நாட்டில் உள்ள 10 கோடியே 70 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ஆரோக்கியத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத்திற்கு புதிய செல்பேசி செயலியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
புதுதில்லியில் இன்று ஆரோக்கிய விழிப்புணர்வுக்கான நிறைவு நிகழ்ச்சிக்குப் பிரதமர் தலைமை தாங்கினார்.
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் – மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
கடந்த ஓராண்டாக இந்தத் திட்டத்தின் பயணத்தை விளக்குகின்ற கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.
‘ஆயுஷ்மான் பாரத் மாபெரும் சவாலுக்கான புதிய தொழில்’ முயற்சி என்பதையும் தொடங்கி வைத்த அவர், நினைவு அஞ்சல் தலையையும் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “ஆயுஷ்மான் பாரத்தின் முதலாவது ஆண்டு தீர்மானகரமானதும், அர்ப்பணிப்புடையதும், பரஸ்பர புரிதல் உடையதுமாக இருக்கிறது, நமது மனஉறுதியின் காரணமாக இந்தியாவில் உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்றார்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு ஏழைக்கும் மருத்துவ வசதிகள் எளிதாகக் கிடைக்க வேண்டும் எனறு அவர் கூறினார்.
இந்த வெற்றிக்குப் பின்னால், அர்ப்பணிப்பு உணர்வு இருப்பதாக தெரிவித்த அவர், இந்த அர்ப்பணிப்பு நாட்டின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு உரியதாகும் என்றார்.
நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஏழை மக்கள் நோயிலிருந்து குணமடைய முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது இதன் மகத்தான சாதனை என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஓராண்டில் மருத்துவ சிகிச்சைக்காக எந்தவொரு நபரின் நிலம், வீடு, நகை அல்லது பிற பொருட்கள் அடகு வைக்கப்படாமல், விற்கப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, இதுதான் ஆயுஷ்மான் பாரத்தின் மிகப்பெரிய வெற்றி என்றார்.
கடந்த ஓராண்டில் 50,000-க்கும் அதிகமான ஏழை மக்கள் பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ், வெளிமாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற முடிந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
இது சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது என்பதற்காக மட்டுமின்றி, நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் பலத்தின் அடையாளமாக இருப்பதற்காகவும், ஆயுஷ்மான் பாரத் புதிய இந்தியாவின் புரட்சிகர நடவடிக்கைகளில் ஒன்று என்று பிரதமர் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கூட்டான தீர்வு என்பதைப்போலவே ஆரோக்கியமான இந்தியாவுக்கும் ஒட்டுமொத்தத் தீர்வு என்று அவர் கூறினார்.
இந்தியாவின் பிரச்சினைகள் மற்றும் சவால்களைக் கையாள்வதற்கு துண்டு துண்டான சிந்தனைகளுக்கு பதிலாக அரசின் முழு மொத்த சிந்தனைக்கான பணியின் தொடர்ச்சியாகவும் இது இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதை ஆயுஷ்மான் பாரத் உறுதி செய்கிறது.
ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இரண்டு நாள் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்வுக்கு தேசிய சுகாதார ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் முக்கியமான பங்களிப்பாளர்கள் அனைவரும் சந்திப்பதற்கு ஒரு மேடையை உருவாக்குவதும், கடந்த ஓராண்டில் இந்தத் திட்ட அமலாக்கம் சந்தித்த சவால்களை விவாதிப்பதும், அமலாக்கத்தை மேம்படுத்துவதற்கான புதிய புரிதலையும், வழிகளையும் கண்டறிவதும் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்வின் நோக்கமாகும்.