குஜராத் முதலமைச்சர் திரு விஜய் ரூபானி அவர்களே,
என் சக அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் அவர்களே,
ஸ்வீடன் நாட்டு அமைச்சர் மேதகு அன்னா எக்ஸ்ட்ரோம் அவர்களே,
துணை முதலமைச்சர் திரு நிதின்பாய் படேல் அவர்களே,
மதிப்புக்குரிய நோபல் விருதாளர்களே,
நோபல் அறக்கட்டளை துணைத் தலைவர் டாக்டர் கோரன் ஹன்ஸன் அவர்களே,
அன்பான விஞ்ஞானிகளே,
நண்பர்களே !
மாலை வணக்கம் !
இந்தக் கண்காட்சியை அறிவியல் நகருக்கு ஐந்து வாரங்களுக்கு கொண்டு வந்தமைக்காக இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை, குஜராத் அரசாங்கம் மற்றும் நோபல் ஊடகத்துக்கு முதலில் நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கண்காட்சியை திறந்து வைப்பதாக அறிவிக்கிறேன். இதை அனுபவிப்பதற்கு வாய்ப்பை பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.
அடிப்படை அறிவியலில் புதுமையான சிந்தனைகள், எண்ணம் மற்றும் பணிகளுக்காக உலக அளவில் தரப்படும் மிக உயர்ந்தபட்ச அங்கீகாரம் நோபல் பரிசு.
இந்தியாவுக்கு ஒன்று, இரண்டு அல்லது மூன்று நோபல் விருதாளர்கள் வருகை தந்து மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் குறிப்பிட்ட வரம்புகளின்படி கலந்துரையாடிய நிகழ்வுகள் இருந்தது உண்டு.
ஆனால் இன்றைக்கு நோபல் விருதாளர்களின் பட்டாளமே குஜராத்துக்கு வந்திருப்பதன் மூலம் நாம் சரித்திரத்தை உருவாக்கி இருக்கிறோம்.
இங்கே வந்துள்ள விருதாளர்கள் அனைவருக்கும் உளமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இந்தியாவுக்கு மதிப்புமிக்க நண்பர்கள். உங்களில் சிலர், முன்னதாக பல முறைகள் இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களில் ஒருவர் இங்கே பிறந்தவர் மற்றும் சொல்லப்போனால் வடோதராவில் வளர்ந்தவர்
நமது இளம் மாணவர்கள் நிறைய பேர் இங்கு வந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். வரக் கூடிய வாரங்களில் அறிவியல் நகரத்துக்கு வந்து பார்க்குமாறு உங்களுடைய அனைத்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை வலியுறுத்துமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுடன் கலந்துரையாடக் கூடிய இந்த சிறப்பான அனுபவத்தை எங்கள் மாணவர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். பங்களிப்புள்ள நீடித்த நமது எதிர்காலத்துக்கு முக்கியமானதாக இருக்கும், புதிய மற்றும் முக்கியமான சவால்களை எதிர்கொள்வதற்கு அவர்களுக்கு இந்த கலந்துரையாடல் உற்சாகத்தைத் தரும்.
இந்தக் கண்காட்சியும், இந்தத் தொடர்ச்சியும், உங்களுக்கும் எங்கள் மாணவர்களுக்கும் இடையிலும், அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இடையிலும் பலமான பிணைப்பை ஏற்படுத்தும் என்று நான் மிகவும் நம்புகிறேன்.
அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா எந்த நிலையை அடைய வேண்டும் என்ற விருப்பத்தில் எனது அரசு தெளிவான பார்வை கொண்டிருக்கிறது. தொலைநோக்கு பார்வையானது செயல்திட்டம் மற்றும் செயல்பாடாக மாறுவதற்கு அறிவியலும் தொழில்நுட்பமும்தான் முக்கிய பங்காற்றும்.
