This nation will always be grateful to the scientists who have worked tirelessly to empower our society: PM
Tomorrow’s experts will come from investments we make today in our people and infrastructure: PM Modi
Science must meet the rising aspirations of our people: Prime Minister
By 2030 India will be among the top three countries in science and technology: PM
The brightest and best in every corner of India should have the opportunity to excel in science: PM Narendra Modi
Seeding the power of ideas and innovation in schoolchildren will broaden the base of our innovation pyramid: PM
For sustainable development, we must take strong measures to focus on Waste to Wealth Management: Shri Modi
Indian space programme has put India among the top space faring nations: PM Modi

ஆந்திரப் பிரதேச மாநில ஆளுநர் திரு. ஈ.எஸ்.எல். நரசிம்மன் அவர்களே,

ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்களே,

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவிசார் அறிவியல்களுக்கான மத்திய அமைச்சர் திரு. ஒய். எஸ். சவுத்ரி அவர்களே,

இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் பொதுத் தலைவர் பேராசிரியர் டி. நாராயண ராவ் அவர்களே,

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஏ. தாமோதரம் அவர்களே,

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

பெரியோர்களே, தாய்மார்களே,

உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்திருக்கும் மதிப்பிற்குரிய விஞ்ஞானிகளுடன் புனித நகரமான திருப்பதியில் புது வருடத்தைத் துவக்குவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் விரிந்து பரந்த இந்த வளாகத்தில் நடைபெறும் இந்திய அறிவியல் காங்கிரசின் 104வது கூட்டத்தைத் துவக்கி வைப்பதிலும் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இந்த ஆண்டின் நிகழ்விற்கு  “தேசிய வளர்ச்சிக்கான அறிவியலும் தொழில்நுட்பமும்” என்ற மிகவும் பொருத்தமான தலைப்பை தேர்ந்தெடுத்தமைக்காக இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்திற்கு எனது பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

தொலைநோக்கு, உழைப்பு, தலைமைதாங்கும் திறன் ஆகியவற்றின் மூலம் நமது சமூகத்தை வலுப்படுத்த ஓய்வில்லாது பாடுபட்டு வந்த விஞ்ஞானிகளுக்கு நமது நாடு எப்போதுமே நன்றிக் கடன்பட்டுள்ளது.

கடந்த 2016 நவம்பர் மாதத்தில் இத்தகைய பெருமைக்குரிய விஞ்ஞானிகளில் ஒருவரும், சிறப்பான பல நிறுவனங்களை உருவாக்கியவருமான டாக்டர். எம். ஜி.கே. மேனன் அவர்களை நமது நாடு இழந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

நாம் இப்போது எதிர்நோக்குகின்ற மாற்றங்களின் வேகமும் அளவும் இதுவரை நாம் கண்டிராத தன்மை கொண்டதாகும்.

இவ்வாறு எழும் என்று நாம் ஒருபோதும் எதிர்பார்க்காத இந்தச் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்? ஆர்வத்தால் தூண்டப்பட்ட ஆழ்ந்த அறிவியல் பாரம்பரியம்தான் புதிய யதார்த்தங்களை விரைந்து ஏற்றுக் கொள்ள நம்மை அனுமதிக்கின்றது.

மக்களிடையேயும், கட்டமைப்பிலும் நாம் இன்று உருவாக்குகின்ற முதலீடுகளிலிருந்தே சிறந்த நிபுணர்கள் நாளை வெளிவருவார்கள். அடிப்படை அறிவியலில் இருந்து துவங்கி செயல் அறிவியல் வரையிலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அழுத்தம் தரும் வகையில் பல்வேறு வகையான அறிவியல் தளங்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதில் எனது அரசு மிகவும் உறுதியாக உள்ளது.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

அறிவியல் காங்கிரஸின் கடந்த இரண்டு கூட்டங்களிலும் நாட்டின் முன்னேயுள்ள பல்வேறு முக்கிய சவால்கள், வாய்ப்புகள் ஆகியவற்றை உங்கள் முன்வைத்திருந்தேன்.

