பிரதமர் திரு. நரேந்திர மோடி தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் முக்கிய திட்டங்களுக்கு இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டி, 2 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் சென்னை மணலியில் சி.பி.சி.எல். (சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) வளாகத்தில் கேசோலினில் இருந்து கந்தகத்தை நீக்கும் வளாகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
நாகப்பட்டினத்தில் அமையும் காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். தமிழக ஆளுநர், முதல்வர், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
2019-20 ஆம் ஆண்டில் தனது தேவையில் 85 சதவீத கச்சா எண்ணெய், 52 சதவீத இயற்கை எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்யும் நிலையில் இருப்பதாக பிரதமர் கூறினார். பன்முகத் திறமை கொண்டுள்ள நம்மைப் போன்ற ஒரு நாடு, எரிசக்தி தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருப்பது சரிதானா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதுபோன்ற திட்டங்களில் இன்னும் முன்னதாகவே நாம் கவனம் செலுத்தி இருந்தால், நமது நடுத்தரக் குடும்பத்து மக்கள் சிரமப்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று அவர் தெரிவித்தார். இப்போது சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத, பசுமை வழி ஆதாரங்களின் அடிப்படையிலான எரிசக்தி திட்டங்களை உருவாக்கி, எரிசக்திக்காக பிற நாடுகளை நம்பி இருக்கும் நிலையை குறைக்க வேண்டியது நமது கூட்டுக் கடமையாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.
``எங்கள் அரசாங்கம் நடுத்தர மக்களின் கவலைகள் குறித்து அக்கறை கொண்டிருக்கிறது'' என்று அவர் வலியுறுத்தி கூறினார்.
இந்த இலக்கை எட்டுவதற்கு, விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு உதவும் வகையில் எத்தனால் பயன்பாட்டில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். சூரியசக்தி மின் உற்பத்தித் துறையில் முதன்மை நிலையை எட்டும் வகையில், சூரிய மின்சாரத்தை பயன்படுத்துவதை அதிகரிக்கும் வழிமுறைகளில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்து வசதிகள் ஊக்குவிக்கப்படுகின்றன, எல்.இ.டி. பல்புகள் பயன்படுத்துதல் போன்ற மாற்று திட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன, இவற்றால் நடுத்தர மக்களுக்கு சேமிப்புகள் கிடைக்கின்றன என்று அவர் கூறினார்.
அதிகரித்து வரும் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, இறக்குமதி ஆதாரங்களை பன்முகப்படுத்த வேண்டியதும் முக்கியம் என்று பிரதமர் தெரிவித்தார். இதற்கான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப் படுகின்றன. 2019-20 ஆம் ஆண்டில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதில் உலக அளவில் நான்காவது இடத்தில் இந்தியா இருந்தது.
65.2 மில்லியன் டன் அளவுக்கு பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.
27 வெளிநாடுகளில் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவற்றின் மூலம் சுமார் ரூ.2.70 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப் பட்டிருப்பதாக பிரதமர் கூறினார்.
`ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பு' திட்டம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், ``ஐந்தாண்டு காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடி செலவிட திட்டமிடப் பட்டுள்ளது. நகர எரிவாயு இணைப்பு நெட்வொர்க்கில் 407 மாவட்டங்களை சேர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது'' என்று தெரிவித்தார்.
நுகர்வோரை மையமாகக் கொண்ட பாஹல், பிரதமரின் உஜ்வாலா யோஜ்னா போன்ற திட்டங்களால், இந்தியாவின் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றன என்றும், தமிழகத்தில் 95 சதவீத எல்.பி.ஜி. வாடிக்கையாளர்கள் பாஹல் திட்டத்தில் இணைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மானியத் தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறுகின்றனர். உஜ்வாலா யோஜ்னா மூலமாக, தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் 32 லட்சம் குடும்பங்களுக்கு புதிய இணைப்புகள் தரப்பட்டுள்ளன. பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா மூலம் 31.6 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக மாற்று எரிவாயு உருளைகள் வழங்கப் பட்டுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரையில் 143 கிலோ மீட்டர் நீளத்துக்கான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் இன்று தொடங்கப்படுவதால், ஓ.என்.ஜி.சி. எரிவாயு உற்பத்தி வளாகங்களில் கிடைக்கும் எரிவாயுவுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார். ரூ.4,500 கோடி செலவில் நிறைவேற்றப்படும் பெரியதொரு இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இத் திட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம் எண்ணூர், திருவள்ளூர், பெங்களூரு, புதுவை, நாகப்பட்டினம், மதுரை, தூத்துக்குடி பகுதிகள் பயன் பெறும்.
நகர எரிவாயு திட்டங்களை செயல்படுத்தவும், இந்த எரிவாயுக் குழாய் திட்டம் உதவிகரமாக இருக்கும். தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ.5,000 கோடி செலவில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஓ.என்.ஜி.சி. எரிவாயு உற்பத்தி வளாகத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் வளாகத்துக்கு நேரடியாக எரிவாயு வழங்கப்படும். உரம் தயாரிப்பதற்காக, குறைந்த விலையில் ஸ்பிக் நிறுவனத்துக்கு இதன் மூலம் எரிவாயு கிடைக்கும். சேமிப்புக் கிடங்கு வசதி எதுவும் இல்லாமல், தொடர்ச்சியாக கச்சா பொருளாக இந்த எரிவாயு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் வருடம் தோறும் உற்பத்திச் செலவில் ரூ.70 கோடி முதல் ரூ.95 கோடி வரையில் மிச்சமாகும். இதனால் உரத்தின் உற்பத்தி விலை குறையும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவின் எரிசக்தி தேவையில் எரிவாயு மூலம் 6.5 சதவீதம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதை 15 சதவீதமாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.
உள்ளூர் பகுதிகளுக்கு கிடைக்கும் பயன்களைப் பட்டியலிட்ட பிரதமர், நாகப்பட்டினத்தில் அமையும் சி.பி.சி.எல்.-ன் புதிய சுத்திகரிப்பு வளாகத்தில் சுமார் 80 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது, பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் அதைச் சார்ந்த சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க இது உதவும்.
புதுப்பிக்கத்தக்க ஆதார வளங்களைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதை அதிகரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் தருவது பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். 2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் எரிசக்தி தேவைகளில் 40 சதவீதம் அளவுக்கு, பசுமை வழி ஆதாரங்களில் இருந்து தயாரிக்கும் எரிசக்தியாக இருக்கும் என்று தெரிவித்தார். மணலியில் கேசோலினில் இருந்து கந்தகத்தைப் பிரிப்பதற்கு சிபிசிஎல் அமைத்துள்ள வளாகம், பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான மற்றொரு முயற்சியாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் ரூ.50 ஆயிரம் கோடி அளவிற்கான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில், 2014க்கு முன் ஒப்புதல் அளிக்கப்பட்டவற்றில், ரூ.9100 கோடி அளவிற்கான திட்டங்கள் முடிக்கப் பட்டுள்ளன. மேலும், ரூ.4,300 கோடி அளவிலான திட்டங்கள் வரவுள்ளன. நமது உறுதியான கொள்கைகள் மற்றும் இந்தியாவின் நீடித்த வளர்ச்சிக்கான முன் முயற்சிகள் என்ற கூட்டு முயற்சியால், தமிழகத்திற்கு இந்த அனைத்துத் திட்டங்களும் கிடைத்துள்ளன என்று திரு. மோடி கூறினார்.