தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி, கெவாடியாவில் உள்ள ஒற்றுமையின் சிலை பகுதியில் 430-க்கும் மேற்பட்ட குடிமைப்பணி சேவை பயிற்சி அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
அப்போது, “நாட்டில் குடிமைப்பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும், இதுபோன்ற ஒருங்கிணைந்த அடிப்படை பாடத்திட்டமானது, இந்தியாவில் குடிமைப்பணிகளில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக உள்ளது. இதுவரை நீங்கள், முசோரி, ஹைதராபாத் மற்றும் பிற இடங்களில் பல்வேறுபட்ட மையங்களில் பயிற்சி பெற்றிருப்பீர்கள். மேலும், உங்களது பயிற்சியின் தொடக்க மட்டத்திலேயே, அதிகாரத்துவம் எவ்வாறு செயல்படுகிறது என்பதுபோன்று பல்வேறுவகையில் நீங்கள் செயல்பட்டிருப்பீர்கள்,” என்றார் பிரதமர்.
பயிற்சி பெறுபவர்களின் முயற்சியை வரவேற்றுப் பேசிய பிரதமர், “குடிமைப்பணியின் உண்மையான ஒருங்கிணைப்பை, நீங்கள் அனைவரும் சரியான வழியில் தற்போது மேற்கொண்டிருப்பீர்கள். இந்த ஆரம்பத்துக்குள்ளேயே சீர்திருத்தம் அடங்கியுள்ளது. இந்த சீர்திருத்தம் என்பது, பயிற்சிக்கான ஒருங்கிணைப்புக்காக மட்டும் இருப்பதல்ல. இது நிலைப்பாடு மற்றும் எதிர்கால சிந்தனையை விரிவுபடுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். விரிவான வெளிப்பாடுகளை கொண்டிருக்க வேண்டும். இது குடிமைப்பணியின் ஒருங்கிணைப்பு. இந்த ஆரம்பம், உங்களிடம் நடைபெற்றுள்ளது,” என்றார்.
மேலும், இதன் ஒரு அங்கமாக, சமூக மற்றும் பொருளாதார அளவிலான சர்வதேச தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் பயிற்சி அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர் என்று பிரதமர் கூறினார்.
தேசத்தைக் கட்டமைப்பதில் முக்கியமான கருவியாக குடிமைப்பணிகளை மாற்ற வேண்டும் என்பதே சர்தார் வல்லபாய் படேலின் கனவாக இருந்ததாக பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.
இதுதொடர்பாக பேசிய பிரதமர், “தேசத்தை கட்டமைப்பது மற்றும் மேம்படுத்துவதில் அனைத்து குடிமைப்பணிகளையும் முக்கியமான கருவியாக மாற்றுவதே சர்தார் வல்லபாய் படேலின் கனவாக இருந்தது. இந்த கனவை நனவாக்குவதில், பல்வேறு சவால்களை சர்தார் படேல் எதிர்கொண்டார் என்றார்.
சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதில் முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளை நாட்டின் வளர்ச்சிக்காக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது அப்போதைய பொதுவான எண்ணமாக இருந்தது. எனினும், சர்தார் படேல் தனது கனவுடன், இந்த அமைப்பு, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் திறனை பெற்றிருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தார்,” என்றார்.
“அதே அதிகாரத்துவம், மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மாநிலங்களை ஒருங்கிணைந்த நாடாக மாற்றுவதற்கு உதவியது” என்றும் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
சாதாரண மனிதனின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமானால், வலுவான இலக்கு மற்றும் உறுதி இருக்க வேண்டும் என்பதை பல்வேறு சமயங்களில் சர்தார் வல்லபாய் படேல் எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதை பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி பகிர்ந்துகொண்டார்.
“நூறு ஆண்டுகளுக்கு முன்பு, குறைந்த வளங்களை வைத்துக் கொண்டு அகமதாபாத் நகராட்சியில் 10 ஆண்டுகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து, தமது திறனை நிரூபித்தார்,” என்று சர்தார் படேலின் திறமைகளை பிரதமர் எடுத்துரைத்தார்.
“இந்தக் கனவுடன், சுதந்திர இந்தியாவில் குடிமைப்பணி சேவைகளுக்கு எல்லைக்கோடுகளை சர்தார் படேல் வகுத்தார்,” என்று பிரதமர் கூறினார்.