இந்த முக்கிய சவால்களில் சில தூய்மையான குடிநீர், மின்சாரம், உணவு, சுற்றுச் சூழல், பருவநிலை, பாதுகாப்பு, உடல்நலம் ஆகிய முக்கிய துறைகளில் உள்ளவையாகும்.

அதைப் போலவே சீர்குலைவுத் தொழில்நுட்பங்கள் அதிகரித்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்பதோடு, அவற்றை நமது வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும். நமது தொழில்நுட்பத்தின் தயார்நிலை, போட்டிபோடும் தன்மை ஆகியவற்றில் உள்ள சவால்கள், வாய்ப்புகள் ஆகியவற்றையும் நாம் தெளிவாக மதிப்பிட வேண்டிய தேவையும் உள்ளது.

கடந்த ஆண்டு அறிவியல் காங்கிரசில் வெளியிடப்பட்ட  2035-ஆம் ஆண்டிற்கான தொழில்நுட்ப தொலைநோக்குத் திட்டம் குறித்த அறிக்கை இப்போது 12 முக்கிய தொழில்நுட்பத் துறைகளில் விரிவான வழிமுறைகளைக் கொண்டதாக  உருவாக்கப்பட்டுள்ளது என்று என்னிடம் கூறப்பட்டது. மேலும் நிதி ஆயோக் அமைப்பும் நாட்டின் முழுமையான அறிவியல், தொழில்நுட்பத்திற்கான தொலைநோக்குத் திட்டத்தை  உருவாக்கி வருகிறது.

நாம் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பகுதியாக இருப்பது உலகளாவிய அளவில் மிக வேகமாக அதிகரித்து வரும் இணையவழியிலும் – நேரடியாக கண்ணுக்குத் தென்படும் வகையிலும் ஆன செயல்முறைகளாகும். இது நாம் இதுவரை கண்டிராத சவால்களை நம்முன்னே கொண்டு வருவதாகவும் நமது மக்களுக்குக் கிடைக்கும் பயன்களின் மீது அழுத்தம் செலுத்துவதாகவும் மாறக் கூடியதாகவும் இவை அமைந்துள்ளன. எனினும் தானியங்கி இயந்திர அறிவியல், செயற்கை அறிவு, மின்னணு உற்பத்தி, பெரும் புள்ளிவிவரங்கள் மீதான ஆய்வு, ஆழ்ந்த படிப்பு, தகவல் தொடர்பு அளவீடுகள், இணைய வழிப்பட்ட விஷயங்கள் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி, பயிற்சி, திறன் வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் இதை மாபெரும் வாய்ப்பாக நம்மால் மாற்ற முடியும்.

சேவை, உற்பத்தி, விவசாயம், நீர்-எரிசக்தி மற்றும் போக்குவரத்து மேலாண்மை, கட்டமைப்பு மற்றும் புவிசார் தகவல் முறைகள், குற்றங்களை எதிர்த்துப் போராடும் வகையில் பாதுகாப்பு, நிதி அமைப்பு போன்ற துறைகளில் இத்தகைய தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பது; பயன்படுத்திக் கொள்வது ஆகியவற்றுக்கும் தேவையுள்ளது.

அடிப்படையான ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான கட்டமைப்பு, ஆட்கள் வசதி மற்றும் திறன் ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கென இணையவழிப்பட்ட – நேரடியாக கண்ணுக்குத் தென்படும் வகையிலான முறைகளில் அமைச்சகங்களுக்கு இடையிலான தேசிய செயல் அமைப்பை உருவாக்க வேண்டிய தேவையும் நமக்குள்ளது.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

இந்திய தீபகர்ப்பப் பகுதியைச் சுற்றியுள்ள பெருங்கடல்களில் 1,300க்கும் மேற்பட்ட தீவுகள் நம்மிடம் உள்ளன. 7,500 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையோரப் பகுதியையும், நமக்கு மட்டுமேயான 24 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள பொருளாதார மண்டலத்தையும் அவை நமக்கு வழங்கியுள்ளன.

