வாரணாசியில் இன்று நடைபெற்ற கொவிட் தடுப்பு மருந்து வழங்குதல் நிகழ்ச்சியில் பயனாளிகள் மற்றும் தடுப்பூசி போடுபவர்களிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாடினார்.
பெனாரசின் மக்கள், தடுப்பு மருந்து வழங்குதலில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பிரதமர் தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.
கொவிட் காரணமாக மக்களை தம்மால் நேரில் சந்திக்க முடியவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து வழங்குதல் திட்டம் நமது நாட்டில் தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
முதல் இரு கட்டங்களில் 30 கோடி மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும், சொந்தமாக தடுப்பு மருந்து தயாரிக்கும் திறன் இந்தியாவுக்கு இன்றைக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தடுப்பூசியை விரைந்து எடுத்து செல்வதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகின் இந்த மிகப்பெரிய தேவையில் இந்தியா தற்சார்படைந்துள்ளதோடு, பல நாடுகளுக்கும் உதவி வருகிறது.
கடந்த ஆறு வருடங்களில் பெனாரஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளதாகவும், கொரோனா காலகட்டத்தில் ஒட்டுமொத்த பூர்வாஞ்சல் பகுதிக்கும் இது உதவியதாகவும் பிரதமர் தெரிவித்தார். தடுப்பு மருந்து வழங்குதல் பெனாரசில் வேகமெடுத்து வருவதாகவும், 20,000-க்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு பெனாரசில் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இதற்காக 15 தடுப்பு மருந்து வழங்குதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளுக்காக உத்தரப் பிரதேச முதல்வர் மற்றும் அவரது சகாக்களை பிரதமர் பாராட்டினார்.
தடுப்பு மருந்து வழங்கலுக்கான ஏற்பாடுகள் குறித்தும், ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா என்பது குறித்தும் அறிந்து கொள்வது தான் இன்றைய உரையாடலின் நோக்கம் என்று அவர் கூறினார். தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் அவர் பேசினார். வாரணாசியில் இருந்து வெளிப்படும் கருத்துகள் இதர பகுதிகளின் நிலைமையையும் புரிந்து கொள்ள உதவும் என்றும் அவர் கூறினார்.
செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆய்வக பணியாளர்களிடம் உரையாடிய பிரதமர், நாட்டின் நன்றியை அவர்களுக்கு தெரிவித்தார். விஞ்ஞானிகளின் சிறப்பான அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார். தூய்மை குறித்த விழிப்புணர்வை உருவாக்கிய தூய்மை இந்தியா திட்டத்தின் காரணமாக பெருந்தொற்றை எதிர்கொள்ள நாடு தயாராக இருந்ததாக பிரதமர் தெரிவித்தார். கொரோனா வீரர்களை அவர்களின் சிறப்பாக பணிகளுக்காகவும் தடுப்பு மருந்து வழங்கலுக்காகவும் பிரதமர் பாராட்டினார்.