வணக்கம் சி்ங்கப்பூர் மாலை வணக்கம்,
அமைச்சர், வர்த்தக பிரமுகர்கள் எனது சிங்கப்பூர் நண்பர்கள், சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் வணக்கம்.
இந்த அருமையான நிகழ்ச்சியில் நாம், இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே உள்ள உறவின் வலிமையைப் பார்க்கிறோம். பாரம்பரியமும், மக்களிடையே நல்லுறவும், நமது காலத்தில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்துள்ளதை இது பிரதிபலிக்கிறது. இது இரண்டு சிங்கங்களின் கம்பீரத்தையும், கர்ஜனையையும் கொண்டதாக திகழ்கிறது. சிங்கப்பூருக்கு எப்போது வந்தாலும் பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த நகரம் எப்போதும் மக்களை ஈர்க்கத் தவறியதில்லை. சிங்கப்பூர் சிறிய தீவாக இருக்கலாம், ஆனால் அதன் தொடுவானம் உலக அளவிலானது. சாதனைகளை அளவிடவும், உலக அளவில் தனது குரலை வலுப்படுத்தவும் நாட்டின் பரப்பு ஒரு பொருட்டல்ல என்பதை இந்த சிறப்பான நாடு காட்டியுள்ளது.
ஆனால் சிங்கப்பூரின் வெற்றி அதன் பலதரப்பட்ட கலாச்சார சமுதாயத்தினரின் நல்லிணக்கத்திலேயே அடங்கியுள்ளது. சிங்கப்பூருக்கு என்று உள்ள தனித்துவ அடையாளம், பன்முகத்தன்மையை அது கொண்டாடுவதிலேயே அடங்கியுள்ளது. இந்த அருமையான அடித்தளத்தில் அழகான, வண்ணமயமான, பழமையான இழை இந்தியாவையும், சிங்கப்பூரையும் கட்டிப்போட்டுள்ளது.
நண்பர்களே,
இந்தியாவின் நூற்றாண்டுகள் பழமையான தென்கிழக்கு ஆசியாவுக்கான பாதை சிங்கப்பூர் வழியாகவே செல்கிறது. மக்களின் இணைப்பு மிக ஆழமான, நீடித்த தன்மையைக் கொண்டது. சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களிடையே இதைக் காணமுடிகிறது. உங்களது பங்கேற்பு, உங்கள் ஆற்றல், உங்களது திறமை, உங்களது சாதனைகள் இந்த மாலைப்பொழுது நிகழ்ச்சிக்கு ஒளியேற்றி உள்ளது.
வரலாறு வழங்கிய வாய்ப்பின் மூலமாகவோ, உலகமயமாக்கலின் வாய்ப்புக் காரணமாகவோ, உங்களது மூதாதையர் பல தலைமுறைகளுக்கு முன்பு இங்கு குடியிருந்து வருவதாலோ, அல்லது இந்த நூற்றாண்டில் இந்த நாட்டுக்கு வந்ததாலோ, நீங்கள் ஒவ்வொருவரும் சிங்கப்பூரின் தனித்துவக் கட்டமைப்பு, மற்றும் முன்னேற்றத்தில் பங்கு வகித்தவர்கள் ஆகிறீர்கள்.
பதிலுக்கு சிங்கப்பூர் உங்களது தகுதி, கடின உழைப்புக் காரணமாக உங்களை அரவணைத்துக் கொண்டது. சிங்கப்பூரில் இந்தியாவின் பன்முகத்தன்மையின் பிரதிநிதிகளாக நீங்கள் விளங்குகிறீர்கள். இந்தியாவின் அனைத்து பண்டிகைகளையும் ஒரே நகரத்தில் பல வாரங்களாக கொண்டாடுவதை சிங்கப்பூரில் தான் பார்க்க முடியும்.
அதே போல இப்போது இந்திய உணவும் இங்கு கிடைக்கிறது என்பது உண்மையாகும். லிட்டில் இந்தியாவில் பிரதமர் லீ எனக்கு அளித்த இரவு உணவை நான் இன்னும் நினைத்துப் பார்க்கிறேன்.
தமிழ் இங்கு ஆட்சி மொழியாக உள்ளது. பள்ளிச்சிறார்கள், ஐந்து பிற இந்திய மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம் என்பது சிங்கப்பூரின் சிறந்த உணர்வுக்கு சான்றாகும். இந்தியக் கலாச்சாரத்தின் சிறந்த கலவையாக சிங்கப்பூர் திகழ்கிறது. மிகச் சிறந்த திறமை வாய்ந்த இந்தியர்களுக்கு சிங்கப்பூர் அரசு பேராதரவு வழங்கி வருகிறது.
2017ம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, இந்த நகரத்தின் 70 மையங்களில் யோகாப் பயிற்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பத்து சதுர கிலோமீட்டருக்கும் ஒரு மையம் அமைந்திருந்தது.
உலகின் வேறு எந்த நகரத்திலும் யோகாப் பயிற்சி மேற்கொண்டவர்கள் இந்த அளவுக்கு இருந்ததில்லை. ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன், ஸ்ரீ நாராயண மிஷன் போன்ற நிறுவனங்கள் இங்கு பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. மக்களிடையே வேறுபாடு பார்க்காமல், அந்த நிறுவனங்கள் சமுதாயத்திற்கு புரிந்து வரும் சேவை இந்தியா- சிங்கப்பூர் நாடுகளின் உறவின் மாண்புகளை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
இந்திய சிந்தனையாளர்களான சுவாமி விவேகானந்தா, கவிஞர் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் சிங்கப்பூரிலும், இந்த பிராந்தியத்திலும் மேற்கொண்ட பயணம் மூலமாக இந்தியாவையும், கிழக்கு பகுதியையும் பொதுவான நாண் ஒன்று இணைப்பதைக் கண்டறிந்தனர். சிங்கப்பூர் மண்ணிலிருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்தியாவின் விடுதலைக்காக விடுத்த அழைப்பு ஒவ்வொரு இந்தியரின் இதயங்களிலும் அணையாத ஜோதியை ஏற்றி வைத்தது.
1948-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் புனித அஸ்தியின் ஒரு பகுதி இங்குள்ள கடற்பகுதியான கிளிப்போர்ட் பையர் எனுமிடத்தில் கரைக்கப்பட்டது. அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அஸ்தி கரைக்கப்பட்டபோது, விமானம் ஒன்று ரோஜா மழை பொழிந்தது. மக்கள் கடல் நீர் துளிகளை தீர்த்தம் போல அருந்தினர்.
நாளை மறு தினம் நமது வரலாற்றின் மிகச் சிறந்த தருணத்தைக் குறிக்கும் வகையிலான கல்வெட்டை கிளிப்போர்ட் பையரில் திறந்து வைக்கும் பெருமையை நான் அடைய உள்ளேன். எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான மகாத்மா காந்தியின் சிறந்த பண்புகள் மற்றும் மாண்புகளை இந்தத் தருணம் பிரதிபலிப்பதாக அமையும்.
நண்பர்களே,
அசாதாரணமான பாரம்பரியத்தின் அடித்தளத்துடன், நமது மக்களின் கூட்டிணைப்பின் செழுமை, நமது மாண்புகளைப் பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் ஆற்றல் ஆகியவை இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் நமது காலத்தில் மிகச் சிறந்த கூட்டுறவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நல்லுறவு இருநாடுகளின் பாதுகாப்புத் தொடர்பான உறவுக்கும் வழி வகுத்துள்ளது.
இந்தியா உலகமயமாக்கலை ஏற்றுக்கொண்டு, கிழக்குப் பகுதியில் தனது பார்வையை திருப்பிய போது, இந்தியாவுக்கும், ஆசியான் நாடுகளுக்கும் இடையே, சிங்கப்பூர் ஒரு பாலமாக மாறியது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகள், மிகவும் நெருங்கியதாக இருந்து வருகிறது. இந்த உறவுகளில் எந்தப் போட்டியோ, புகார்களோ, சந்தேகமோ இருந்ததில்லை.
இது, பகிர்ந்துகொள்ளப்படும் கண்ணோட்டத்துடன் கூடிய இயற்கையான நல்லுறவாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவானதாகும். நமது ஆயுதப்படையினர், சிங்கப்பூரின் ஆயுதப்படையினருக்கு மதிப்பு அளித்து புகழ்ந்துரைத்து வருகி்ன்றனர். சிங்கப்பூருடன் தான் இந்தியாவின் நீண்ட கால கடற்படை பயிற்சி நடந்து வருகிறது.
இந்த பயிற்சியின் வெள்ளி விழா தற்போது கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் சிங்கப்பூர் ராணுவம் மற்றும் விமானப்படைக்கு பயிற்சி அளிப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். நமது கப்பல்கள் பரஸ்பரம் இருநாடுகளுக்கும் அடிக்கடி சென்று வருகின்றன.
நமது கடற்படை கப்பல்களில் உங்களில் பலர் பயணித்திருக்கலாம், நாளை மறுநாள் சாங்கி கடற்படைத் தளத்தில் இந்திய, சிங்கப்பூர் கடற்படை கப்பல்களுக்கு செல்வதை நானும் எதிர்நோக்கியுள்ளேன்.
சர்வதேச அமைப்புகளில், விதிமுறைகளைக் கட்டுக்கோப்புடன் பின்பற்றுவது, அனைத்து நாடுகளையும் சமத்துவத்துடன் பாவிப்பது, வர்த்தகம் மற்றும் பயணங்களுக்கு தடையற்ற வழிகளைத் திறப்பது ஆகியவற்றில் இருநாடுகளும் இணைந்து ஒரே குரலை வெளிப்படுத்தி வருகின்றன. பொருளாதாரம், இருநாட்டு உறவின் இதயத் துடிப்பாக உள்ளது.
இந்தியாவின் உலகளாவிய செயல்பாட்டில், சிங்கப்பூருடனான உறவு முன்னிலையில் உள்ளது. இந்தியாவுக்கான அதிக முதலீட்டு ஆதாரமாக சிங்கப்பூர் திகழ்கிறது. இந்தியா முதன் முதலில் சிங்கப்பூருடன் தான் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையை செய்துகொண்டது.
சிங்கப்பூரையும், இந்தியாவைச் சேர்ந்த 16 நகரங்களையும் வாரத்திற்கு சுமார் 250 விமானங்கள் இரு திசையிலும் இணைத்து வருகின்றன. இது மேலும் அதிகரிக்கும். சிங்கப்பூரில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியா 3-வது பெரிய நாடாகவும், விரைவாக வளர்ந்து வரும் நாடாகவும் திகழ்கிறது. நமது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பிறநாடுகளுடன் போட்டியிடும் வகையில் சிங்கப்பூருக்கு உதவி வருகின்றன.
இந்தியாவின் மேம்பாட்டு முன்னுரிமைகளுக்கு சிங்கப்பூர் மிகச் சிறந்த முக்கிய பங்களிப்பு நாடாக உள்ளது. பொலிவுறு நகரங்கள், நகர்ப்புற தீர்வுகள், நிதித்துறை, திறன்மேம்பாடு, துறைமுகங்கள், சரக்கு போக்குவரத்து, விமானப்போக்குவரத்து, தொழில்நுட்பப் பூங்காக்கள் ஆகியவை இதில் அடங்கும்.
இவ்வாறு இந்தியாவும், சிங்கப்பூரும் பரஸ்பர முன்னேற்றத்திற்கு பங்களித்து வருகின்றன. தற்போது டிஜிட்டல் துறையில் புதிய கூட்டுமுயற்சியை நாம் கட்டமைத்து வருகிறோம். பிரதமர் லீ-யும், நானும் இப்போதுதான் மிகச்சிறந்த தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்துறை ஆகியவற்றின் கண்காட்சியை பார்வையிட்டோம். அதில் இருநாடுகளின் திறமையான இளைஞர்களின் பங்களிப்பை காணமுடிந்தது. இந்தியாவிலிருந்து அளப்பரிய திறமையுடன், அந்த ஏராளமான இளைஞர்கள் சிங்கப்பூரை தங்களது வாழ்விடமாக ஆக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் தொழில் ரீதியிலும், புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதிலும், இருநாடுகளுக்கும் இடையிலும், ஆசியானுக்கு இடையிலும் பாலமாகத் திகழ்வார்கள். சிறிது நேரத்திற்கு முன்பு ரூபே, பீம், யுபிஐ ஆகியவை சர்வதேச அளவில் தொடங்கி வைக்கப்பட்டதை பார்த்தோம்.
