தமிழக ஆளுநர் அவர்களே,
மக்களவைத் துணைத் தலைவர் அவர்களே,
தமிழக முதலமைச்சர் அவர்களே,
துணை முதலமைச்சர் அவர்களே,
எனது சக அமைச்சர்களே,
மரியாதைக்குரிய பெரியோர்களே,
நண்பர்களே..
காலை வணக்கம்! (कालइ वणक्कम् !)
நமஸ்காரம்! (नमस्कारम् !)
இது 10வது நிகழ்வாக நடத்தப்படும் பாதுகாப்புக் கண்காட்சி ஆகும்.
இத்தகைய பாதுகாப்புக் கண்காட்சியை உங்களில் சிலர் பல முறை கண்டுகளித்திருக்கக் கூடும். ஒரு சிலர் இதைத் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே பார்த்து மகிழ்ந்திருக்கக்கூடும்.
என்னைப் பொறுத்தவரையில் இதுதான் முதல்முறையாகப் பங்கேற்கும் பாதுகாப்புக் கண்காட்சியாகும். தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடைபெறுவது குறித்து பூரிப்பும் பெருமிதமும் அடைகிறேன்.
வணிகம், கல்வி ஆகியவற்றின் வாயிலாகச் சோழப் பேரரசர்கள் இந்திய நாட்டின் வரலாற்றுப் பெருமை மிக்க நாகரிகத் தொடர்பை நிறுவிய இந்த மண்ணில் இத்தகைய நிகழ்வில் பங்கேற்பது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். இது காலம்காலமாகப் புகழ்பெற்று சிறந்து விளங்கும் கடற்படைப் பாரம்பரியப் பெருமை மிக்க மண்ணாகும்.
இந்த மண் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கீழ்த்திசை நாடுகளில் இந்தியா கொடிகட்டி, ஆளுகை செலுத்திய மண் ஆகும்.
நண்பர்களே,
இந்த நிகழ்வில் 500 இந்திய நிறுவனங்களும் 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்பது மிகவும் அற்புதமானது.
இந்நிகழ்வுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகள் குறித்து விவாதிப்பதற்காக மட்டுமின்றி, முதல்முறையாக இந்தியாவின் சொந்தப் பாதுகாப்பு உற்பத்தித் திறனை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
உலகம் முழுதும் உள்ள ஆயுதப் படைகள் விநியோகச் சங்கிலியின் முக்கியத்துவம் குறித்து அறிந்துள்ளன. போர்த்திறன் சார்ந்த முடிவுகள் போர்க்களத்தில் மட்டுமல்ல, பாதுகாப்புக்கான உற்பத்தி ஆலைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்று பரஸ்பரக் கூட்டிணைப்புடன் இயங்கும் சூழலில் நாம் வாழ்கிறோம். எந்த உற்பத்தி நிறுவனத்துக்கும் விநியோகச் சங்கிலி முக்கியமாகும். இந்தியாவில் உற்பத்தி செய் (Make in India), ‘இந்தியாவுக்காக உற்பத்தி செய்’ (Make for India), ‘இந்தியாவிலிருந்து உலகுக்கு வழங்கு’ (Supply to the World from India) ஆகியவற்றுக்கான ராஜதந்திர அவசியம் முன்னெப்போதும் விட வலுவானது.
நண்பர்களே,
இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு நாம் எந்தப் பிரதேசத்தின் மீதும் ஆசை கொள்வதில்லை என்பதைக் காட்டுகிறது.
நாடுகளைப் போரின் மூலம் வெற்றிகொள்வதை விட, இதயங்களை வெல்வதையே இந்தியா நம்புகிறது. வேத காலத்திலிருந்தே சமாதானம், உலகச் சகோதரத்துவம் ஆகிய கருத்துகளை வழங்கிவரும் மண் இது.
இந்த மண்ணிலிருந்துதான் பவுத்தத்தின் பேரொளி உலகெங்கும் பரவியது. மாமன்னர் அசோகர் காலம் முதல், ஏன் அதற்கும் முன்பிருந்தே- மானுடத்தின் உயரிய கோட்பாடுகளைப் பாதுகாப்பதற்கே தனது பலத்தைப் பயன்படுத்தவேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.
நவீன காலத்தில், ஒரு லட்சத்து முப்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள், கடந்த நூற்றாண்டில் பல்வேறு உலகப் போர்களில் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்திய சமாதானத்திற்காகவும் எந்தப் பிரதேசத்தின் மீதும் உரிமை கோரவில்லை. ஆனால், அமைதியையும் மனித விழுமியங்களைக் காப்பதற்காகவும் இந்திய ராணுவ வீரர்கள் போராடினர்.
