தில்லி கரியப்பா மைதானத்தில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படை (என்சிசி) பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு படைகளின் தலைவர், முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் என்சிசி மாணவர் பிரிவுகளின் அணிவகுப்பையும், கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சமுதாய வாழ்வில் வலுவான ஒழுக்கத்தைக் கொண்டிருக்கும் நாடுகள், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் என்றார். இந்திய சமுதாய வாழ்வில் ஒழுக்க உணர்வை ஊக்குவிப்பதில் என்சிசிக்கு பெரும் பங்கு உள்ளது என அவர் கூறினார். பெரும் சீருடை இளைஞர் அமைப்பான என்சிசி நாளுக்கு நாள் பெருமையைப் பெற்று வருவதாக பிரதமர் கூறினார். எங்கெல்லாம் இந்தியப் பாரம்பரியம் மிக்க துணிச்சலான சேவைகள் தேவையோ, அரசியல் சாசனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமோ, அங்கெல்லாம் என்சிசி மாணவர்கள் இருப்பார்கள். இதேபோல, சுற்றுச்சூழல், தண்ணீர் சேமிப்பை உள்ளடக்கிய எந்த திட்டமாக இருந்தாலும் அங்கு என்சிசியின் பங்கு இருக்கும். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் என்சிசி மாணவர்களின் பங்கை பிரதமர் பாராட்டினார்.
நமது அரசியல் சாசனத்தில் வகுக்கப்பட்டுள்ள கடமைகளைப் பூர்த்தி செய்வது அனைத்து மக்களுக்கும் பொருந்தும் என பிரதமர் தெரிவித்தார். எப்போதெல்லாம், இதை மக்களும், சிவில் சமுதாயமும் பின்பற்றுகின்றனவோ, அப்போது, ஏராளமான சவால்களை வெற்றியுடன் சமாளிக்கிறோம். நம் நாட்டின் பல பகுதிகளைப் பாதித்து வந்த நக்சலிசம், மாவோயிசத்தின் முதுகை ஒடிக்க மக்களின் இத்தகைய கடமை உணர்ச்சியும், பாதுகாப்பு படையினரின் துணிச்சலும் காரணமாக இருந்தன என திரு மோடி தெரிவித்தார். தற்போது, நக்சலிசம் என்னும் தீமை நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுருங்கி விட்டது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வன்முறை பாதையைக் கைவிட்டு, வளர்ச்சி என்னும் பொது நீரோட்டத்தில் கலந்துள்ளனர்.
கொரோனா காலம் மிகவும் சவாலானது என்று கூறிய பிரதமர், நாட்டுக்காக உழைக்கும் அசாதாரண வாய்ப்புகளை அது கொண்டு வந்தது என்றார். இதனால், நாட்டின் திறமைகளை மேம்படுத்தவும், தற்சார்பு இந்தியாவாக அதை மாற்றவும், சாதாரண நிலையிலிருந்து சிறந்த நிலைக்கு செல்லவும் முடிந்துள்ளது. இதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என பிரதமர் தெரிவித்தார்.
எல்லைப் பகுதிகள், கடலோரப் பகுதிகளில் என்சிசியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், 175 மாவட்டங்களில் என்சிசிக்கு புதிய கடமை உள்ளதாக ஆகஸ்ட் 15-ல் தாம் அறிவித்ததை நினைவு கூர்ந்தார். இதற்காக, ராணுவம், விமானப்படை, கடற்படையினரால், சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள். என்சிசிக்கான பயிற்சி கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சி இடம் இருந்த நிலை மாறி, தற்போது, 98 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறு விமான பயன்பாட்டு இடங்கள் ஐந்தில் இருந்து 44 ஆக அதிகரித்துள்ளன. இதேபோல, துடுப்பு இடங்களும் 11-ல் இருந்து 60 ஆக அதிகரித்துள்ளன.
பீல்டு மார்ஷல் கரியப்பாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். இந்த இடம் அவரது பெயரால் வழங்குவதை அவர் சுட்டிக்காட்டினார். ஆயுதப் படைகளில், மாணவிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருவதாக அவர் கூறினார். அண்மைக் காலங்களில், என்சிசியில் மாணவிகளின் எண்ணிக்கை 35 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது மனநிறைவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். 1971-ல் பங்களாதேஷ் போரில் வெற்றி பெற்றதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், ஆயுதப் படையினருக்கு அவர் மரியாதை செலுத்தினார். தேசிய போர் நினைவு சின்னத்துக்கு மாணவர்கள் சென்று பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், மாற்றியமைக்கப்பட்டுள்ள வீர, தீரச் செயல்கள் விருது இணைய தளத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தினார். என்சிசி டிஜிடல் தளம், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் தளமாக விரைவாக உருவெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆண்டுகளைக் குறிக்கும் தினங்களைப் பற்றி பேசிய பிரதமர், இந்த ஆண்டு இந்தியா, சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் நுழைகிறது என்றார். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டதை சுட்டிக்காட்டினார். நேதாஜியை பெருமைமிகு எடுத்துக்காட்டின் அடையாளமாக மாணவர்கள் கருத வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சுதந்திரமடைந்து 100 ஆண்டுகளை இந்தியா நிறைவு செய்யும் அடுத்த 25-26 ஆண்டுகள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தொற்றுக்கு எதிரான சவால்களையும், நாட்டின் பாதுகாப்பில் ஏற்பட்ட சவால்களையும் இந்தியா திறமையுடன் எதிர் கொண்டதை பிரதமர் விளக்கினார். உலகின் மிகச்சிறந்த போர் எந்திரத்தை நாடு கொண்டிருப்பதாக அவர் கூறினார். ஐக்கிய அரபு குடியரசு, சவூதி அரேபியா, கிரீஸ் ஆகிய நாடுகளின் உதவியால் ரபேல் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரப்பியதை அவர் குறிப்பிட்டார். வளைகுடா நாடுகளுடனான உறவு வலுப்பட்டுள்ளதை இது பிரதிபலிக்கிறது என அவர் கூறினார். அதேபோல, பாதுகாப்பு தொடர்பான 100-க்கும் மேற்பட்ட உபகரணங்களை தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதுவும், 80 தேஜாஸ் விமானங்களுக்கான விமானப்படை ஆர்டரும், செயற்கை நுண்ணறிவு தொடர்பான போர் தளவாடங்கள் குறித்த கவனத்தை அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் பாதுகாப்பு தளவாட சந்தை என்ற நிலையிலிருந்து மாறி, பெரிய உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுப்பதை உறுதி செய்யும் .
உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கமளியுங்கள் என மாணவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். கதர் ஆடையை நவநாகரிக உடையாக இளைஞர்கள் மாற்ற வேண்டும் என்று கூறிய அவர், திருமணங்கள், திருவிழாக்கள், இதர விழாக்களில் இதனை அணிய வேண்டும் என கேட்டுக் கொண்டார். தன்னம்பிக்கையுள்ள இளைஞர்களே தற்சார்பு இந்தியாவுக்கு தேவை என அவர் கூறினார். இதற்காக, உடற்தகுதி, கல்வி, திறமை ஆகியவற்றில் மாணவர்கள் சிறந்து விளங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், நவீன கல்வி நிறுவனங்கள், திறன் இந்தியா, முத்ரா திட்டங்கள் ஆகியவற்றில் இதற்கான புதிய உத்வேகத்தைக் காண முடிகிறது. கட்டுடல் இந்தியா, கேலோ இந்தியா இயக்கங்கள் மூலம், உடற்தகுதி, விளையாட்டுக்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். இவற்றில் என்சிசி சிறப்பு திட்டங்களும் அடங்கும். புதிய தேசிய கல்வி கொள்கை முற்றிலும் மாணவர்களை மையப்படுத்தியதாக உள்ளது எனத் தெரிவித்த பிரதமர், மாணவர்கள், தங்கள் ஆர்வத்துக்கும், தேவைக்கும் ஏற்ற பாடங்களை தேர்வு செய்து கொள்ள அதில் வகை செய்யப்பட்டுள்ளது என்றார். சீர்திருத்தங்கள் மூலம் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டால், நாடு முன்னேறும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.