அசாம் மாநிலம் சிவசாகரில் நிலமற்ற உள்ளூர் மக்களுக்கு நில ஒதுக்கீட்டு சான்றிதழ்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்கினார். அசாம் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மத்திய அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அசாம் மாநிலத்தின் சொந்த குடும்பங்கள் நில உரிமையைப் பெற்றுள்ளன. இதன் மூலம், சிவசாகர் மக்களின் மிகப் பெரிய கவலை நீங்கியுள்ளது என்று கூறினார். இந்த நிகழ்ச்சி, சுயமரியாதை, சுதந்திரம், அசாம் சொந்த மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுடன் தொடர்புள்ளதாகும் என அவர் தெரிவித்தார். நாட்டுக்காக தியாகம் புரிந்ததற்காக சிவசாகர் பெரிதும் போற்றப்படுவதன் முக்கியத்துவம் பற்றி அவர் குறிப்பிட்டார். அசாம் மாநில வரலாற்றில் சிவசாகரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நாட்டின் 5 பெரிய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாக சிவசாகரை சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் கூறினார்.
நேதாஜியின் 125-வது பிறந்த நாளில் நாடு அவரை நினைவு கூருகிறது என்று கூறிய பிரதமர், அவரது பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படுகிறது என்றார். புதிய இந்தியாவைக் கட்டமைப்பதற்கான உத்வேகத்தை நாடு முழுவதும் பராக்கிரம தினமாகக் கொண்டாடும் வகையில், இன்று ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேதாஜியின் துணிச்சலும், தியாகமும் இன்னும் நம்மை ஊக்கப்படுத்துவதாக அவர் கூறினார். பாரத ரத்னா புபேன் ஹசாரிகாவின், அன்னை பூமியே, உனது காலடியில் எனக்கு ஒரு இடம் கொடு. நீயின்றி உழவன் என்ன செய்வான்? நிலமின்றி அவன் நிர்க்கதியாவான் என்ற வரிகளை மேற்கோள் காட்டிய பிரதமர், நிலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும், அசாமில் லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்க நிலமின்றி தவித்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். சோனோவால் அரசு பதவியேற்ற போது, 6 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடியின மக்களுக்கு தங்கள் நிலத்தை உரிமை கொண்டாடுவதற்கான ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. சோனோவால் அரசின் புதிய நிலக் கொள்கையையும், அசாம் மக்கள் மீதான அதன் அர்ப்பணிப்பு உணர்வையும் அவர் பாராட்டினார். நிலக் குத்தகையின் காரணமாக, உண்மையான அசாம்வாசிகளின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியுள்ளது என அவர் கூறினார். லட்சக்கணக்கான மக்களின் சிறப்பான வாழ்க்கைத் தரத்துக்கு இது வழி ஏற்படுத்தியுள்ளது. நில உரிமை தற்போது கிடைத்துள்ளதால், பிரதமர் கிசான் சம்மான் நிதி, கிசான் கடன் அட்டை, பயிர்க் காப்பீட்டு போன்ற இதுவரை கிடைக்காத பல்வேறு திட்டங்களின் பயன்கள் நில உரிமையாளர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல், அவர்கள் வங்கிகளில் இருந்து கடன்களைப் பெறவும் முடியும்.
அசாம் பழங்குடியினரின் சமூகப் பாதுகாப்பு, அதிவேக மேம்பாடு ஆகியவை அரசின் உறுதிப்பாடாக உள்ளது என பிரதமர் கூறினார். அசாமி மொழி மற்றும் இலக்கியத்தை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது போல, ஒவ்வொரு சமுதாயத்தையும் சேர்ந்த பெரும் ஆளுமைகள் கவுரவிக்கப்பட்டுள்ளனர். கடந்த நான்கரை ஆண்டுகளில், மத மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று அம்சங்களைப் பாதுகாக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி, காசிரங்கா தேசியப் பூங்காவை மேம்படுத்த வேகமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க, வடகிழக்கு பகுதி மற்றும் அசாமின் அதிவேக வளர்ச்சி அவசியம் என பிரதமர் குறிப்பிட்டார். அசாமின் தன்னிறைவுப் பாதை அம்மாநில மக்களின் நம்பிக்கையின் மூலமாகப் பயணிக்கிறது. அடிப்படை வசதிகளும், உள்கட்டமைப்பும் சிறப்பாக இருந்தால்தான், நம்பிக்கை வளரும். பல ஆண்டுகளாக, இந்த இரு விஷயங்களிலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அசாமில் 1.75 கோடி ஏழை மக்கள் ஜன்தன் வங்கி கணக்குகளை துவங்கியுள்ளனர். இந்த வங்கி கணக்குகளின் காரணமாக, கொரோனா காலத்திலும், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் சென்றடைந்துள்ளது. அசாமில், 40 சதவீதம் மக்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில், 1.5 லட்சம் பேர் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். கழிவறை வசதி 38 சதவீதத்திலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளில் 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 50 சதவீதம் குடும்பங்களுக்கு மட்டும் மின்சார வசதி இருந்தது. இப்போது கிட்டத்தட்ட 100 சதவீதம் அளவுக்கு மின்சார இணைப்பு கிடைத்துள்ளது. அசாமில், ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 2.5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதிகள் அனைத்தும் பெண்களுக்கு அதிக அளவில் பயன்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். உஜ்வாலா திட்டம் 35 லட்சம் குடும்ப சமையலறைகளில் சமையல் எரிவாயு இணைப்பைக் கொண்டு வந்துள்ளது. அதில் 4 லட்சம் பேர் எஸ்சி, எஸ்டி பிரிவினராவர். 