அறிவியல் தொழில்நுட்பத்தில் எங்களின் தொலைநோக்கு பார்வையானது, எங்கள் இளைஞர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதாக இருக்கிறது. எங்கள் இளைஞர்களுக்குக் கிடைக்கும் பயிற்சியும், எதிர்காலத்துக்கான தயார்படுத்தலும், அவர்களுக்கு சிறந்த இடங்களில் வேலை கிடைக்க உதவும் வகையில் இருக்க வேண்டும். இந்தியா அறிவியலுக்கான முக்கியமான மையமாக மாற வேண்டும். ஆழ்கடல் ஆராய்ச்சி, கணினி தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் பெரிய உத்வேகமான சவால்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த தொலைநோக்கு சிந்தனையை செயல்திட்டமாக கொண்டு செல்வதற்கு நாங்கள் ஒரு திட்டம் வைத்திருக்கிறோம்.
நாடு முழுக்க பள்ளிக்கூடங்களில் அறிவியல் கற்பிப்பதற்கான திட்டங்களை உருவாக்குமாறு எங்கள் விஞ்ஞானிகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் இதில் அடங்கும்.
அடுத்த நிலையில், தொழில் திறன் மற்றும் உயர்தொழில்நுட்பப் பயிற்சி ஆகியவை இணைந்த புதிய திட்டங்களை உருவாக்குமாறு அவர்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
புதிய அறிவுசார் பொருளாதாரத்தில் உங்களுக்கு வேலை கிடைக்கச் செய்வதாக இந்தப் பயிற்சிகள் அமையும். உங்களை செயல்திறன்மிக்க தொழில்முனைவோராகவும், சிந்திக்கும் விஞ்ஞானிகளாகவும் ஆக்க இது உதவும். இங்கும், உலகில் எந்தப் பகுதியிலும் பதவிகளுக்கும் வேலைகளுக்கும் நடைபெறும் போட்டியில் உங்களால் பங்கேற்க முடியும்.
அடுத்ததாக, நகரங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு இடையில் எங்கள் விஞ்ஞானிகள் தொடர்பு ஏற்படுத்துவார்கள். சிந்தனைகளை, கருத்தரங்குகளை, ஆதார வளங்களை, சாதனங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள முடியும். நாம் நிறைய செய்வதற்கும், கூட்டு முயற்சியாக அறிவியல் செயல்பாடு கொள்ளவும் இது அனுமதிக்கும்.
ஒவ்வொரு மாநிலத்திலும், அங்குள்ள தேவைகளுக்கு ஏற்ப அறிவியல் சார்ந்த தொழில்முனைதல் மற்றும் வணிகமயமாக்கல் செயல்பாடுகளை எங்களுடைய அறிவியல் ஏஜென்சிகள் விரிவாக்கம் செய்யும். உங்களுடைய ஸ்டார்ட்-அப் -களும், தொழில்துறையும் பிறகு உலக அளவில் போட்டியிட முடியும்.
இந்த விதைகள் இந்த ஆண்டில் ஊன்றப்பட வேண்டும். இதன் பலன்கள் தொடர்ச்சியாக கிடைப்பதை நாம் காண முடியும்.
என்னுடைய இளம் நண்பர்களே, நீங்கள்தான் எதிர்கால இந்தியா மற்றும் எதிர்கால உலகம். விரிவான வளர்ச்சி வாய்ப்புள்ள சமுதாயத்தில் தனித்துவமான வாய்ப்பையும், சிறந்த ஆசிரியர்களையும் இந்தியா அளிக்கிறது.
இளம் மாணவர்களே, அறிவு மற்றும் திறமை என்ற கிணறுகளுக்கு தண்ணீரைச் சேர்க்கும் ஊற்றுகள் நீங்கள். உங்களுடைய பயிற்சியும் எதிர்காலமும் தான் இவற்றை உருவாக்கும்.
மனிதகுலம் தழைத்திருப்பதற்கு, அறிவியல் தொழில்நுட்பத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். மனிதகுல வரலாற்றில் ஈடில்லாத தரமான வாழ்க்கையை பெருமளவிலான மக்கள் அனுபவிக்கிறார்கள்.