எரிசக்தி, உணவு, மருந்து மற்றும் வேறு பல இயற்கை ஆதாரங்களிலும் பிரம்மாண்டமான வாய்ப்புகளை உள்ளடக்கியதாகவும் அவை விளங்குகின்றன. நமது நீடித்து நிலைக்கத்தக்க எதிர்காலத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக கடல் அடிப்படையிலான பொருளாதாரம் அமைய வேண்டும்.

இந்த ஆதாரங்களைக் கண்டறியவும், புரிந்து கொள்ளவும், அவற்றைப் பொறுப்பான வகையில் பயன்படுத்திக் கொள்ளவும், ஆழ்கடல் செயலமைப்பைத் துவக்க புவிசார் அறிவியல்களுக்கான மத்திய அமைச்சகம் செயல்பட்டு வருகிறது என என்னிடம் கூறப்பட்டது.  நமது நாட்டின் வளத்திற்கும் பாதுகாப்பிற்கும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கையாக இது அமையக் கூடும்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

நமது மிகச் சிறந்த அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்கள், உலகளவில் முன்னோடியான தரங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்கள் அடிப்படை ஆய்வுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த அடிப்படை அறிவை புதிய கண்டுபிடிப்புகளாக, புதிய தொழில் முயற்சிகளாக, தொழில்களாக மாற்றுவது அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்த வளர்ச்சியை அடைவதற்கு நமக்கு உதவி புரியும்.

அறிவியல்ரீதியான வெளியீடுகளைப் பொறுத்தவரையில் இந்தியா இப்போது உலகத்திலேயே ஆறாவது இடத்தில்  உள்ளது என ஸ்கோப்பஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் உலகத்தின் சராசரி வளர்ச்சிவிகிதம் சுமார் 4 சதவீதம் எனும்போது நமது நாடு 14 சதவீத வளர்ச்சி விகிதம் கொண்டதாக உள்ளது. அடிப்படை ஆய்வு, அதனை தொழில்நுட்பமாக மாற்றுவது, அதனை சமூகத்துடன் இணைப்பது ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்துவதில் உள்ள சவால்களை நமது விஞ்ஞானிகள் எதிர்கொள்வார்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

அறிவியல், தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் 2030ஆம் ஆண்டில் இந்தியா முதல் மூன்று இடத்தில் இருக்கும் என்பதோடு உலகத்திலேயே மிகச் சிறந்த திறனாளிகளை கவர்ந்திழுக்கும் இடங்களில் ஒன்றாகவும் இருக்கும். இன்று நாம் துவக்கி வைக்கின்ற இச்செயல் இந்த இலக்கை நிச்சயமாக வென்றடையும்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

நமது மக்களின் அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக அறிவியல் அமைய வேண்டும். சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதில் அறிவியலும் தொழில்நுட்பமும் வலுவான பங்கினை வகிக்கின்றன என்பதையும் இந்தியா முழுமையாக உணர்ந்துள்ளது. நகர-கிராமப்புறப் பகுதிகளுக்கு இடையிலான இடைவெளி குறித்த பிரச்சினைகளை நாம் கையிலெடுக்க வேண்டும் என்பதோடு, அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாட்டிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் நாம் பாடுபட வேண்டும். இதைச் செய்யவேண்டுமெனில், இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்தையும் உள்ளடக்கிய புதியதொரு கட்டமைப்பு நமக்குத் தேவைப்படுகிறது.

மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தேசிய அளவிலான பெரும் செயல் அமைப்புகளை உருவாக்கி, அவற்றை நிறைவேற்றுவதற்கான நமது திறமையை பெரும் பயனாளிகளுடன் ஒன்றிணைக்க சிறப்பான கூட்டாளிகளும் நமக்குத் தேவைப்படுகின்றனர். நமக்குள்ளே ஆழ்ந்து கிடக்கும் கருத்தாக்கங்களிலிருந்து விடுபட்டு, ஒத்துழைப்பிற்கான அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலமே இந்தச் செயல் அமைப்புகள் சிறப்பாகச் செயல்படுவதை நம்மால் உறுதிப்படுத்த முடியும். நமது பல்வேறு வகையான வளர்ச்சிக்கான சவால்களை துரிதமாகவும், சிறப்பாகவும் கையாளுவதற்கு இது மிகவும் அவசியம். நமது அமைச்சகங்கள், விஞ்ஞானிகள், ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், புதிய தொழில்கள், பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்ப நிலையங்கள் (ஐ.ஐ.டி.) ஆகிய இவை அனைத்துமே எவ்வித இடர்ப்பாடுமின்றி இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். குறிப்பாக, நமது கட்டமைப்பு மற்றும் சமூக-பொருளாதார அமைச்சகங்கள் அறிவியல், தொழில்நுட்பங்களை பொருத்தமான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நீண்ட கால ஆய்வுகளில் கூட்டாக செயல்படுவதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்டு வெளிநாடுகளிலிருந்து மிகத் திறமையான விஞ்ஞானிகளை அழைப்பது பற்றி நமது அறிவியல் நிறுவனங்கள் யோசிக்கலாம். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர்களை நமது திட்டங்களில், முனைவர் பட்ட ஆய்விற்குப் பிறகான ஆய்வுகளில் நாம் ஈடுபடுத்த வேண்டும்.

அறிவியலை எளிதாகப் பயன்படுத்துவதே அறிவியல்பூர்வமான விளைவுகளை செயல்படுத்துவதற்கான மற்றொரு அம்சமாகும். அறிவியல் நமது தேவையை நிறைவேற்ற வேண்டுமெனில், அதன் செயல்பாட்டை நாம் எவ்வகையிலும் தடுக்கக் கூடாது.

கல்வியாளர்கள், புதிய தொழில் முனைவர்கள், தொழில் துறையினர், ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஆய்வுக் கூடங்கள் போன்றவை எளிதில் அணுகக் கூடிய வகையில் வலுவான அறிவியல், தொழில்நுட்பக் கட்டமைப்பை வளர்த்தெடுப்பதே அரசின் முன்னுரிமையாக உள்ளது. எளிதாக அணுகுவது, பராமரிப்பு, தேவையற்றதாக, ஒன்றுக்கு இரண்டாக  இருக்கும் விலையுயர்ந்த ஆய்வுக் கருவிகள் ஆகிய நமது அறிவியல் நிறுவனங்களில் நிலவி வரும்  பிரச்சனைகளையும் நாம் கவனிக்க வேண்டிய தேவையுள்ளது. உயர் மதிப்புடைய அறிவியல் ஆய்வுக் கருவிகளைக் கொண்ட, சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும்படியான, பகுதியளவில் பெரும் மையங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியில் உருவாக்க முடியுமா என்பதையும் நாம் ஆராய வேண்டும்.

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தைப் போலவே, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட, இதனால் பயன்பெறக்கூடிய அனைத்து முன்னணி நிறுவனங்களையும் இணைக்கும் வகையில் அறிவியல்பூர்வமான சமூகப் பொறுப்பு என்ற கருத்தாக்கத்தையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். கருத்துக்களையும் ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றதொரு சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள சிறந்த, மிகச் சிறந்தவர்களுக்கு அறிவியலில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். இது சிறந்த அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கான உயர்தரப் பயிற்சியைப் பெறுவதன் மூலம்  நமது இளைஞர்களை, போட்டி நிறைந்த இந்த உலகத்தில் வேலை வாய்ப்புக்குத் தயாரானவர்களாக ஆக்குவதை உறுதிப்படுத்த முடியும்.

இந்த நோக்கத்துடன்தான் அருகிலுள்ள பள்ளிகள், கல்லூரிகளுடன் இணைய வேண்டும் என்றும், இதற்குப் பொருத்தமான பயிற்சித் திட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டுமென்றும் நான் தேசிய அளவிலான சோதனைக் கூடங்களை கேட்டுக் கொள்கிறேன். மேலும் இத்தகைய முயற்சி நமது விரிவான அறிவியல், தொழில்நுட்ப கட்டமைப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவும், நிர்வகிக்கவும் உதவும்.