2014-ல் 40 சதவீதமாக இருந்த எல்பிஜி வாயு இணைப்பு தற்போது 99 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2014-ல் 330 ஆக இருந்த எல்பிஜி விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான இலவச உருளைகள் விநியோகிக்கப்பட்டன. உஜ்வாலா திட்டம் இப்பகுதியின் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. புதிய விநியோக மையங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் என்னும் அரசின் தாரக மந்திரத்தைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், வளர்ச்சியின் பயன்களை அனைத்து பிரிவினருக்கும் அரசு கொண்டு செல்கிறது என்றார். புறக்கணிப்பின் காரணமாக நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்த சாய் பழங்குடியினரின் தரத்தை உயர்த்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பழங்குடியினரின் வீடுகளுக்கு கழிவறை வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு கல்வி, சுகாதார வசதிகள், வேலை வாய்ப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. அந்தப் பழங்குடியினருக்கு வங்கி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு திட்டங்களின் பயன்கள் நேரடியாகக் கிடைக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் தலைவர் சந்தோஷ் தோப்னா போன்ற தலைவர்களின் சிலைகளை நிறுவுவதன் மூலம், பழங்குடியினரின் பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது என பிரதமர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு பழங்குடியின பிரிவையும் அரவணைத்துச் செல்லும் கொள்கை காரணமாக, அசாமின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் அமைதி நிலவி முன்னேற்றப் பாதையில் நடை போடுவதாக பிரதமர் தெரிவித்தார். வரலாற்று சிறப்பு மிக்க போடோ ஒப்பந்தம் மூலம், அசாமின் பெரும் பகுதி இப்போது அமைதியும், வளர்ச்சியும் கொண்ட பாதைக்கு திரும்பியுள்ளது. ஒப்பந்தம் காரணமாக நடைபெற்ற சமீபத்திய போடோலாந்து கவுன்சில் தேர்தல்கள், புதிய வளர்ச்சிக்கான உதாரணமாக திகழும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்கம், தகவல் தொடர்பு, இதர உள்கட்டமைப்பு வசதிகளுக்கான பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் பட்டியலிட்டார். அசாமும், வடகிழக்கு பகுதியும், கிழக்காசிய நாடுகளுடன் இந்தியாவின் சாலை இணைப்பு அதிகரிக்க கருவியாக செயல்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு முன்னேற்றம் காரணமாக அசாம் தற்சார்பு இந்தியாவின் பெரிய மையமாக உருவெடுத்து வருகிறது. அசாம் கிராமங்களில் 11 ஆயிரம் கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டதை பிரதமர் விளக்கினார். டாக்டர் புபேன் ஹசாரிகா பாலம், போகிபீல் பாலம், சாரைக்காட் பாலம் போன்றவற்றில் சில கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் இதர பாலங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை அசாமின் சாலை இணைப்பை வலுப்படுத்தியுள்ளன. பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியான்மர் ஆகிய நாடுகளுடன், நீர்வழி இணைப்பும் கூடுதலாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. ரயில் மற்றும் விமான தொடர்புகள் அசாமில் தொழில் சூழலை சிறப்பாக்கி, வேலை வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும். லோக்பிரியா கோபிநாத் போர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய நவீன முனையம், சுங்க அனுமதி மையம் , கொக்ரஜார் ரூப்சி விமானநிலைய நவீனமயமாக்கம், பொங்காய்கான் பல்முனை போக்குவரத்து மையம் ஆகியவை அசாமில் தொழில் வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும்.
நாட்டில் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்வதில், அசாம் முக்கிய பெரும் பங்காற்றி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். அசாமில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவழிக்கப்பட்டுள்ளது. குவகாத்தி-பாராஉனி எரிவாயு குழாய் திட்டம் வடகிழக்குக்கும், இந்தியாவின் கிழக்கு பகுதிக்கும் இடையே தொடர்பை வலுப்படுத்தும். நுமலிகார் சுத்திகரிப்பு நிலையம், உயிரி சுத்திகரிப்பு வசதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது, அசாமை எத்தனால் போன்ற உயிரி எரிபொருள் உற்பத்தியில் பெரும் மையமாக உயர்த்தும். எய்ம்ஸ் மருத்துவமனை, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது இளைஞர்களுக்கு புதிய வழிகளை உருவாக்கி, இப்பகுதியை சுகாதாரம் மற்றும் கல்வியில் பெரும் மையமாக மாற்றும் எனக்கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.