இருந்தாலும் பலரை வறுமையில் இருந்து தூக்கிவிட வேண்டிய பெரிய சவால் இந்தியாவுக்கு இருக்கிறது. விரைவில் நீங்கள் விஞ்ஞானிகளாக ஆகப் போகிறீர்கள். இந்தச் சவாலை நீங்கள் புறக்கணித்துவிடக் கூடாது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி, நமது பூமியை பொறுப்புடன் கையாள்வதை வைத்தும், நமது அறிவியல் அறிவின் முதிர்ச்சி மதிப்பிடப்படும்.
நீங்கள் விரைவில் விஞ்ஞானிகளாக ஆகப் போகிறீர்கள். இந்தப் பூமியின் பாதுகாவலர்களாக ஆகப் போகிறீர்கள்.
நோபல் கண்காட்சி மற்றும் அறிவியல் நகர் மூலமாக நமக்கு தெளிவான பலன்கள் கிடைக்க வேண்டும்.
உலக அளவில், சமூக – பொருளாதார வளர்ச்சியில் முக்கிய உந்துதலாக அறிவியல் & தொழில்நுட்பம் உருவாகியுள்ளது. வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரத்தில், அறிவியல் குறுக்கீடுகள் அதிகம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.
நோபல் பரிசு தொடர் கண்காட்சியில் மூன்று பலன்களைக் காண நான் விரும்புகிறேன்.
முதலாவதாக, மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்களுடன் தொடர் கண்காணிப்புகள். இங்குள்ள மாணவர்கள் தேசிய அளவிலான `ஐடியாத்தான்’ (Ideathon) போட்டி மூலமாக தேர்வாகி வந்தவர்கள். நாடு முழுவதிலும் இருந்து அவர்கள் வந்துள்ளனர். அவர்களை தவற விட்டுவிட வேண்டாம்.
கண்காட்சி நடைபெறும் காலத்தில், குஜராத் முழுவதிலும் இருந்து பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் இங்கு சந்திப்புகள் இருக்கலாம்.
இரண்டாவதாக, உள்ளூர் அளவில் தொழில்முனைவு சிந்தனையை உருவாக்குங்கள். நமது இளைஞர்களிடம் தொழில்முனைவில் பெரிய ஆர்வம் இருக்கிறது.
குஜராத்தில் நமது அறிவியல் அமைச்சகங்களின் இன்குபேட்டர்கள் உள்ளன. அடுத்த ஐந்து வாரங்களில், வெற்றிகரமான அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்-அப் களை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்று ஒரு பயிலரங்கை நீங்கள் நடத்த வேண்டும்.
ஸ்மார்ட் போன் தயாரிப்பதில் நோபல் பரிசு வென்ற பத்து கண்டுபிடிப்புகள் உள்ளதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.
பரிசு வென்ற இயற்பியல் கண்டுபிடிப்புகள் மின்சார கட்டணத்தை மிச்சப்படுத்துவதுடன், பூமியையும் பாதுகாக்கும். 2014 ஆம் ஆண்டுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு BLUE LED -க்கு கிடைத்தது. இது அகசகி, அமனோ, நகமுரா என்ற மூன்று ஜப்பானிய விஞ்ஞானிகளின் அடிப்படை ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே தெரிந்துள்ள சிவப்பு (RED) மற்றும் பச்சை LED (GREEN LED) ஆகியவற்றுடன் சேர்த்தால், வெண்மை ஒளி சாதனங்கள் ஒரு லட்சம் மணி நேரத்துக்கு ஆயுள் கொண்டதாக இருக்கிறது.
வியாபார ரீதியில் நாம் பயன்படுத்தக் கூடிய ஏராளமான எழுச்சியான கண்டுபிடிப்புகள் இருக்கின்றன.
மூன்றாவது, சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம்.