பயிற்சி அதிகாரிகள், தங்களது ஒவ்வொரு முயற்சியிலும் ஒருதலைப்பட்சமின்றியும், சுயநலமின்றி உண்மையான உணர்வுடனும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
“ஒருதலைபட்சம் மற்றும் சுயநலம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும் புதிய இந்தியாவுக்கான வலுவான அடித்தளமாக இருக்கும்,” என்றார் நரேந்திர மோடி.
மேலும் பிரதமர் பேசும்போது, “புதிய இந்தியாவின் கனவு மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற, அதிகார மட்டத்தில் இருப்பவர்களின் சிந்தனையும், செயல்பாடும், 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ப இருக்க வேண்டும். புதியதை உருவாக்குதல் மற்றும் ஆக்கப்பூர்வமானது, யூகித்தல் மற்றும் புத்தாக்கம், சுறுசுறுப்பு மற்றும் பண்பட்டு இருத்தல், தொழில் நிபுணத்துவம் மற்றும் முற்போக்குடன் செயல்படுதல், சுறுசுறுப்பு மற்றும் செயல்படுத்துதல், திறமை மற்றும் வலிமை, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்ப அனுபவம் ஆகியவற்றுடன் கூடிய அதிகார மட்டம் நமக்கு தேவை,” என்றார் பிரதமர்.
சாலைகள், வாகனங்கள், தொலைபேசிகள், ரயில்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற வளங்கள் குறைவாக இருந்த காலத்திலும் கூட, மூத்த அதிகாரிகளில் பெரும்பாலானோர், ஏராளமான சாதனைகளைப் புரிந்துள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
“இன்று அதைப்போலவே இருப்பதில்லை. இந்தியா அதிக அளவிலான முன்னேற்றத்தை நோக்கி பயணித்து வருகிறது. நம்மிடம் அதிக அளவிலான இளைஞர் சக்தி, நவீன தொழில்நுட்பம் உள்ளது. உணவுப் பற்றாக்குறை இல்லை. உங்களிடம் தற்போது மிகப்பெரும் வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகள் உள்ளன. இந்தியாவின் திறனை நீங்கள் அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதன் நிலைத்தன்மையை வலுப்படுத்த வேண்டும்,” என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
நாட்டுக்கு சேவையாற்ற தங்களையே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று பயிற்சி அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
“நீங்கள் வெறும் பணிக்காக அல்லது எதிர்காலத்துக்காக இந்தப் பாதையை தேர்ந்தெடுக்கவில்லை. சேவையே உயர்ந்த செயல் என்ற மந்திரத்துடன் சேவையாற்றுவதற்காக நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள்,” என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
“உங்களது ஒவ்வொரு செயல்பாட்டிலும், ஒரு கையெழுத்து, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் எடுக்கும் முடிவுகள், உள்ளூர் மற்றும் பிராந்தியம் சார்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால், அதன் நோக்கம் தேசம் சார்ந்ததாக இருக்க வேண்டும். உங்களது முடிவுகள் எவ்வாறு தேசத்தில் மாற்றத்தை கொண்டுவரும் என்றே எப்போதும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.”
“உங்களது முடிவுகள், எப்போதும் இரண்டு அடிப்படைக் கொள்கைகள் சார்ந்ததாகவே இருக்க வேண்டும். ஒன்று, மகாத்மா காந்தி கூறியதைப்போல, உங்களது முடிவுகள், சமூகத்தில் கடைசி நிலையில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கு பயனளிக்கிறதா என்று பார்க்க வேண்டும். இரண்டாவது, உங்களது முடிவுகள், நாட்டின் ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் அதன் பலத்துக்கு பங்களிப்பை செய்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.”
அனைத்து நிலையிலும் புறக்கணிப்பட்டதுடன், ஏமாற்ற நிலைக்கு சென்ற 100-க்கும் மேற்பட்ட பின்தங்கிய மாவட்டங்களின் நிலையை பிரதமர் எடுத்துரைத்தார்.
“முன்னேற்றத்துக்கான போட்டியிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இருந்தன. தற்போது மாற்றமிகு மாவட்டங்களாக மாறியுள்ளன. அந்த மாவட்டங்கள், அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டன. இது நாட்டில் ஏமாற்றத்தை கொண்டுவந்தது. தற்போது அந்த மாவட்டங்களின் முன்னேற்றம், மிகவும் சிக்கலானதாக மாறிவிட்டது. தற்போது மனித மேம்பாட்டு குறியீட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் மேம்பாடு அடையச் செய்ய நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தொழில்நுட்பத்தின் உதவியுடன் அனைத்து கொள்கைகளையும் செயல்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த மாற்றமிகு மாவட்டங்களை நாம் முன்னேற்ற வேண்டும்,” என்று பிரதமர் வலியுறுத்தினார்.
ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினையில் மட்டும் கவனம் செலுத்தி, அதற்கு முழுமையான தீர்வுகாண வேண்டும் என்று பயிற்சி அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார். இது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களது பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் என்று பிரதமர் கூறினார்.
“நமது ஆர்வத்தாலும், வேகத்தாலும் பல்வேறு நிலைகளில் பணியாற்ற நாம் முயற்சி மேற்கொள்கிறோம். இதனால், நமது வளங்களை இழக்கிறோம். இதற்குப் பதிலாக, ஒரு விஷயத்தில் நீங்கள் பணியாற்ற வேண்டும். அதற்குத் தீர்வுகாண வேண்டும். ஒரு மாவட்டம், ஒரு பிரச்சினை மற்றும் ஒட்டுமொத்த தீர்வு என்று இருக்க வேண்டும். ஒரு பிரச்சினையை குறைத்துவிடுங்கள். உங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும். மக்களின் தன்னம்பிக்கையும் கூட அதிகரிக்கும். இது அரசின் திட்டங்களில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும்,” என்றார் பிரதமர்.
தெளிவான நோக்கத்துடன், மக்கள் எளிதில் அணுகும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று இளம் பயிற்சி அதிகாரிகளுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
“அதிகாரத்தைப் பயன்படுத்துவதை விட, மென்மையான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். மக்கள் எளிதில் அணுகும் வகையில் நீங்கள் இருக்க வேண்டும். தெளிவான நோக்கத்துடன் நீங்கள் பணியாற்ற வேண்டும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உங்களிடம் தீர்வு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் கருத்துக்களைக் கேட்பதற்கு தயாராக இருக்க வேண்டும். சாதாரண மனிதனின் பிரச்சினைகளை உரிய முறையில் கேட்டுக் கொண்டாலே, அவன் மிகுந்த மகிழ்ச்சி அடைவான். மரியாதை மற்றும் கவுரவம் மற்றும் தங்களது பிரச்சினையை எடுத்துரைப்பதற்கு உரிய அடித்தளம் தேவை என்று சாதாரண மனிதன் விரும்புவான்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மக்களின் பின்னூட்டக் கருத்துக்களை கேட்டுத் தெரிந்துகொள்வதற்கு சரியான வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இதன்மூலமே சரியான முடிவுகளை எடுக்க முடியும் என்று கூறினார். “எந்தவொரு கட்டமைப்பிலும், எந்தவொரு அதிகார மட்டத்திலும் வலுவாக இருக்க வேண்டும் என்றால், மக்களின் பின்னூட்ட கருத்துக்களை தெரிந்துகொள்ள உரிய வழிமுறையை உருவாக்க வேண்டும். எதிர் தரப்பிலிருந்தும்கூட கருத்துக்களைப் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இது உங்களது கண்ணோட்டத்தை ஆழமானதாக மாற்றும். சீர்திருத்தங்களை மேற்கொள்ள உங்களுக்கு உதவியாக இருக்கும்,” என்று பிரதமர் கூறினார்.
தொழில்நுட்ப அடிப்படையில் தீர்வுகாண்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று குடிமைப்பணி பயிற்சி அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும், நாட்டை 5 டிரில்லியன் டாலர் அளவுகொண்ட பொருளாதாரமாக மாற்ற உதவ வேண்டும் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, பிரதமருடன் பயிற்சி அதிகாரிகள் தனியாக கலந்துரையாடினார்கள். அப்போது, வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாடு, சுகாதார சேவை சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை வகுத்தல்; நீடித்த கிராமப்புற மேலாண்மை தொழில்நுட்பங்கள், அனைவருக்குமான நகரமயமாதல் மற்றும் கல்வியின் எதிர்காலம் போன்ற கருத்துருக்கள் அடிப்படையில் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.