சுதந்திர இந்தியா உலகின் பல நாடுகளிலும் அமைதிக்காக ஐ.நா. மன்றத்தின் அமைதி காப்புப் படைக்காக ஏராளமான வீரர்களை அனுப்பியது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும்.
அதே சமயம், தமது சொந்தக் குடிமக்களைக் காப்பாற்ற வேண்டியதும் அரசின் முக்கியமான கடமையாகும். தேசத்தின் மிகச் சிறந்த ராஜதந்திரியும் சித்தாந்தவாதியுமான கவுடில்யர் அர்த்த சாஸ்திரத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார். அதில், மன்னர் அல்லது ஆட்சி நடத்துபவர் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். போரை விட அமைதிதான் மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இத்தகைய சிந்தனைகளே வழிகாட்டுதல்களாக அமைந்துள்ளன.
அமைதிக்காக நாம் மேற்கொள்ளும் உறுதிப்பாடு மக்களைப் பாதுகாப்பதற்கும், நமது பிரதேசங்களைப் பாதுகாப்பதற்குமான உறுதிப்பாட்டைப் போல வலிமையானதாகும். மூலோபாய சுதந்திரம் கொண்ட பாதுகாப்புத் தொழில் வளாகத்தை அமைப்பது உட்பட நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு ஏற்கெனவே நாம் தயாராக இருக்கிறோம்.
நண்பர்களே,
பாதுகாப்புத் தொழிலியல் வளாகம் ஒன்றை உருவாக்குவது எளிதானதல்ல என்பதை நாம் உணர்ந்துள்ளோம். நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளன. இந்தச் சிக்கலான விஷயத்தின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமாகிறது. பாதுகாப்பு உற்பத்தித் துறை தனித்தன்மை வாய்ந்தது என்பதையும் நாம் அறிவோம். அரசு சம்பந்தப்பட்டுள்ளது என்பது தனித்தன்மையின் ஓர் அம்சம். உற்பத்தி செய்வதற்கு உரிமம் வழங்க அரசு அவசியப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அரசு மட்டுமே இப்பொருட்களை வாங்குவோர் என்பதால், அரசின் ஆணைகள் பெறுவது உங்களுக்கு மிகவும் அவசியம்.
ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி வழங்குவதற்கும் அரசு அவசியப்படுகிறது.
எனவே, கடந்த சில ஆண்டுகளில் நாம் எளிமையான வகையில் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
பாதுகாப்பு உற்பத்தி உரிமங்களைப் பொறுத்தவரை, பாதுகாப்பு ஈடுகளைப் பொறுத்தவரை, பாதுகாப்பு ஏற்றுமதி அனுமதிகளைப் பொறுத்தவரை, பாதுகாப்பு உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீடுகளைப் பொறுத்தவரை, பாதுகாப்பு கொள்முதல் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை பற்பல நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம்.
இந்தத் துறைகள் அனைத்திலும் நமது வரன்முறைகள், நடைமுறைகள், செய்முறைகள் அனைத்தும் தொழில்துறைக்கு இணக்கமானதாகவும், வெளிப்படையானதாகவும் மேலும் சிறப்பாக எதிர்பார்க்கக் கூடியதாகவும் விளைவுகள் அடிப்படையிலானதாகவும் மாற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு உற்பத்திப் பொருட்கள் பட்டியல் அதற்கான உரிமங்கள் வழங்குவதற்கெனத் திருத்தப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிப் பொருட்கள், உபரிப் பாகங்கள், துணை – அமைப்புகள், சோதனைக் கருவிகள், உற்பத்திக் கருவிகள் போன்றவை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால், தொழிற்சாலைகளின் நுழைவுத் தடைகள், குறிப்பாக, சிறு-நடுத்தர தொழில்களின் தடைகள், நீக்கப்பட்டுள்ளன.
தொடக்க நிலை தொழிலியல் உரிமங்களின் காலஅவகாசம் 3 ஆண்டுகளிலிருந்து 15 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு விரிவாக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஈடுகட்டும் வழிகாட்டு நெறிமுறைகள் நெகிழ்ச்சித் தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்திய ஈடுகட்டும் பங்காளர்கள் மற்றும் ஈடுகட்டும் பகுதிப் பொருட்களில் ஏற்கெனவே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் உட்பட அனைத்திலும் மாற்றங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இந்திய ஈடுகட்டும் பங்காளர்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் குறித்த விவரங்களைக் குறிப்பிட வேண்டிய அவசியம் ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் சமயத்தில் வெளிநாட்டுக் கருவி உற்பத்தியாளருக்கு இப்போது இல்லை. சேவைகள் ஈடுகட்டுதல்களை மேற்கொள்ளும் ஒரு வழிவகையாக நாம் மீண்டும் கொண்டுவந்துள்ளோம்.
