விருந்தினர்களிடம் அவர்களது பழக்கவழக்கங்கள், உணவுமுறைகள், மொழிகள் போன்றவை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்குமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார். ‘உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்குவித்தல்' திட்டத்திற்கு ஒரே பாரதம் உன்னத பாரதம் வலு சேர்க்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஒரு பகுதியின் பொருட்களை எண்ணி மற்றொரு பகுதி பெருமை கொண்டு, ஊக்கப்படுத்தும்போதுதான் உள்ளூர் தயாரிப்புகள் நாடெங்கிலும், உலகெங்கிலும் சென்றடையும். ‘உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்கமளித்தல்’, ‘தற்சார்பு இந்தியா’வின் வெற்றி இளைஞர்களைச் சார்ந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
நாட்டின் இளைஞர்களுக்கு முறையான திறன் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். திறனின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 2014-ஆம் ஆண்டு திறன் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கப்பட்டதாகவும், அதன்மூலம் 5.5 கோடி இளைஞர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகளும் சுய வேலைவாய்ப்புகள், வேலைவாய்ப்புக்கான உதவிகளும் வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
செயல்திறன் சார்ந்த அறிவை வழங்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையில் திறனின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. ஒருவருக்கு விருப்பமான பாடத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது இந்த கொள்கையின் முக்கிய அம்சமாகும். தொழிற்கல்வியை பிரதான கல்வியுடன் இணைப்பதற்கு இந்தக் கொள்கையில் முதன்முதலாக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் தங்களது விருப்பங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்ற வகையிலான பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும். அதன் பிறகு இடை நிலையில் கல்வியையும் தொழிற்கல்வியையும் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா போன்ற நெருக்கடியான தருணங்களில் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட வீரர்கள் நாட்டிற்காக பணியாற்றியதை பிரதமர் பாராட்டினார். பெருந்தொற்றுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டத்திற்கு அவர்கள் முன்னேறுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். தடுப்பூசித் திட்டத்திற்கு அவர்கள் உதவிக்கரம் அளிக்க முன்வருமாறும், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நாடு முழுவதும் அவர்கள் தங்களது பங்களிப்பை வழங்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.”தடுப்பூசியைக் கண்டுபிடித்ததன் வாயிலாக நமது விஞ்ஞானிகள் அவர்களது கடமையை நிறைவேற்றியுள்ளனர், தற்போது உங்களது தருணம். புரளிகளையும், தவறான தகவல்களையும் பரப்பும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் முறியடிக்க வேண்டும்”, என்று பிரதமர் வலியுறுத்தினார்.