கார்கில் வெற்றி தினத்தைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று (27.07.2019) நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இன்றைய தினத்தை ஒவ்வொரு இந்தியரும் நினைவுகூறுவதாக தமது உரையில் குறிப்பிட்ட பிரதமர், இன்றைய தினம் தீர சகாப்தம் மற்றும் தேச அர்ப்பணிப்புக்கு உந்து சக்தியாகவும் உள்ளது என்றார். கார்கில் எல்லையைக் காக்க தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையை நிறைவு செய்த ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். 20 ஆண்டுகளுக்கு முன் கார்கில் மலைச்சிகரத்தில் பெற்ற வெற்றி, பல தலைமுறைகளுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கார்கில் வெற்றி, இந்தியாவின் தவப்புதல்வர்கள் மற்றும் தவப்புதல்விகளின் வீரம், இந்தியாவின் உறுதிப்பாடு, திறமை மற்றும் மனவலிமைக்கு கிடைத்த வெற்றி என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி இது என்றும் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு இந்தியரின் நம்பிக்கை மற்றும் கடமை உணர்வுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார்.
2014 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற ஒருசில மாதங்களில் கார்கில் பகுதிக்கு தாம் சென்று வந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். 20 ஆண்டுகளுக்கு முன், கார்கில் போர் உச்சத்தில் இருந்த போது, தாம் அப்பகுதிக்கு சென்று வந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். கார்கில் போரில் இந்திய வீரர்கள் துணிச்சலுடன் போரிட்டதை சுட்டிக்காட்டிய அவர், அப்போது ஒட்டுமொத்த நாடே நமது வீரர்களின் பக்கம் இருந்ததாகவும் குறிப்பிட்டார். இளைஞர்கள் ரத்த தானம் செய்ததோடு, குழந்தைகளும் கூட தங்களிடம் இருந்த சேமிப்பு பணத்தை ராணுவ வீரர்களுக்காக நன்கொடையாக வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
நமது வீரர்களை அவர்களது வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்ளத் தவறினால், நமது தாய்நாட்டிற்காக நாம் ஆற்ற வேண்டிய கடமையை செய்யத் தவறியதாகிவிடும் என்று அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் குறிப்பிட்டதை பிரதமர் நினைவுகூர்ந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முக்கிய முடிவுகள் தமக்கு மனநிறைவு அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த வகையில், ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம்; உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கான கல்வி உதவித் தொகை உயர்வு மற்றும் தேசிய போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
காஷ்மீரில் பாகிஸ்தான் அடிக்கடி வஞ்சகச் செயல்களில் ஈடுபட்டு வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதுபோன்ற செயல்கள் வெற்றி அடைய நாம் அனுமதிப்பதில்லை என்றார். பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் உறுதிப்பாட்டை நினைவுகூர்ந்த பிரதமர், இதற்கு பாகிஸ்தானால் எந்த பதிலும் அளிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
வாஜ்பாய் ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிகள், உலகெங்கிலும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பெரும் புரிதலை ஏற்படுத்த உதவியதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியா எந்த நாட்டின் மீதும் படையெடுத்ததாக வரலாறு இல்லை என்றும் பிரதமர் கூறினார். இந்திய ராணுவப் படைகள், உலகெங்கிலும் மனிதநேயம் மற்றும் அமைதியைக் காப்பவர்களாக திகழ்கின்றனர் என்றும் தெரிவித்தார். இஸ்ரேலில் உள்ள ஹைஃபா பகுதி இந்தியப் படையினரால் விடுவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், முதலாம் உலகப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவாக பிரான்ஸ் நாட்டில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். உலகப் போர்களின் போதும், ஐநா அமைதி காப்பு பணியிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்திருப்பதாகக் கூறிய அவர், இந்திய வீர்ர்கள் தான் மிக அதிக அளவில் உயிர்த்தியாகம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இயற்கைச் சீற்றங்களின் போது ராணுவப்படையினர் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தீவிரவாதமும், மறைமுக யுத்தமும் தற்போது ஒட்டுமொத்த உலகிற்கே அச்சுறுத்தலாக உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். போரில் தோற்றவர்கள் மறைமுக யுத்தத்தில் ஈடுபடுவதோடு, தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள தற்போது தீவிரவாதத்திற்கு உதவி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, மனிதநேயத்தில் நம்பிக்கையுடைய அனைவரும், ராணுவத்தினருக்கு உறுதுணையாக செயல்பட வேண்டியதே தற்போதைய தேவை என்றும் அவர் கூறினார். தீவிரவாதத்தை வலிமையாக ஒடுக்க இந்த ஆதரவு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மோதல்கள், விண்வெளி மற்றும் இணையதள உலகையும் எட்டிவிட்டதாகவும் பிரதமர் கூறினார். எனவே, ராணுவப் படைகளை நவீனமயமாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். தேசப் பாதுகாப்பு என்று வரும்போது, இந்தியா எத்தகைய நெருக்கடி மற்றும் யாருடைய விருப்பத்திற்கும் அடிபணியாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். அந்த வகையில் அணு ஆயுதங்களுடன் கூடிய நீர்மூழ்கி கப்பலான அரிஹந்த் மற்றும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையான ஏ-சாட் சோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நமது ராணுவப் படைகள் வேகமாக நவீனப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்தின்கீழ், தனியார் பங்களிப்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். நமது முப்படைகளும் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். எல்லைப்புற பகுதிகள் மேம்பாடு மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார்.
நிறைவாக, 1947 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த நாடும் விடுதலை பெற்று, 1950 ஆம் ஆண்டு அரசியல் சாசனம் வகுக்கப்பட்ட பிறகு, கார்கில் பனிச்சிகரத்தில்தான், தீரமிக்க வீரர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை ஈந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாத வகையில், அவர்களது உயிர்த்தியாகம் நமக்கு உந்துதலாக அமைந்து, அவர்கள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க கூட்டாக உறுதி ஏற்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.