சர்வதேச எரிசக்தி அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான 16-வது கூட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.
எரிசக்தி உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் பயன்படுத்தும் நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் இந்த அமைப்பின் தலைமைச் செயல்அதிகாரி உள்ளிட்டோர் பெருமளவில் இக்கூட்டத்தில் பங்கேற்றிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
உலகில் எரிசக்தி விநியோகம் மற்றும் பயன்பாட்டுக்கு இடையே பெரும் மாற்றம் ஏற்படுவதைக் காணும் வேளையில், சர்வதேச எரிசக்தி குறித்து விவாதிக்க நீங்கள் அனைவரும் இன்று இங்கு வந்திருக்கிறீர்கள்.
- பயன்பாட்டு வளர்ச்சி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சாராத நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது: மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் வளரும் ஆசியா;
- மற்ற எரிசக்தி வளங்களுடன் ஒப்பிடுகையில், சூரியசக்தி போட்டோ வோல்டிக் எரிசக்தி செலவு குறைந்ததாக உள்ளது. இது விநியோக முறையை மாற்றியுள்ளது;
- உலக அளவில் இயற்கை எரிவாயு பெருமளவு கிடைப்பதும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு அளவு அதிகமாகக் கிடைப்பதும் எரிசக்தித் தேவையின் ஆரம்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.
- உலகில் அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்கா வெகுவிரைவில் மாறவுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும் கூடுதல் எண்ணெயின் பெரும் பகுதியை அமெரிக்கா பூர்த்தி செய்யும் எனக் கருதப்படுகிறது.
- பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சார்ந்த உலகிலும், அதன் பிறகு வளரும் நாடுகளிலும், எரிசக்தி உற்பத்திக்கான அடிப்படை மூலப்பொருள் என்ற நிலையில் இருந்து நிலக்கரி படிப்படியாக மாறும்;
- மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில், போக்குவரத்து துறையில் பெருத்த மாற்றம் ஏற்படக்கூடும்;
- பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் உடன்படிக்கை அம்சங்களைச் செயல்படுத்த உலகநாடுகள் உறுதிபூண்டுள்ளன. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளின் எரிசக்தித் தேவை, பசுமை எரிசக்தி மற்றும் எரிசக்திச் சிக்கனம் என்பதை நோக்கமாகக் கொண்டு மாறக்கூடும்.
எரிசக்தித் தேவை தொடர்பாக ஓர் அமைப்பு தயாரித்த கணிப்புகளைக் கடந்த மாதம் நான் பார்வையிட்ட போது, அடுத்த 25 ஆண்டுகளில் உலகளவில் அதிக அளவில் எரிசக்தி தேவைப்படும் நாடுகளில் இந்தியா முக்கிய இடம் பெற்றுள்ளதை அறிய முடிந்தது. இந்தியாவின் எரிசக்தித் தேவை அடுத்த 25 ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்கு 4.2 சதவீதம் அளவிற்கு அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இது மிக வேகமானதாகக் கருதப்படுகிறது. அத்துடன், 2040 ஆம் ஆண்டுவாக்கில் எரிவாயுத் தேவையும் மும்மடங்கு அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 30 லட்சமாக உள்ள மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டு வாக்கில் 32 கோடியாக அதிகரிக்கும்.
எரிசக்தி அதிக அளவில் தேவைப்படும் காலகட்டத்தில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். எனினும், 120 கோடி மக்களுக்கு இதுவரை மின்சார வசதி கிடைக்கவில்லை. அதற்கும் மேலானவர்களுக்கு இதுவரை தூய்மையான சமையல் எரிபொருள் கிடைக்கவில்லை. இந்த நிலைமையால் ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டியது அவசியம். உலக அளவில், தூய்மையான எரிசக்தி, குறைந்த விலையில், நீடித்த மற்றும் சமச்சீரான விநியோகம் செய்வதற்குச் சர்வதேச அளவில் அணுகும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் பற்றிய எனது சிந்தனைகளையும், எரிசக்திப் பாதுகாப்பை அடைவதற்கான எங்களது வழிமுறைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
எண்ணெய் மற்றும் எரிவாயு, வர்த்தகப் பொருளாக மட்டுமின்றி அத்தியாவசியப் பொருளாகவும் உள்ளது. சாமானிய மனிதனின் அடுப்பறை முதல், விமானங்கள் வரை, எரிபொருள் அத்தியாவசியத் தேவையாகவும் உள்ளது.
உலகம் முழுவதும் இவற்றின் விலை பெரும் ஏற்றம்-இறக்கமாகவே உள்ளதைக் காண்கிறோம்.
உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் ஆகிய இருதரப்பினரின் நலன்களையும் சமன் செய்யக்கூடிய வகையில் நியாயமான விலை நிர்ணய முறைக்கு மாற வேண்டியது அவசியம். அத்துடன், எண்ணெய் மற்றும் எரிவாயுக்கு, வெளிப்படையான மற்றும் நெகிழும் தன்மையுடன் கூடிய சந்தைமுறைக்கு மாற வேண்டியதும் அவசியமாகிறது. அப்படிச் செய்தால்தான், மனிதகுலத்தின் எரிசக்தித் தேவைகளை உரிய முறையில் பூர்த்தி செய்ய முடியும்.
உலகம் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைய வேண்டுமெனில், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையே பரஸ்பர ஆதரவுடன் கூடிய நட்புறவு அவசியமாகிறது. உற்பத்தியாளர்கள் நலமாக இருந்தால்தான், பொருளாதாரம் நிலையாகவும், வேகமாகவும் வளர்ச்சி அடையும். இதுவே அதிகரித்துவரும் எரிசக்திச் சந்தைவாய்ப்புகளை உறுதிப்படுத்தும்.
செயற்கையாக ஏற்படுத்தப்படும் விலை மாற்ற முயற்சிகள், சுய தோல்வியையே ஏற்படுத்தும் என்பதையே வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது. அத்துடன், தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துவதுடன், குறிப்பாக வளரும் நிலையில் உள்ள நாடுகளுக்கும், வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நியாயமான விலைநிர்ணயம் தொடர்பாகச் சர்வதேச அளவில் கருத்தொற்றுமை ஏற்படுத்த இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே, உற்பத்தியாளர், நுகர்வோர் ஆகிய இருதரப்பினருக்கும் பரஸ்பரப் பலனை அளிக்கும்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை நிலவும் வேளையில், இந்தியாவிலும் எரிசக்திப் பாதுகாப்பு அவசியமாகிறது. இந்தியாவின் வருங்கால எரிசக்தித் தேவைக்காக, எளிதில் கிடைக்கக்கூடிய எரிசக்தி, எரிசக்திச் சிக்கனம், நீடித்த எரிசக்தி மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு ஆகிய நான்கு தூண்களை எனது தொலைநோக்கு சிந்தனையாகக் கொண்டுள்ளேன்.
பொதுவான எரிசக்தி மற்றும் ஹைட்ரோகார்பன் ஆகியவை இந்தியாவின் எதிர்காலத்திற்கான எனது தொலைநோக்கு திட்டத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளன.
மரியாதைக்குரிய நாடுகளில், உலகளவில் பொறுப்பான நாடாகத் திகழும் இந்தியா, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போரிடவும் காற்றின் மாசைக் கட்டுப்படுத்தவும் நீடித்த எதிர்காலத்தை உறுதிசெய்யவும் உறுதி பூண்டுள்ளது. இந்த உறுதியை நிறைவேற்றும் வகையிலேயே, சர்வதேச எரிசக்திக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே
தற்போதைய நிலையில் இந்தியா உலகின் மிக விரைவாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதாரம் ஆகும். சர்வதேசப் பண நிதியம், உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி போன்ற அனைத்து முன்னணி அமைப்புகளும் இந்தியாவின் வளர்ச்சியை வரும்காலத்தில் 7 முதல் 8 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்துள்ளன. நமது அரசு உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, குறைவான பணவீக்கம், நன்கு கட்டுப்படுத்தப்பட்ட நிதிப் பற்றாக்குறை, நிலையான அன்னியச் செலாவணிப் பரிவர்த்தனை வீதம் ஆகியவற்றை அடைந்துள்ளது. இந்தப் பெருமப் பொருளாதார ஸ்திரத்தன்மையானது நுகர்வு மற்றும் முதலீடு ஆகிய பொருளாதார அம்சங்களை உயர்த்திஉள்ளது.
இந்தியா மக்கள்தொகை பங்கு ஈவு மூலம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. மொத்த மக்கள்தொகையில் பணிபுரியும் வயதுள்ளோர் எண்ணிக்கை வீதம் உலகிலேயே இந்தியாவில் அதிகமாக உள்ளது. நமது அரசு ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தின் மூலம் உள்ளூர் உற்பத்தியை உயர்த்திவருகிறது. ஜவுளி, பெட்ரோலியம் வேதிப்பொருட்கள், பாதுகாப்பு, பொறியியல் போன்ற துறைகளில் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் நமது மின்சாரப் பயன்பாடு மேலும் அதிகரித்துவருகிறது.
