பிரதமர் திரு.நரேந்திர மோடி, இந்தியன் ஆயில் பொங்கைகாவ்ன் சுத்திகரிப்பு ஆலையில் இந்த்மாக்ஸ் யூனிட், மதுபானில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் செகண்டரி டேங்க் ஃபார்ம் மற்றும் டின்சுக்கியாவின் மாகுமில், ஹெபடா கிராமத்திலுள்ள கேஸ் கம்ப்ரசர் நிலையம் ஆகியவற்றை அசாம் மாநிலத்தின் தேமாஜியிலிருந்து இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தேமாஜி பொறியியல் கல்லூரியைத் தொடங்கி வைத்து, அசாமில் சுவல்குச்சி பொறியியல் கல்லூரிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

அசாம் ஆளுநர் பேராசிரியர் ஜெகதீஷ் முகி, முதல்வர் திரு. சர்பானந்தா சோனோவால், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், உணவு பதப்படுத்துதல் துறைக்கான இணையமைச்சர் திரு. ரமேஷ்வர் தெலி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர், வடகிழக்கு பகுதிகள் இந்தியாவின் புதிய வளர்ச்சி சக்தியாக விளங்கும் என்றும், அசாம் மாநில மக்களுடன் பணியாற்றுவதில் தாம் மிகுந்த உற்சாகம் கொள்வதாகவும் தெரிவித்தார். கடந்த எட்டு தசாப்தங்களுக்கு முன்பாக ஜாய்மதி என்னும் திரைப்படத்தின் வாயிலாக பிரம்மபுத்திராவில் உள்ள வடக்கு கரை எவ்வாறு அசாம் திரைப்படத்திற்கு தோற்றமளித்தது என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

அசாம் மாநில கலாசாரத்தின் பெருமையை மேம்படுத்தும் வகையில் ஏராளமான பிரபலங்களை இந்தப் பகுதி உருவாக்கியிருப்பதாக அவர் கூறினார்.

அசாமில் சமமான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அவற்றில் மாநில உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

|

எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்த பிரதமர், வடக்கு கரையில் ஏராளமான வளங்கள் இருந்தபோதிலும் முன்னதாக ஆட்சியில் இருந்த அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு, போதிய இணைப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொழில்துறைகள் போன்ற முக்கிய தேவைகளை இந்த பகுதியில் வழங்க தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரும் நம்பிக்கை அடைவோம்’ என்ற தாரக மந்திரத்துடன் அரசு செயல்பட்டு, ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அசாம் மாநிலத்தில் அரசால் துவக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.

இன்று, எரிசக்தி மற்றும் கல்வித் துறைகளில் ரூ. 3000 கோடிக்கும் அதிகமான உள்கட்டமைப்புத் திட்டங்கள் இந்தப் பகுதியில் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். எரிசக்தி மற்றும் கல்வியின் முனையமாகவும், அசாம் மாநிலத்தின் சின்னமாகவும் இந்தப் பகுதி அடையாளம் பெறும் வகையில் இந்தத் திட்டங்கள் வலுசேர்க்கும் என்று அவர் கூறினார்.

இந்தியா தொடர்ந்து தன்னிறைவு அடைவதற்கான மற்றும் அதன் வலிமை, செயல்திறனை அதிகரிப்பதற்கான அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். கடந்த காலங்களில் இந்தியாவின் சுத்திகரிப்பு திறன் குறிப்பாக பொங்கைகாவ்ன் சுத்திகரிப்பு ஆலையின் திறன் பெருமளவு அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று அறிமுகப்படுத்தப்பட்ட எரிவாயு ஆலை, சமையல் எரிவாயுவின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் என்றும், அசாம் மற்றும் வடகிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கையை எளிதானதாக மாற்றும் என்றும் அவர் மேலும் கூறினார். இந்தப் பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் இது அதிகரிக்கும்.

உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் அறையில் கரியினால் ஏற்படும் புகையிலிருந்து பாதிக்கப்படும் ஏழை சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் அரசு சுதந்திரம் வழங்கியிருப்பதாக பிரதமர் கூறினார்.

அசாமில் எரிவாயு இணைப்பு 100 சதவீதத்தை நெருங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு கோடி ஏழை சகோதரிகளுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது தொடர்பாக மத்திய நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பை அவர் சுட்டிக்காட்டினார்.

எரிவாயு இணைப்பு, மின்சார இணைப்பு மற்றும் உரங்களின் பற்றாக்குறையினால் ஏழை மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். சுதந்திரம் அடைந்து ஏழு தசாப்தங்களுக்குப் பிறகும் மின்சார இணைப்புகள் இல்லாமல் நாட்டில் உள்ள 18,000 கிராமங்களில் பெரும்பாலானவை அசாம் மற்றும் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவை என்றும், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எரிவாயுவின்மையால் இந்தப் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் நலிவடைந்தோ அல்லது நிரந்தரமாகவோ மூடப் பட்டதாகவும், இதன் காரணமாக ஏழைகளும், நடுத்தர வகுப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் கீழ் உலகின் மிகப் பெரிய எரிவாயு குழாய் இணைப்புகளின் வாயிலாக கிழக்கு இந்தியா இணைக்கப்படுவதாக திரு. மோடி தெரிவித்தார்.

நமது விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்பவாதிகளின் ஆற்றல் வாய்ந்த திறமை, தற்சார்பு இந்தியாவின் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் கூறினார். புதுமை நிறுவனங்களுடன் (ஸ்டார்ட் அப்) இணைந்து இளைஞர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சூழலை கடந்த காலங்களில் நாம் நாட்டில் உருவாக்கினார்கள். தற்போது இந்தியாவின் பொறியாளர்களுக்கு உலகம் முழுவதும் அங்கீகாரம் கிடைக்கிறது. அசாம் மாநிலத்தின் இளைஞர்கள் அபாரமான தகுதியைப் பெற்றுள்ளனர். அவர்களது இந்த செயல்திறனை அதிகரிப்பதற்காக மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அசாம் மாநில அரசின் நடவடிக்கைகளினால் இந்த மாநிலத்தில் தற்போது 20-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. தேமாஜி பொறியியல் கல்லூரியின் தொடக்கம் மற்றும் சுவல்குச்சி பொறியியல் கல்லூரிக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளதன் வாயிலாக இந்த நிலை மேலும் வலுப்பெறுகிறது.

கூடுதலாக 3 பொறியியல் கல்லூரிகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் அறிவித்தார். புதிய கல்விக் கொள்கையை மிக விரைவில் செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அசாம் அரசு மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் கூறினார். இந்த கொள்கையின்படி உள்ளூர் மொழிகளில் கல்வி பயிற்றுவிக்கப்படுவதால் தேயிலை தோட்ட பணியாளர்கள், பட்டியல் பழங்குடி மக்களின் குழந்தைகளும், அசாம் மக்களும் பெரிதும் பயனடைவார்கள்.

தேயிலை, கைத்தறி மற்றும் சுற்றுலாவிற்கு அசாம் மாநிலம் பிரசித்தி பெற்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தன்னிறைவு அடைவதன் மூலம் மக்களின் ஆற்றலும் செயல்திறனும் அதிகரிக்கும். தற்சார்பு அசாமின் தொலைநோக்கு பார்வைக்கு தேயிலை உற்பத்திக்கு கூடுதல் வலுசேர்க்கும்.

இத்தகைய சூழ்நிலையில் இதுபோன்ற திறன்களை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இளைஞர்கள் கற்கும்போது அவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று பிரதமர் கூறினார். பழங்குடி பகுதிகளில் புதிதாக 100 ஏகலைவா மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என்ற நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பும் அசாம் மாநிலத்திற்கு பயனளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அசாமின் விவசாயிகளின் நலனுக்காகவும், அவர்களது திறனையும், வருமானத்தையும் அதிகரிப்பதற்காகவும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருவதாக பிரதமர் கூறினார்.

மீன்வள துறையைச் சேர்ந்த விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 20,000 கோடி மதிப்பிலான மிகப்பெரும் திட்டமும் அசாம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர். அசாம் மாநில விவசாயிகளின் விளைபொருட்கள் சர்வதேச சந்தையை சென்றடைவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அசாமின் பொருளாதாரத்தில் வடக்கு கரையின் தேயிலை தோட்டங்களும் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சிறிய அளவில் தேயிலை வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு நிலத்தை குத்தகை அளிப்பதற்கான மாநில அரசின் பிரச்சாரத்தை பிரதமர் பாராட்டினார். மேம்பாடு மற்றும் வளர்ச்சி ஆகிய இரண்டு எந்திரங்களை வலுப்படுத்துவது தான் அசாம் மாநில மக்களின் தற்போதைய தேவை என்று அவர் தெரிவித்தார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Decoding NEP 2020: Facts Versus Fearmongering

Media Coverage

Decoding NEP 2020: Facts Versus Fearmongering
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 20, 2025
March 20, 2025

Citizen Appreciate PM Modi's Governance: Catalyzing Economic and Social Change