பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த ஆண்டின் விருது கொரோனா காலத்தில் கிடைத்திருப்பதால், இது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படும் என்று பிரதமர் கூறினார். விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், தூய்மையான பாரதம் போன்ற திட்டங்கள் சிறுவர்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். கொரோனா காலத்தில், கைகளைக் கழுவுவதன் முக்கியத்துவம் குறித்த பிரச்சாரத்தில் குழந்தைகள் பங்கேற்ற போது, அந்த இயக்கம் மக்களின் கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்றது என்றும் பிரதமர் கூறினார். இந்த ஆண்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்பட்டு இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஒரு சிறிய யோசனைக்கு சரியான செயல்பாடு என்ற ஆதரவு கிடைக்கும் போது, அதனால் கிடைக்கும் பயன்கள் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று பிரதமர் கூறினார். எண்ணங்களை செயல்படுத்துவது முக்கியம் என்பதால், சிறுவர்கள் தங்கள் எண்ணங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். அது போன்ற செயல்பாடுகள் பெரிய விஷயங்களில் மக்களுக்கு உந்துதலை ஏற்படுத்தக்கூடிய தூண்டுதலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே கிடைத்த வெற்றிகளின் மூலம் திருப்தி அடைந்து ஓய்வுக்கு சென்றுவிடாமல், தங்கள் வாழ்வில் இன்னும் நல்ல விஷயங்களை சாதிப்பதற்கு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற பிரதமர் ஆலோசனை தெரிவித்தார்.
சிறுவர்கள் மூன்று விஷயங்களை, மூன்று உறுதிமொழிகளை, மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து செயல்படுவேன் என்பது முதலாவது உறுதிமொழி. இது செயல்பாட்டில் எந்தவிதமான தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாகும். இரண்டாவது உறுதிமொழி நாட்டுக்கானது. நாம் நாட்டுக்காக உழைத்தால், நாட்டின் நலனுக்காகவே ஒவ்வொரு வேலையையும் செய்தால், அது தன்னலத்தை விட பெரிய பயன்களைத் தருவதாக இருக்கும். நாம் 75வது சுதந்திர ஆண்டை நோக்கி செல்லும் நிலையில், நாட்டுக்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்று சிறுவர்கள் யோசிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு வெற்றியும் நம்முடைய பணிவை அதிகரிக்க வேண்டும். நம்முடைய பணிவு நிலை மட்டுமே நமது வெற்றிகளை மற்றவர்கள் கொண்டாடக்கூடிய வாய்ப்பை உருவாக்கித்தரும் என்று பிரதமர் கூறினார்.
புதுமை சிந்தனை, கல்வியில் சாதனை, விளையாட்டு, கலைகள் மற்றும் கலாச்சாரம், சமூக சேவை, தீரச்செயல்கள் உள்ளிட்ட துறைகளில் தனித்துவமான செயல்பட்ட சிறுவர் சிறுமியருக்கு பிரதமரின் தேசிய சிறார் விருது திட்டம் மூலமாக பால சக்தி புரஸ்கார் விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு பிரிவுகளில் இருந்து 32 பேருக்கு பால சக்தி புரஸ்கார் விருது வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.