நமது கொள்கைகளையும், நெறிமுறைகளையும் கூட மாற்றியமைத்துள்ளோம். பல்வேறு துறைகளில் வெளிப்படைத்தன்மையும், போட்டியிடும் தன்மையும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் துரப்பணம், உரிமம் வழங்கும் கொள்கை ஆகியவையும் இதற்கு உதவி உள்ளன. ஏல நடைமுறையில் வருவாய்ப் பகிர்வு என்ற அம்சம் வலியுறுத்தப்படுவதால் அரசின் தலையீடுகள் குறையத் தொடங்கி உள்ளன. தற்போது மே மாதம் 2-ஆம் தேதி வரை ஏல நடைமுறை திறப்பில் உள்ளது. உற்பத்தியை அதிகரிப்பதில் எங்களது முயற்சிக்கு உதவும் வகையில் பங்களிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நிறுவனங்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் பங்கேற்பதற்குத் திறந்த பரப்பு மற்றும் தேசியத் தரவு வைப்பு அமைப்பு அவர்களுக்கு உதவும். இந்திய வயல்களில் அவர்களது துரப்பண ஆர்வத்தை உயர்த்துவதற்கும் இவை உதவும்.
மேம்படுத்தப்பட்ட எண்ணெய் எடுப்புக் கொள்கை அதிநவீனத் தொழில்நுட்பத்தை மேல்நிலை வயல்கள் உற்பத்தி மேம்பாட்டுக்குப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
எமது கீழ்நிலைத் துறைகள் முற்றிலும் தாராளமயமாக்கப்பட்டுள்ளன. சந்தைச் சக்திகளால் பெட்ரோல் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுவதால் அவை கச்சா எண்ணெயின் விலை மாற்றத்திற்கு ஏற்ப அமைகின்றன. எரிபொருள் சில்லறை விற்பனை மற்றும் அதற்கான பணம் செலுத்துகை ஆகியவற்றில் டிஜிட்டல் முறைகளை நோக்கி நாம் நகர்ந்துவருகிறோம்.
எண்ணெய் மற்றும் எரிவாயு மதிப்புச் சங்கிலியின் முழு அளவிலும் தனியார் பங்கேற்பினை அரசு ஊக்குவித்து வருகிறது. மேல்நிலை உற்பத்தி முதல் கீழ்நிலை சில்லறை விற்பனை வரை தனியார் துறையினர் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
எரிசக்தித் திட்டமிடலின் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மீது அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தியாவின் அனைத்தையும் உள்ளடக்கிய, பருவநிலை உணர்வுள்ள சந்தை என்பது எமது எரிசக்தி அலுவல் பட்டியலாகும். இதனால் ஐ.நா.வின் நிலைத்த மேம்பாட்டு அலுவல் பட்டியலின் 3 அம்சங்கள் தொடர்பான இலக்குகளை அடைய இது பெரிதும் உதவும் என நாங்கள் நம்புகிறோம். அந்த 3 அம்சங்கள் வருமாறு:
- 2030 வாக்கில் நவீன எரிசக்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்
- பாரீஸ் உடன்பாட்டுக்கு ஏற்ப அவசரப் பருவநிலை மாற்ற எதிர்ப்பு நடவடிக்கை
- காற்று தர மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள்
நண்பர்களே,
மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, தூய்மையான சமையல் எரிபொருள் மிகவும் அவசியம் என்பதை நாம் நம்புகிறோம். பெண்கள்தான் இதனால் மிக அதிகமாகப் பயன் அடைகிறார்கள். இதன் காரணமாக வீட்டிற்குள்ளான மாசுபாடு குறைகிறது, உயிரிக் கூழ், விறகு ஆகியவற்றைச் சேகரிப்பதில் உள்ள கஷ்டங்கள் குறைகின்றன. சுய முன்னேற்றத்திற்குக் கூடுதலான நேரம் பெண்களுக்குக் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி அதிகமான கூடுதல் வருமானம் கிடைக்கும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள இயலும்.
இந்தியாவில் உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை ஏழைவீடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு வழங்குகிறோம். 80 மில்லியன் ஏழைக் குடும்பங்களுக்கு இத்தகைய தூய்மையான சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கும் நோக்கம் கொண்டுள்ளோம். ஏற்கெனவே 35 மில்லியன் இணைப்புகள் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே வழங்கப்பட்டுவிட்டன.
2020 ஏப்ரல் மாதம் பி.எஸ்-6 ரக எரிபொருளுக்கு மாறத் திட்டமிட்டுள்ளோம். இது யூரோ-6 தரத்திற்குச் சமமானது ஆகும். இதற்கு ஏற்ப எமது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் பெரிய அளவு மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தூய்மையான எரிபொருளை வழங்குவதற்கான இந்தக் குறுகிய காலக்கெடு இலக்கை எதிர்கொள்ள அவை துரிதமாகச் செயல்படுகின்றன. புதுதில்லியில் இந்த மாதமே பி.எஸ்-6 தரமுள்ள எரிபொருள் வழங்கப்பட்டுவருகிறது.
