குஜராத்தில் ரயில்வே துறை சார்ந்த பல திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்
திரு எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார்
கெவாடியா, உலகின் மிகப்பெரும் சுற்றுலாத்தலமாக வளர்ந்துள்ளது: பிரதமர்
இலக்கை மையமாகக் கொண்ட நடவடிக்கைகளின் வாயிலாக இந்திய ரயில்வே மாற்றத்தை சந்தித்து வருகின்றது: பிரதமர்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குஜராத் மாநிலத்தின் கெவாடியாவிற்கு எட்டு ரயில்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில்கள் ஒற்றுமை சிலைக்கு சீரான இணைப்பை வழங்கும். தபோய் – சந்தோத் அகல ரயில் பாதை, சந்தோத்- கெவாடியா புதிய அகல ரயில் பாதை, பிரதாப் நகர் – கெவாடியா மின்மயமாக்கப்பட்ட புதிய வழித்தடம், தபோய், சந்தோத், கெவாடியா பகுதிகளில் புதிய ரயில் நிலைய கட்டிடங்கள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கிவைத்தார். குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர், மத்திய ரயில்வே அமைச்சர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

ரயில்வே வரலாற்றில் முதன் முறையாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரே இடத்திற்கு ரயில் சேவை கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார். ஒற்றுமை சிலை, சர்தார் சரோவர் ஆகிய முக்கிய தலங்களின் பிறப்பிடமாக கெவாடியா விளங்குவதால் இது சாத்தியமாகப்பட்டிருப்பதாக அவர் விளக்கமளித்தார். ரயில்வேயின் தொலைநோக்குப் பார்வையையும், சர்தார் பட்டேலின் குறிக்கோளையும் இன்றைய நிகழ்வு நிறைவேற்றியுள்ளது.

கெவாடியா சென்றடையும் ரயில்களுள் ஒன்று புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், பாரத ரத்னா விருது பெற்ற திரு எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார். திரைப்படத்துறையிலும், அரசியலிலும் அவர் படைத்த சாதனைகளை திரு மோடி பாராட்டினார். திரு எம்ஜிஆரின் அரசியல் பயணம் ஏழைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உருவாக்க அவர் அயராது உழைத்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.‌ அவரது குறிக்கோள்களைப் பூர்த்தி செய்யும் வகையில் நாம் பணியாற்றுவதாகக் கூறிய பிரதமர், அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை மாற்றியமைத்ததை நினைவு கூர்ந்தார்.

கெவாடியா முதல் சென்னை, வாரணாசி, ரேவா, தாதர் மற்றும் தில்லி இடையேயான புதிய இணைப்புகள், கெவாடியா- பிரதாப் நகர் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் சேவைகள், தபோய்- சந்தோத் அகல ரயில் பாதை, சந்தோத்- கெவாடியா புதிய அகல ரயில் பாதை ஆகியவை கெவாடியாவின் வளர்ச்சி என்னும் புதிய அத்தியாயத்திற்கு வடிவம் கொடுக்கும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இதன்மூலம் சுயவேலைவாய்ப்பும், வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படுவதால் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் பழங்குடி மக்களும் பயனடைவார்கள். நர்மதை ஆற்றங்கரையில் உள்ள நம்பிக்கையூட்டும் பகுதிகளாகக் கருதப்படும் கர்னாலி, போய்சா, கருடேஷ்வர் ஆகியவையும் இணைக்கப்படும்.

கெவாடியாவின் வளர்ச்சிப் பயணம் குறித்துத் தொடர்ந்து பேசிய பிரதமர், ஏதோ ஒரு தொலைதூர பகுதியின் சிறிய தலமாக கெவாடியா விளங்கவில்லை என்றும், உலகளவில் மிகப் பெரும் சுற்றுலாத்தலமாக அது வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறினார். சுதந்திர தேவி சிலையைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைவிட ஒற்றுமை சிலையைக் காண அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். ஒற்றுமை சிலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதிலிருந்து 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதுடன், கொரோனா பரவல் மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இணைப்புகள் மேம்படுத்தப்பட்ட பிறகு கெவாடியாவிற்கு சுமார் ஒரு லட்சம் பேர் தினமும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் பொருளாதாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சி மற்றும் சூழலியலின் சிறப்பான எடுத்துக்காட்டாக கெவாடியா விளங்குகிறது என்று பிரதமர் கூறினார்.

முதன்முதலில் கெவாடியாவை முக்கிய சுற்றுலாத்தலமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அது ஒரு கனவாகத் தோன்றியது என்று பிரதமர் தெரிவித்தார்.‌ சாலை இணைப்புகள், தெரு விளக்குகள், ரயில், சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான இடங்கள் ஆகியவை இல்லாததே இவ்வாறு எண்ணுவதற்குக் காரணமாக இருந்தன. ஆனால் தற்போது முழு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்று கெவாடியா மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒற்றுமை சிலை, சர்தார் சரோவர், பரந்த சர்தார் பட்டேல் உயிரியல் பூங்கா, ஆரோக்கிய வனம் மற்றும் வனப் பயணம், ஊட்டச்சத்து பூங்கா ஆகிய சுற்றுலாத் தலங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. மின் விளக்குகளால் ஜொலிக்கும் தோட்டம், ஒற்றுமை படகு சேவை, நீர் விளையாட்டுகள் ஆகியவையும் உள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்திருப்பதை அடுத்து, பழங்குடி இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதாகவும், உள்ளூர் மக்களுக்கு நவீன வசதிகள் கிடைப்பதாகவும் பிரதமர் கூறினார். ஒற்றுமை வணிக வளாகத்தில் உள்ளூர் கைவினைப் பொருட்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பழங்குடி கிராமங்களில் தங்குவதற்காக 200 அறைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகரிக்கும் சுற்றுலாவைக் கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்டு வரும் கெவாடியா நிலையம் குறித்தும் பிரதமர் பேசினார். அதில் அமைந்துள்ள பழங்குடி கலைக்கூடம், பார்வையிடும் கூடத்திலிருந்து ஒற்றுமை சிலையைக் காணலாம்.

