வங்காளதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 திட்டங்களை, பிரதமர் திரு. நரேந்திர மோடி, வங்காளதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி மற்றும் திரிபுரா முதலமைச்சர் திரு. பிப்லப் குமார் தேவ் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கூட்டாக தொடங்கிவைத்தனர்.
புதுதில்லியிலிருந்து வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜூம், டாக்காவிலிருந்து வங்காளதேச வெளியுறவு அமைச்சரும், காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்த திட்டங்கள் வருமாறு:
(அ) தற்போது பெரமாரா (வங்காளதேசம்) – பகராம்பூர் (இந்தியா) இடையேயுள்ள மின்தொடர் முறை மூலம் இந்தியாவிலிருந்து வங்காளதேசத்திற்கு கூடுதலாக 500 மெகாவாட் மின்சார விநியோகம் செய்வது,
(ஆ) அக்காரா – அகர்தலா இடையிலான ரயில்பாதை,
(இ) வங்காளதேச ரயில்வேயின் குலாரா – ஷாபாஸ்பூர் ரயில் பாதை.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, வங்காளதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவை, காத்மாண்டுவில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாடு, சாந்திநிகேதன் மற்றும் லண்டன் காமன்வெல்த் மாநாடு உட்பட அண்மைக் காலத்தில் பலமுறை சந்தித்ததை நினைவு கூர்ந்தார்.
அண்டை நாடுகளின் தலைவர்கள், அண்டை வீடுகளில் வசிப்பவர்களைப் போல பேசிப் பழகுவதுடன், மரபுகளை பெரிதுபடுத்தாமல், அடிக்கடி வந்து செல்ல வேண்டும் என்ற நமது கருத்தை திரு. நரேந்திர மோடி வலியுறுத்தினார். தாமும், வங்காளதேச பிரதமரும் அடிக்கடி மேற்கொண்ட சந்திப்புகளே இதுபோன்ற நெருக்கத்திற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1965 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போன்ற தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்ற வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தொலைநோக்கு எண்ணத்தையும் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். இந்த இலக்கை எட்டுவதில் கடந்த சில ஆண்டுகளாக நிலையான முன்னேற்றம் ஏற்பட்டு வருவது குறித்தும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். தற்போது, இருநாடுகள் இடையேயான மின்சாரத் தொடர்பு அதிகரித்திருப்பதுடன், ரயில் போக்குவரத்தை மேம்படுத்தவும் இரண்டு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 2015 ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், மேற்குவங்கம் மற்றும் வங்காளதேச இடையிலான மின் பகிர்மான திட்டத்திற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகவும், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற உதவியதற்காக மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம், தற்போது இந்தியாவிலிருந்து வங்காளதேசத்திற்கு 1.16 கிகாவாட் மின்சாரம் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மெகாவாட் அளவிலிருந்து கிகாவாட் அளவிற்கு மின்சார விநியோகம் அதிகரித்திருப்பது, இந்தியா-வங்காளதேச இடையிலான நட்புறவில் ஒரு பொற்காலம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அக்காரா – அகர்தலா இடையிலான ரயில்பாதை, இருநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதாக அமையும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற உதவியதற்காக திரிபுரா முதலமைச்சர் திரு. பிப்லப் குமார் தேவிற்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
2021 ஆம் ஆண்டிற்குள் வங்காளதேசத்தை நடுத்தர வருவாய் உடைய நாடாகவும், 2041-க்குள் வளர்ந்த நாடாகவும் மாற்றுவது என்ற இலக்கை நோக்கி செயல்படும் அந்நாட்டு பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவையும் பிரதமர் திரு. மோடி பாராட்டினார். இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவும், மக்களுக்கு இடையேயான நேரடி தொடர்புகளும், வளர்ச்சி மற்றும் வளமையை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.