ஒவ்வொரு பெருநகரப்பகுதியிலும் உள்ள ஆய்வுக் கூடங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை ஒரு மையமாக, ஒன்றோடொன்று இணைந்தவையாகச் செயல்படும் வகையில் அவை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தப்பட வேண்டும். இந்த மையங்கள் பெரும் கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்வதோடு, நமது தேசிய அறிவியல் செயல் அமைப்பின் இயக்கியாக, கண்டுபிடிப்பிலிருந்து பயன்பாடு வரையில் அவற்றை இணைக்கும் செயலூக்கிகளாகவும் அமையும்.

ஆய்வுப் பின்னணியுடைய கல்லூரி ஆசிரியர்களை அருகிலுள்ள பல்கலைக்கழகங்கள், ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைக்க முடியும். தலைசிறந்த நிறுவனங்களிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்பப் பள்ளிகள் ஆகியவற்றுடன் சேர்ந்து செயல்படுவதென்பது உங்கள் அருகாமைப் பகுதிகளிலுள்ள கல்வி நிறுவனங்களிலிருந்து அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய திறன்கொண்ட ஆட்களைத் தூண்டிவிடவும் உதவும்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

பள்ளிக் குழந்தைகளிடையே கருத்துக்கள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் வலிமையை விதைப்பது நமது கண்டுபிடிப்பின் அடித்தளத்தை விரிவுபடுத்தும் என்பதோடு, நமது நாட்டின் எதிர்காலத்திற்கும் உத்தரவாதம் அளிக்கும். இந்த வகையில் செயல்படுவதற்கான முயற்சியாக, 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை குறிப்பாக பயன்படுத்தும் வகையில் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் திட்டமொன்றை துவக்கியுள்ளது.

இத்திட்டம் 5 லட்சம் பள்ளிகளிலிருந்து உள்ளூர் தேவைகளை மையமாகக்  கொண்ட 10 லட்சம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான கருத்துக்களை கண்டறியவும், அவற்றுக்கு வழிகாட்டவும், பரிசளிக்கவும், அவற்றை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதும் ஆகும்.

இதுவரை பெண்கள் பங்கேற்காத பிரிவுகளில் அறிவியல், பொறியியல் ஆகிய துறைகளில் பெண்குழந்தைகளை சேர்ப்பது; அவர்களை சிறப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளையும் நாம் அளிக்க வேண்டும். நமது நாட்டை வளர்த்தெடுப்பதில் பயிற்சி பெற்ற பெண் விஞ்ஞானிகள் தொடர்ந்து பங்கேற்பதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

இந்தியாவைப் போன்ற மிகப் பரந்த, மிகவும் வித்தியாசமான நாட்டில் தொழில்நுட்பமும் கூட, முன்னேறிய விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கான தொழில்நுட்பத்திலிருந்து துவங்கி, சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள், மறுசுழற்சியிலான மின்சாரம், மக்களுக்கான உடல்நல வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கான கிராமப்புற வளர்ச்சிக்கான தேவைகள் வரையில் விரிவான அளவிலானதாகவே இருக்கவேண்டும்.

உலக அளவில் நாம் சிறந்து விளங்கும் அதே நேரத்தில், நமது பிரத்யேகமான பின்னணிக்கு உகந்த வகையில் உள்ளூர் அளவிலான தீர்வுகளை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

உள்ளூர் ஆதாரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, உள்ளூர் தேவைகளை நிறைவேற்றும் திறன்களைக் கொண்ட, உள்ளூர் நிறுவனங்களையும், வேலைவாய்ப்புகளையும் வளர்த்தெடுக்க கிராமப்புறப் பகுதிகளுக்குப் பொருத்தமான குறுதொழில் மாதிரிகளை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

உதாரணமாக, கிராமங்கள், சிறுநகர்ப்புறப் பகுதிகள் ஆகிய பகுதிகள் சிறப்பாக விளங்குவதற்கான தொழில்நுட்பங்கள் பலவற்றையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். மின்சாரம், சுத்தமான குடிநீர், பயிரைக் கொண்டு வேறுபல பொருட்களை உருவாக்குவது, குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் போன்ற பல்வேறு வகையான தேவைகளை நிறைவேற்றும் வகையில் விவசாய மற்றும் உயிரி கழிவுகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்தத் தொழில்நுட்பங்கள் அமைய வேண்டும்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு திட்டமிடுதல், முடிவெடுத்தல், நிர்வாகம் போன்றவற்றில் அறிவியலின் பங்கு முக்கியமானதாக மாறியுள்ளது.

நமது மக்கள், கிராமப் பஞ்சாயத்துகள், மாவட்டங்கள், மாநிலங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கான இலக்குகளை நிறைவேற்றும் வகையில் உலக அளவிலான தகவல்களை வழங்கும் முறைகளை நாம் வளர்த்தெடுத்து, அவற்றை அமல்படுத்த வேண்டிய அவசியமுள்ளது. இந்திய சர்வே அமைப்பு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு இதில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருக்கும்.

நீடித்த வளர்ச்சிக்கு,  மின்னணுக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள், அசுத்தமான நீர் போன்ற முக்கியமான கழிவுகளை செல்வமாக மாற்றுவதற்கான  தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி, வலுவான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

தூய்மையான கரிம தொழில்நுட்பங்கள், மின்சக்தியை சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள், மறுசுழற்சி முறையிலான மின்சாரத்தை அதிகமான அளவிலும், சிறப்பாகவும் பயன்படுத்தவுமான ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான வரம்பை நாம் அதிகரித்து வருகிறோம்.

நீடித்த வளர்ச்சியை உறுதிப்படுத்த, சுற்றுச் சூழல், பருவநிலை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவது நமது முன்னுரிமையாக தொடர்ந்து இருந்து வருகிறது. நமது வலுவான அறிவியல் துறையினரால்

நமது பிரத்யேகமான சவால்களை சிறப்பாக  எதிர்கொள்ளவும் முடியும். உதாரணமாக, பயிர்களை எரிப்பது குறித்த பிரச்சினையில் விவசாயிகளை மையமாகக் கொண்ட  தீர்வுகளை நம்மால் கண்டறிய முடியாதா? குறைந்த அளவில் நச்சு வாயுக்களை வெளியிடுவது; எரிசக்தியை சிறப்பாகப் பயன்படுத்துவது என்ற வகையில் நமது செங்கற் சூளைகளை நம்மால் திருத்தி அமைக்க முடியாதா?

இந்தியாவில் தொழில் துவங்குவோம் என்ற திட்டம் 2016 ஜனவரியில் துவங்கப்பட்டபோது அறிவியலும் தொழில்நுட்பமும் அதில் மிக முக்கிய அம்சமாக இருந்தது. அடல் கண்டுபிடிப்புக்கான செயல் அமைப்பு மற்றும் நிதி என அழைக்கப்படும் வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்பதற்கான தேசிய முன்முயற்சி ஆகியன இதர இரண்டு வலுவான முயற்சிகள் ஆகும். இந்தத் திட்டங்கள் கண்டுபிடிப்பை செயலூக்கியாகக் கொண்ட நிறுவனங்களை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. மேலும் சி.ஐ.ஐ., எஃப்.ஐ.சி.சி.ஐ., உயர்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றோடு இணைந்து, கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான சூழலை வலுப்படுத்த பொது-தனியார் கூட்டு முயற்சிகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

நமது நாட்டின் கேந்திரமான தொலைநோக்கிற்கு நமது விஞ்ஞானிகள் மிக வலுவாகவே பங்களித்து வந்துள்ளனர்.

இந்தியாவின் விண்வெளித் திட்டம், இத்தகைய திட்டங்களில் செயல்பட்டு வரும் நாடுகளிலேயே இந்தியாவை உயர்ந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. விண்கலத்தை உருவாக்குவது, விண்வெளியில் அதைச் செலுத்துவதற்கான திறமை, துணைக்கோள்களை உருவாக்குவது, இவற்றை வளர்த்தெடுப்பதற்கான செயல்முறைகள், அடிப்படைத் திறன் மற்றும் செயல் அளவு ஆகியவற்றை வளர்த்தெடுப்பது போன்ற  விண்வெளி தொடர்பான  தொழில்நுட்பத்தில் நாம் பெருமளவிற்கு சுயசார்பை அடைந்துள்ளோம்.