இலக்கை மையமாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் இந்திய ரயில்வேயில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக மட்டுமல்லாமல், சுற்றுலா மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தலங்களையும் ரயில்வே நேரடியாக இணைப்பதாக அவர் குறிப்பிட்டார். அகமதாபாத்-கெவாடியா ஜன்சதாப்தி உள்ளிட்ட ஏராளமான ரயில்களில் வான் பகுதியைப் பார்வையிடும் வகையிலான கண்ணாடி மேற்கூரையுடன் கூடிய கண்கவர் ‘விஸ்தா – டூம் சுற்றுலா பெட்டிகள்’ இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார்.

ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். நிலுவையில் உள்ள உள்கட்டமைப்பை இயக்குவதில் மட்டுமே முன்னதாக கவனம் செலுத்தப்பட்டதாகவும், புதிய சிந்தனைகள் அல்லது புதிய தொழில்நுட்பங்களில் போதிய அக்கறை காட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியமானது. அண்மைக் காலங்களில் முழு ரயில்வே துறையிலும் விரிவான மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நிதி மற்றும் புதிய ரயில்களுக்கான அறிவிப்புகளோடு நிற்கவில்லை. ஏராளமான பிரிவுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. கெவாடியாவை இணைக்கும் திட்டத்தை உதாரணமாகக் கூறிய அவர், பலதரப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்ட இத்திட்டத்தின் பணிகள் குறுகிய நேரத்தில் நிறைவேற்றப்பட்டு சாதனை படைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

பிரத்தியேக சரக்கு போக்குவரத்து வழித்தடத்தையும் முந்தைய காலங்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையின் உதாரணமாக பிரதமர் குறிப்பிட்டார். கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய பிரத்தியேக சரக்கு போக்குவரத்து வழித்தடத்தை பிரதமர் அண்மையில் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இத்திட்டத்திற்காக 2006-2014-ஆம் ஆண்டு வரையில் ஒரு கிலோமீட்டர் தூரம் கூட சரக்கு ரயில் பாதை அமைக்கப்படவில்லை. தற்போது மொத்தம் 1100 கிலோமீட்டர் தூர பணிகள் வரும் சில நாட்களில் நிறைவடைய உள்ளன.

புதிய இணைப்புகள் குறித்து பேசிய பிரதமர், நாட்டில் இதுவரை இணைக்கப்படாத பகுதிகள் தற்போது இயக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளும், மின்மயமாக்கல் பணிகளும் வேகமாகவும், உத்வேகத்துடனும் நடைபெறுவதுடன், அதிவிரைவு ரயில்களை இயக்குவதற்கான தண்டவாளங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக ஓரளவு அதிவிரைவு ரயில்களை இயக்குவது சாத்தியமாக்கப்பட்டிருப்பதாகவும், அதிவிரைவு ரயில்களின் இயக்கத்தை நோக்கி நாம் முன்னேறுவதாகவும், இதற்காக பன்மடங்கு நிதி உயர்த்தப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ரயில்வே செயல்பட உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். பசுமைக் கட்டிட சான்றிதழுடன் நிறுவப்படும் நாட்டின் முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை கெவாடியா நிலையம் பெற்றுள்ளது.

ரயில்வே தொடர்பான தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் தற்சார்பு அடைவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்த முயற்சியில் நல்ல பலன் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் அதிக குதிரை திறன் கொண்ட மின்சார இன்ஜின்களின் வாயிலாக உலகின் முதல் இரட்டை அடுக்கு கண்டெய்னர் ரயில்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன ரயில்கள் தற்போது இந்திய ரயில்வேயில் இயக்கப்படுவதாக பிரதமர் கூறினார்.

ரயில்வேயில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் திறமைவாய்ந்த, சிறந்த மனித ஆற்றலும், தொழில் வல்லுனர்களும் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இந்த தேவைதான் வதோதராவில் நிகர்நிலை ரயில்வே பல்கலைக்கழகத்தை உருவாக்க உந்துசக்தியாக இருந்தது. இதுபோன்ற பிரத்யேக நிறுவனங்கள் அமைந்துள்ள ஒரு சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. ரயில் போக்குவரத்து, பல்முனை ஆராய்ச்சி, பயிற்சி ஆகிய துறைகளில் நவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய மற்றும் எதிர்கால ரயில்வே துறையை சரியான பாதையில் செலுத்துவதற்காக 20 மாநிலங்களைச் சேர்ந்த திறமையான இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. புதுமை, ஆராய்ச்சி வாயிலாக ரயில்வே துறையை நவீன மயமாக்க இது உதவிகரமாக இருக்கும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage