தமிழ்நாடு ஆளுநர் அவர்களே,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே
எனது அமைச்சரவைச் சகாக்களே
தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களே
மேடையில் வீற்றிருக்கும் முக்கியப் பிரமுகர்களே
பெரியோர்களே, தாய்மார்களே,
ஏப்ரல் 14-ம் தேதி வரவிருக்கும் விளம்பி தமிழ்ப் புத்தாண்டு விழாவையொட்டி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடையாறு புற்றுநோய் ஆய்வுக் கழகத்திற்கு வந்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் உள்ள மிகவும் குறிப்பிட்டுக் கூறத்தக்க, மிக பழமையான விரிவான புற்றுநோய் சிகி்ச்சைமையங்களில் இதுவும் ஒன்றாகும்.
மாறிவரும் வாழ்க்கைமுறைகள் தொற்றாநோய்களின் சுமையை அதிகரித்துவருகிறது. சில மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்த மரணங்களில் சுமார் 60 சதவீதம் தற்போது தொற்றாநோய்கள் மூலம் ஏற்படுகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 20 மாநிலங்களில் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகங்களையும், 50 பிராந்தியப் புற்றுநோய்ச் சிகிச்சைமையங்களையும் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிராந்தியப் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.45 கோடி வரையிலும் மாநிலப் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் அமைக்க ரூ.120 கோடி வரையிலும் திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 15 மாநிலப் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகங்களுக்கும், 20 பிராந்தியப் புற்றுநோய் சிகிச்சைமையங்களுக்குமான ஆலோசனைகள் ஏற்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரதம மந்திரியின் ஸ்வஸ்தயா சுரக்ஷா திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 8 நிறுவனங்கள் புற்றுநோயியல் சேவைகளைக் கொண்டதாக மேம்படுத்தப்பட உள்ளன. 2017-ன் தேசிய சுகாதாரக் கொள்கை நோய்த் தடுப்புச் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதாரத் திட்டத்தின் கீழ், மக்களின் வீடுகளுக்கு அருகே உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அளவிலேயே நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைச் சேவைகளை நாம் வழங்கவிருக்கிறோம்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பொதுவான புற்றுநோய்கள் போன்ற தொற்றாநோய்களை மக்கள்தொகை அடிப்படையில் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், சோதனை செய்வதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் நாங்கள் முன்முயற்சி மேற்கொண்டிருக்கிறோம்.
ஆயுஷ்மான் பாரத் என்பது பிரதம மந்திரியின் தேசியச் சுகாதாரப் பாதுகாப்பு இயக்கத்தையும் உள்ளடக்கியதாகும்.
இது 10 கோடி குடும்பங்களுக்குப் பயனளிப்பதாக இருக்கும். இந்த இயக்கத்தின் மூலம் சுமார் 50 கோடி பேர் பயனடைவார்கள். இந்த இயக்கத்தின் கீழ் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவச் சிகிச்சைக்கு ஒரு குடும்பத்திற்கு ஓராண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரையில் காப்பீடு வழங்கப்படும்.
இது உலகிலேயே மிகப் பெரிய அளவில் அரசு நிதியிலான சுகாதாரத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் பயன்கள் நாடு முழுவதும் கொண்டுசெல்லத்தக்கதாகும். பொது மற்றும் பட்டியலிடப்பட்ட தனியார் துறை மூலமும் மக்கள் இதன் பயன்களைப் பெற முடியும். சுகாதாரத்திற்காகத் தனது கையிருப்பிலிருந்து செலவு செய்வதைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டது இந்தத் திட்டம்.
புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் தனியார் துறை, தொண்டு நிறுவனங்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் செயல்பாடு நமக்குத் தேவைப்படுகிறது.
சென்னையில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் டபிள்யு.ஐ.ஏ. என்பது மறைந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தலைமையால் ஈர்க்கப்பட்ட சமூகச் சேவையாற்றும் தன்னார்வ மகளிர் சமூகக் குழுவால் அமைக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.
இந்த ஆராய்ச்சிக்கழகம் சிறிய அளவிலான ஒரு மருத்துவமனையாகத் தொடங்கப்பட்டது. புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக தென்னிந்தியாவில் முதலாவதாகவும், நாட்டில் இரண்டாவதாகவும் இது இருந்தது. இன்று இந்த ஆராய்ச்சிக் கழகம் 500 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனையாக உள்ளது. இவற்றில் 30 சதவீதம் கட்டணமில்லாதவை என்று நான் அறிந்தேன். அதன் பொருள் நோயாளிகளிடம் கட்டணம் பெறுவதில்லை என்பதாகும்.
இந்த ஆராய்ச்சிக் கழகத்தில் உள்ள மூலக்கூறு புற்றுநோயியல் துறை 2007-ம் ஆண்டில் “சிறப்புக்குரிய மையம்” ஆக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 1984-ல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதலாவது பன்னோக்குச் சிறப்புக் கல்லூரியாக 1984-ல் இது நிறுவப்பட்டது. இவையெல்லாம் முன்னோடியான, பாராட்டத்தகுந்த சாதனைகளாகும்.
இந்த ஆராய்ச்சிக் கழகம் எதிர்கொள்ளும் சில சிரமங்கள் பற்றி டாக்டர் சாந்தா அவரது துவக்க உரையில் குறிப்பிட்டார். இவற்றை நாங்கள் கவனிப்போம் என்ற உறுதியை அவருக்கு நான் அளிக்க விரும்புகிறேன். இதற்கு என்ன செய்ய முடியும் என்பது குறித்து கவனிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். இறுதியாகக் கடந்த சில நாட்களாகக் குறிப்பிட்ட சிலர் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தன்னார்வத்துடன் எழுப்பும் பிரச்சனை குறித்து சிறிது கூற விரும்புகிறேன்.
சில குறிப்பிட்ட மாநிலங்கள் அல்லது குறிப்பிட்ட பகுதிக்கு எதிராகப் பாகுபாட்டுடன் 15-வது நிதிக்குழுவின் செயல்பாடுகள் இருப்பதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. விமர்சனம் செய்பவர்கள் கவனிக்கத் தவறிய சிலவற்றை உங்களுக்குச் சொல்ல நான் விரும்புகிறேன். மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்காகச் செயலாற்றிய மாநிலங்களைக் கடுமையாகக் கருதக் கூடாது என்று மத்தியஅரசு நிதிக்குழுவிற்கு யோசனை தெரிவித்துள்ளது. இந்த அளவுகோல் காரணமாக மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிற்கு பெருமுயற்சியையும், சக்தியையும், ஆதாரவளங்களையும் செலவிட்டுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு நிச்சயமாகப் பயன் கிடைக்கும். இதற்கு முன்பு இத்தகைய நிலை இல்லை.
நண்பர்களே,
ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறைக்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. எங்களது தாரக மந்திரம் ‘அனைவருடனும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி’ என்பதாகும். நமது மகத்தான விடுதலைப் போராட்ட வீரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக புதிய இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.
நன்றி.
உங்களுக்கு மிக்க நன்றி
A baseless allegation is being made about the Terms of Reference of the 15th Finance Commission, being biased against certain states or a particular region: PM
— PMO India (@PMOIndia) April 12, 2018
The Union Government has suggested to the Finance Commission to consider incentivizing States who have worked on population control. Thus, a state like Tamil Nadu, which has devoted a lot of effort, energy and resources towards population control would certainly benefit: PM
— PMO India (@PMOIndia) April 12, 2018