நமது ராணுவப் படைகள் அதன் செயல்முறைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை பன்மடங்கு பெருக்கிக் கொள்வதிலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு முக்கிய பங்கினை வகித்து வருகிறது.

இந்திய அறிவியலை உலக அளவில் போட்டித்திறன் கொண்டதாகச் செய்ய பரஸ்பர நன்மை, சமநிலை, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது ஆகிய குறிக்கோள்களின் அடிப்படையில் ராணுவ ரீதியான சர்வதேச பங்குதாரர் முறையையும், ஒத்துழைப்பு முறையையும் நாம் பயன்படுத்தி வந்துள்ளோம். நமது அண்டை நாடுகள் மற்றும் பிரிக்ஸ் போன்ற பல்வகை தொடர்புகளைக் கொண்ட அமைப்புகள் ஆகியவற்றுடன் வலுவான உறவுகளை வளர்த்தெடுப்பதிலும் நாம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். உலகளாவிய அறிவியலின் மிகச் சிறந்த பகுதியானது படைப்பின் ரகசியங்களைக் கண்டறியவும், செயல்திறன் மிக்க தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்கவும் நமக்கு உதவி செய்து வருகின்றன.  கடந்த ஆண்டு இந்திய-பெல்ஜிய  கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 3.6 மீட்டர் விட்டமுள்ள தொலைநோக்கியை உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள தேவஸ்தாலில் நிறுவி செயல்படுத்தியிருந்தோம். இந்தியாவில் மிக நவீனமான கண்டறிதல் முறையை உருவாக்குவதற்கென அமெரிக்காவுடனான லிகோ திட்டத்திற்கும்  நாம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளோம்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

நமது விஞ்ஞானிகளுக்கும், அறிவியல் நிறுவனங்களுக்கும் மிகச் சிறந்த வகையில் ஆதரவு தெரிவிப்பதில் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்பதையும் நான் இறுதியாக வலியுறுத்த விரும்புகிறேன்.

அடிப்படை அறிவியல்களின் தரத்தை உயர்த்துவதிலிருந்து தொழில்நுட்ப மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள் வரையிலான முயற்சிகளை நமது விஞ்ஞானிகள் மேலும் உயர்த்துவார்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

நமது சமூகத்தின் வலுவிழந்த, வறிய மக்கள் பிரிவினரின் நலனை மேம்படுத்தும் வகையிலும், மக்களை அணைத்துக் கொண்ட வகையில் வளர்ச்சிக்கான வலுவான கருவியாகவும் அறிவியலும் தொழில்நுட்பமும் மாறட்டும்.

நியாயமான, சமமான, வளமான நாட்டை உருவாக்குவதில் நாம் இணைந்து செயல்படுவோம்.

ஜெய் ஹிந்த்!

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
5 Days, 31 World Leaders & 31 Bilaterals: Decoding PM Modi's Diplomatic Blitzkrieg

Media Coverage

5 Days, 31 World Leaders & 31 Bilaterals: Decoding PM Modi's Diplomatic Blitzkrieg
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister urges the Indian Diaspora to participate in Bharat Ko Janiye Quiz
November 23, 2024

The Prime Minister Shri Narendra Modi today urged the Indian Diaspora and friends from other countries to participate in Bharat Ko Janiye (Know India) Quiz. He remarked that the quiz deepens the connect between India and its diaspora worldwide and was also a wonderful way to rediscover our rich heritage and vibrant culture.

He posted a message on X:

“Strengthening the bond with our diaspora!

Urge Indian community abroad and friends from other countries  to take part in the #BharatKoJaniye Quiz!

bkjquiz.com

This quiz deepens the connect between India and its diaspora worldwide. It’s also a wonderful way to rediscover our rich heritage and vibrant culture.

The winners will get an opportunity to experience the wonders of #IncredibleIndia.”