ஏற்றுமதி அனுமதி வழங்குவதற்கான தரப்படுத்தப்பட்ட செயல்பாட்டு நடைமுறை எளிமையாக்கப்பட்டு, அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், வெளியிடப்பட்டுள்ளது.
பகுதிப் பொருட்கள், உதிரிப் பாகங்கள் மற்றும் ரகசியக் காப்பு முக்கியத்துவம் இல்லாத ராணுவப் பொருட்கள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு அரசு கையெழுத்திட்ட இறுதிநிலைப் பயன்பாட்டாளர் சான்றிதழ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
2001 மே வரை பாதுகாப்புத் தொழில்துறை தனியாருக்கு மூடப்பட்டே இருந்தது. அந்த ஆண்டு முதல்முறையாக திரு. அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு இதனைத் தனியார்துறை பங்கேற்புக்குத் திறந்துவிட்டது.
அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பைத் தன்னிச்சை மார்க்கத்தில் 26 சதவீதத்திலிருந்து, 49 சதவீதமாக மாற்றியமைத்து, நாம் ஒரு முன்நோக்கு நடவடிக்கையை எடுத்துள்ளோம். சில விஷயங்களைப் பொறுத்தவரை, இந்த அளவு 100 சதவீதமாகக் கூட அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்துறை வளர்ச்சியைத் தூண்டும் வகையில், பல குறிப்பிட்ட அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
முன்னதாக, தளவாடத் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருந்த சில பொருட்கள் அதற்கான பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, தனியார் துறையினர் – குறிப்பாக குறு-சிறு-நடுத்தர தொழில்துறையினர் – இத்தகைய பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் குறு-சிறு தொழில்துறையினரின் மேம்பாட்டை ஊக்குவிக்க, 2012-ல் அறிவிக்கையாக வெளியிடப்பட்ட குறு-சிறு தொழில்களுக்கான பொதுக் கொள்முதல் கொள்கை 2015 ஏப்ரல் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொடக்கமாக, பல ஊக்கமளிக்கும் முடிவுகள் காணப்பட்டுள்ளன. 2014 மே மாதத்தில் பாதுகாப்பு உரிமங்களின் மொத்த எண்ணிக்கை 215. நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் 144 உரிமங்களை மேலும் வெளிப்படையான, மேலும் முன்கூட்டியே அனுமானிக்கக் கூடிய, நடைமுறை வாயிலாக வழங்கியுள்ளோம்.
2014 மே மாதத்தில் மொத்தம் 577 மில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி அனுமதிக்கான மொத்த எண்ணிக்கை 118 ஆக இருந்தது. 4 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே 1.3 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புள்ள 794-க்கும் அதிகமான ஏற்றுமதி அனுமதிகளை நாம் வழங்கியிருக்கிறோம். 2007-லிருந்து 2013 வரை 1.24 பில்லியன் டாலர்களுக்கான ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 0.79 பில்லியன் டாலர் மதிப்புள்ள தளவாடங்கள் மட்டுமே உண்மையில் ஏற்றுமதி ஆகின. இது சாதனை விகிதத்தில் 63 சதவீதம் மட்டுமே ஆகும்.
2014-லிருந்து 2017 வரை 1.79 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு இதில் 1.42 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது சாதனை விகிதத்தில் 80 சதவீதமாகும். 2014-15-ல் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஆயுதத் தொழிற்சாலைகள் சிறு, குறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்த ரூ.3,300 கோடி என்பதிலிருந்து 2016-17-ல் ரூ.4,250 கோடியாக அதிகரித்துள்ளது. இது சுமார் 30 சதவிகித அதிகரிப்பாகும்.
கடந்த 4 ஆண்டுகளில் பாதுகாப்பு உற்பத்தித் துறைக்குச் சிறு மற்றும் குறுதொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 200 சதவீதம் அதிகரித்திருப்பது நிறைவளிப்பதாக இருக்கிறது.