நோபல் பரிசு வென்ற பல கண்டுபிடிப்புகள் நமது சமூகத்தில் ஆரோக்கியம் மற்றும் வேளாண்மையில் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
உதாரணத்துக்கு, மரபணு-தொழில்நுட்பங்களின் அம்சங்களைக் கொண்ட துல்லியமான மருத்துவம் இப்போது சாத்தியமாகியுள்ளது.
புற்றுநோய், நீரிழிவு மற்றும் தொற்றும் தன்மை உள்ள நோய்களைப் பற்றி ஆராய்வதற்கு இந்த தொழில்நுட்ப அம்சத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.
இந்தியா ஒரு பொதுவான மற்றும் உயிரி மருத்துவத்தில் ஏற்கெனவே முதன்மையில் உள்ளது. குஜராத்தை முக்கிய மையமாகக் கொண்டதாக அது இருக்கிறது. ஆனால் இப்போது புதிய உயிரி – தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிலும் முதன்மை இடத்தை அடைவதற்கு நாம் உழைத்திட வேண்டும்.
அறிவியலுடன் சமூகத்தவருக்கு தொடர்பை ஏற்படுத்தக் கூடிய இந்தக் கண்காட்சி, இந்த அறிவியல் நகரில் நடத்த திட்டமிடப் பட்டதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாம் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்களுக்கான தீர்வுகளை அறிவதற்கு குடிமக்களை ஈடுபடுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க பொருத்தமான களமாக இது அமைந்துள்ளது.
இந்த அறிவியல் நகரை உண்மையிலேயே ஈர்ப்பு கொண்டதாக, உலகெங்கும் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் இங்கு வந்து, காட்சிப்படுத்தியுள்ள விஷயங்களைப் பார்த்து உத்வேகம் பெறுவதற்கேற்ற உலகத் தரமான இடமாக ஆக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.
என் இளம் நண்பர்களே !
விருதாளர்கள் அறிவியலின் சிகரங்களாக இருப்பவர்கள். அவர்களிடம் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சிகரங்கள் பெரிய மலைகளில் இருந்து உருவாக்கின்றன என்பதையும், தனித்து நிற்பதில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள்தான் இந்தியாவின் அடிப்படை மற்றும் எதிர்காலம். சிகரங்கள் உருவாகக் கூடிய புதிய பகுதிகளை நீங்கள் உருவாக்க வேண்டும். நமது பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் அடிப்படையில் நாம் கவனம் செலுத்தினால், ஆசிரியர்கள் மூலமாக எல்லா அற்புதங்களும் நடக்க முடியும். இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான சிகரங்கள் உருவாக முடியும். ஆனால், அடிப்படையில் கடின உழைப்பை நாம் புறக்கணித்தால், மாய மந்திரம் மூலம் சிகரம் எதுவும் தோன்றாது.
உத்வேகம் கொள்ளுங்கள், தைரியமாக இருங்கள், துணிச்சலாக இருங்கள், நீங்களாக இருங்கள், பிறரைப் போல இருக்க வேண்டாம். அப்படித்தான் நம்முடைய கவுரவத்துக்குரிய விருந்தினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து அதைத்தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட புதுமையான ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தமைக்காக நோபல் ஊடக அறக்கட்டளை, இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் குஜராத் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கண்காட்சி மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறேன். நீங்கள் அனைவரும் இதன் மூலம் நிச்சயமாக பயனடைவீர்கள் என்று நம்புகிறேன்.
Opportunities in science for the youth, India as a hub for research and innovation. pic.twitter.com/nT9bB6aXVj
— PMO India (@PMOIndia) January 9, 2017
The Prime Minister speaks at Science City in Ahmedabad. pic.twitter.com/qjGrhSdZqU
— PMO India (@PMOIndia) January 9, 2017
Science driven enterprise and catering to local needs and aspirations through science. pic.twitter.com/HULKnJ5eRn
— PMO India (@PMOIndia) January 9, 2017
Science for the betterment of humanity. pic.twitter.com/beOVOLPSca
— PMO India (@PMOIndia) January 9, 2017