வாகனங்களை அகற்றி விடும் கொள்கை ஒன்றைத் தொடங்கி உள்ளோம். இதன் மூலம் பழைய வாகனங்கள் தூய்மையான எரிசக்தித் திறன் வாய்ந்த வாகனங்களால் மாற்றியமைக்கப்படும்.
நமது எரிசக்தி விரிவாக்க அணுகுமுறைகளைக் கருத்தில் கொண்டு நமது எண்ணெய் நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை மதிப்பீடு செய்துவருகின்றன.
இன்று எண்ணெய் நிறுவனங்கள் காற்று மற்றும் சூரிய சக்தித் திறன்களிலும், வாயு அடிப்படை வசதி ஆகியவற்றிலும் முதலீடுகளைச் செய்துவருகின்றன. மின்சார வாகனங்கள் மற்றும் சேமிப்புப் பகுதிகள் ஆகியவற்றில் முதலீடு செய்வது குறித்தும் அவை ஆலோசித்துவருகின்றன.
நண்பர்களே,
நாம் இப்போது தொழில்துறை 4.0 என்ற திட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இதன்படி எதிர்காலத்தில் தொழில்துறை செயல்பாடுகள், புதிய தொழில்நுட்பங்கள், நடைமுறைகளுடன் செயல்படத் தொடங்கும். இன்டர்நெட் ஆப் திங்ஸ், செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் மூலமான தானியங்கித் தன்மை, எந்திர முறைக் கற்றல், முன்கூட்டியே அறிவிக்கும் பகுப்பாய்வு, முப்பரிமாண அச்சு போன்ற நடைமுறைகள் அதில் இடம் பெறும்.
நமது நிறுவனங்கள் அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற தொடங்கியுள்ளன. இதனால் திறன் மேம்பாடு அடையும். பாதுகாப்பு அதிகரிக்கும், செலவினங்கள் குறையும். அத்துடன் கீழ்நிலை சில்லறை விற்பனை மட்டுமின்றி மேல்நிலை எண்ணெய் உற்பத்தி, சொத்துப் பராமரிப்பு மற்றும் தொலைநிலைக் கண்காணிப்பு ஆகியனவும் மேற்கொள்ளப்படும்.
இந்தப் பின்னணியில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு இந்தியா மிகச் சிறப்பான தகுதியைப் பெற்றுள்ளது. மேலும் எரிசக்தித் துறையின் எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதற்கும் சிறந்த பின்னணியை இந்தியா பெற்றுள்ளது. உலக மாற்றங்கள், மாற்றக் கொள்கைகள், புதிய தொழில்நுட்பங்கள் ஆகியன எவ்வாறு சந்தை ஸ்திரத்தன்மையையும் இத்துறையின் எதிர்கால முதலீடுகளையும் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்துச் சிந்திக்கவும் இந்தச் சூழ்நிலை உதவுகிறது.
நண்பர்களே,
ஐ.இ.எப்.-16-ன் முக்கியக் கருதுகோள் “உலக எரிசக்தி பாதுகாப்பின் எதிர்காலம்” என்பதாகும். உற்பத்தியாளர்-நுகர்வோர் உறவுகளில் உலகளவிலான மாற்றம், அனைவருக்கும் எரிசக்தி குறைந்த விலையில் கிடைப்பது, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் எதிர்காலத் தேவையைச் சந்திக்க முதலீட்டை மேம்படுத்துவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆராய்வதை இந்த நிகழ்ச்சியின் அலுவல்பட்டியல் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எரிசக்திப் பாதுகாப்பு பராமரிப்பு, புதிய மற்றும் தற்போதுள்ள தொழில்நுட்பங்கள் இணைந்து செயல்படுவது போன்றவை குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரியவருகிறது. நமது எதிர்கால ஒட்டுமொத்த எரிசக்திப் பாதுகாப்புக்கு இவையெல்லாம் மிகவும் அவசியமான விஷயங்கள்.
இந்த அரங்கில் நடைபெறும் விவாதங்கள் உலகத்தின் குடிமக்கள் அனைவரும் தூய்மையான குறைந்த விலையிலான, நிலையான எரிசக்தியைப் பெற்றுப் பயனடைவதில் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன்.
வெற்றிகரமான, மிகவும் பயனுள்ள அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் நன்றி.