உலகளவிலான வினியோகத் தொடரிலும் அதன் ஒரு பகுதியாகவும் அவை மாறிவருவதும் அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு மூலதனச் செலவினத்தின் மூலம் கொள்முதல் ஆணைகளைப் பெறுவதில் 2011-14 காலத்தில் சுமார் 50 சதவீதமாக இருந்த இ்ந்திய விற்பனையாளர்களின் பங்கு கடந்த 3 ஆண்டுகளில் 60 சதவீதமாக அதிகரித்திருப்பது குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
நாங்கள் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் இருக்கின்றன என்பதை நான் அறிந்தே இருக்கிறேன். அவ்வாறு செய்வதற்கு நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம்.
பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு நிறுவனங்கள் என அனைவருக்கும் இடமளிக்கும் வகையில் பாதுகாப்புத் தொழில் துறை வளாகம் ஒன்றைக் கட்டமைக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.
பாதுகாப்புத் தொழில் துறைக்கான இரண்டு தனிப்பாதைகளை நிறுவுவதற்கும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஒன்று இங்கே தமிழ்நாட்டில், மற்றொன்று உத்தரப்பிரதேசத்தில். இந்தப் பாதுகாப்பு தொழில்துறைப் பாதைகள் இந்தப் பகுதிகளில் தற்போது உள்ள பாதுகாப்பு உற்பத்தி சூழல்களைப் பயன்படுத்திக் கொள்வதோடு அதனை மேலும் வளர்க்கும்.
நாட்டில் உள்ள பாதுகாப்புத் தொழில்துறைத் தளத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் இவை என்ஜின்களாக மாறும். பாதுகாப்புத் துறை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டவும், உதவி செய்யவும் பாதுகாப்பு முதலீட்டாளர்கள் பிரிவு ஒன்றையும் நாங்கள் நிறுவியிருக்கிறோம்.
நண்பர்களே,
பாதுகாப்புத் துறைக்கான தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அரசின் ஆதரவு மிகவும் முக்கியமானதாகும்.
பாதுகாப்புத் தொழில்துறை திட்டமிடுதலுக்கும், தொழில்நுட்ப மேம்பாட்டில் முன்முயற்சி மேற்கொள்வதற்கும் பங்குதாரராக இருப்பதற்கும் உற்பத்தி ஏற்பாடுகளைச் செய்வதற்கும் உதவிட தொழில்நுட்பத் தொலைநோக்கு மற்றும் திறனுக்கான வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய வர்த்தக சூழலில் புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்முனைதலையும் ஊக்கப்படுத்த அண்மை ஆண்டுகளில் ‘இந்தியாவில் உற்பத்தி’, ‘தொடங்குக இந்தியா’, ‘அடல் கண்டுபிடிப்பு இயக்கம்’ போன்ற பல்வேறு முன்முயற்சிகளையும் நாம் மேற்கொண்டிருக்கிறோம்.
இன்று “பாதுகாப்புத் தொழில் மேம்பாட்டுக்கான புதிய கண்டுபிடிப்பு” என்ற திட்டத்தை நாம் தொடங்கியிருக்கிறோம். பாதுகாப்புத் துறையில் புதிதாகத் தொழில் தொடங்க வருவோருக்குத் தேவைப்படும் பாதுகாப்பையும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதற்கு நாடு முழுவதும் பாதுகாப்புத்துறைக் கண்டுபிடிப்பு மையங்கள் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.
பாதுகாப்புத் தொழில் துறையில் தனியாருக்கான தொடக்க மூலதனம், குறிப்பாக முதன்முதலில் தொழில் தொடங்குவோருக்கு வழங்குவது ஊக்குவிக்கப்படும்.
எந்தவொரு பாதுகாப்புப் படைக்கும் செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள் போன்ற புதிய மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் பாதுகாத்தல் மற்றும் தாக்குதல் திறன்களைத் தீர்மானிப்பதற்கு எதிர்காலத்தில் மிகவும் முக்கியமானதாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் தளத்தில் தலைமைத்துவம் பெற்றுள்ள இந்தியா, இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் அதன் மூலம் பலனடைவதற்கும் முயற்சி செய்யும்.
நண்பர்களே,
நமது முன்னாள் குடியரசுத் தலைவரும் தமிழக மற்றும் இந்தியாவின் தலைசிறந்த புதல்வருமான பாரத ரத்னா டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நாம் அனைவரையும் கனவு காண அழைத்தார். அவர் “கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்! கனவுகள் எண்ணங்களாக மாறும் மற்றும் எண்ணங்கள் செயல்களாக மாறும்” என்றார்.
பாதுகாப்பு உற்பத்தித் துறையில் புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான தொழில்முனைவோர்கள் உருவாகும் சூழலை உருவாக்குவதே நமது கனவாகும்.
மேலும், இதற்காக வரும் வாரங்களில் நமது பாதுகாப்பு உற்பத்தி மற்றும் பாதுகாப்புத் துறை கொள்முதல் கொள்கை ஆகியவை குறித்து நமது நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் என அனைத்துப் பங்குதாரர்களுடனும் நாம் விரிவான ஆலோசனைகள் நடத்த உள்ளோம். இந்த ஆலோசனையில் நீங்கள் அனைவரும் முழுமனதோடு பங்கேற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நமது லட்சியம் ஆலோசனை நடத்துவது மட்டும் அல்ல, அந்த ஆலோசனைகளில் இருந்து சரியான பாடங்களை நிறுவுவதுதான். நமது எண்ணம் அறிவுரை அளிப்பதல்ல, கேட்டுக்கொள்வதே. நமது இலக்கு யோசிப்பது மட்டுமல்ல, மாற்றம் கொண்டுவருவதும் ஆகும்.
நண்பர்களே,
நாம் வேகமாக முன்னேற வேண்டும், ஆனால் நமக்கு எந்தவித குறுக்குவழியும் வேண்டாம்.
முன்பு ஒரு காலம் இருந்தது, ஆளுகையின் பல அம்சங்களைப் போல பாதுகாப்புத்துறையின் தயார்நிலையும், கொள்கை முடக்கங்களால் தடை செய்யப்பட்டிருந்தது.
சோம்பல், திறமையின்மை, ஏன் சில மறைமுக நோக்கங்களும் நமது நாட்டிற்குச் சேதம் விளைவிக்கும் என்பதை நாம் அறிந்துகொண்டோம்.
இந்த நிலை இப்போதல்ல, இனிமேலும் இராது, எப்போதுமே வராது. முன்னால் அரசுகளால், எப்போதோ தீர்த்திருக்கப்பட வேண்டிய இந்தப் பிரச்சனைகள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக இந்திய ராணுவ வீரர்களுக்குத் துப்பாக்கி துளைக்காத மேலங்கிகளை அளிப்பது குறித்த பிரச்சனை எத்தனை ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்திக்கு உத்வேகம் அளிப்பதற்கென ஒப்பந்தம் ஒன்றை வழங்கி, இந்த நடைமுறையை வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீண்டகாலம் நிலுவையில் இருந்த போர்விமானக் கொள்முதல் நடைமுறை எந்தவிதமான முடிவுக்கும் வராமல் இருந்ததையும் நீங்கள் நினைவில் கொண்டிருக்கக் கூடும்.
நமது உடனடி முக்கியத் தேவைகளைச் சந்திப்பதற்குத் துணிவு நிறைந்த நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம். அதுமட்டுமன்றி, 110 போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான புதிய நடைமுறையையும் தொடங்கியுள்ளோம். பத்தாண்டு காலத்தை எவ்விதப் பலன்களும் இன்றி, வெறும் பேச்சுவார்த்தைகளிலேயே செலவிட நாங்கள் விரும்பவில்லை. உங்களுடன் ஒத்துழைத்து, இயக்க அடிப்படையில் செயல்புரிந்து, நமது பாதுகாப்புப் படையினருக்கு அதிநவீன கருவிகளையும், அமைப்புகளையும் வழங்கப் பணியாற்றுவோம். இதனை அடைவதற்குத் தேவையான உள்நாட்டு உற்பத்திச் சூழலை உருவாக்குவோம். திறன்மிக்க நடைமுறையைக் கடைபிடிக்கும் நமது அனைத்து முயற்சிகளிலும் உங்களோடு கூட்டாண்மையை திறம்பட்டதாக செய்வதற்கும் மிக உயர்ந்த நெறிகளான நேர்மை, உண்மைத்தன்மை ஆகியவற்றைக் கடைபிடிப்போம்.
நண்பர்களே,
இந்தப் புனித பூமி, நமது மனங்களில் புகழ்பெற்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரை நினைவுக்குக் கொண்டுவருகிறது.
அவர் கூறினார், “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”.
தொழில்துறையினருக்கும், நிபுணர்களுக்கும் புதிய சந்திப்பு வாய்ப்பை ஏற்படுத்தி, ராணுவத் தொழிலியல் நிறுவனங்களை மேம்படுத்த, பாதுகாப்புக் கண்காட்சி வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.
உங்களுக்கு நன்றி.
உங்களுக்கு மிக்க நன்றி.