இவை சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது மிகவும் இயல்பானதாகும். இருநாடுகளும் இணைந்து கைபேசி, டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடங்கிய நிர்வாகத்திற்கு பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்வோம். இருநாடுகளும் சேர்ந்து புதிய யுகத்துக்கான மிகப்பெரும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும்.
சிங்கப்பூர் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ள நிலையில், இந்தியா புதிய உலக வாய்ப்புகள் மிகுந்த நாடாக உருவெடுத்துள்ளது. சரக்கும் மற்றும் சேவை வரி அறிமுகம் போன்ற கட்டமைப்பு ரீதியிலான சீர்த்திருத்தங்களை மேற்கொண்ட போதிலும், உலகின் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்ட பொருளாதார நாடாக நாம் திகழ்கிறோம்.
இந்த இடத்தைப்பிடிக்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும். தற்போது நமது பொருளாதாரம், நிலைத்தன்மைக் கொண்டதாக மாறியுள்ளது. நிதிப்பற்றாக்குறை, குறைந்துள்ளது. பணவீக்க விகிதம் சரிந்துள்ளது. நடப்புக்கணக்குப் பற்றாக்குறை நன்றாக உள்ளது. அதே போல நமது நாணய மதிப்பும் நிலையாக இருக்கிறது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்தியா தற்போது துரிதகதியில் மாறிக்கொண்டிருக்கிறது. புதிய இந்தியா உருவாகி வருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக இதுவரை அறிந்திராத வகையில், பொருளாதார சீர்த்திருத்தங்கள், விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய – மாநில அரசுகள் மேற்கொண்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளின் மூலம், தொழில் தொடங்க ஏதுவான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா கடந்த இரண்டு ஆண்டுகளில் 42 இடங்கள் முன்னேறியுள்ளது.
1400க்கும் மேற்பட்ட தற்காலத்திற்குப் பொருந்தாத பழமையான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. உலகின் மிகச் சிறப்பான, திறந்த பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள் அனைத்துத் துறைகளிலும், 100% சமபங்குகளுடன் முதலீடு செய்யலாம். இந்தியாவில் முதலீடு செய்பவர்களில் 90%-க்கும் மேற்பட்டவர்கள் இந்த முறையையே தேர்வு செய்துள்ளனர்.
இரண்டாவதாக வரி விதிப்பு முறை மாறியுள்ளது. வரிவிகிதங்கள் குறைந்து நிலைத்தன்மை அதிகரித்து, வரித்தாவாக்களுக்கு விரிவாக தீர்வு கண்டு மின்னணு கணக்குத்தாக்கல் முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வரிச்சீர்த்திருத்தம் சரக்கு மற்றும் சேவை வரியாகும். இது நாட்டை ஒருங்கிணைந்த ஒரே சந்தையாக மாற்றியுள்ளதுடன் வரித்தளத்தையும் அதிகரித்துள்ளது.
இது மிக எளிதான காரியமல்ல, ஆனால் இதை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம். மேலும் இது புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. தனிநபர் வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடி என்ற அளவுக்கு விரிவடைந்துள்ளது.
3-வதாக நமது உள்கட்டமைப்புத்துறை சாதனை வேகத்தில் விரிவடைந்து வருகிறது. கடந்த ஆண்டு, தினசரி 27 கிலோமீட்டர் என்ற அளவில், சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்தோம். இது சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட வேகத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
கூடுதல் ரயில்பாதை அமைக்கும் வேகமும், இருமடங்காக உயர்ந்துள்ளது. பல நகரங்களில் மெட்ரோ ரயில்கள், 7 அதிவிரைவு ரயில் திட்டங்கள், பிரத்யேகமான சரக்கு ரயில்பாதைகள், 400 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் ஆகியவை ரயில் துறையில் மாற்றத்தை உருவாக்கும்.
10 புதிய விமான நிலையங்கள், ஐந்து புதிய பெரும் துறைமுகங்கள், 111ஆறுகள் தேசிய நீர்வழிப் பாதைகளாக அறிவிக்கப்பட்டிருப்பது மற்றும் 30க்கும் மேற்பட்ட சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் இதர திட்டங்களில் அடங்கும். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெகா வாட் மின்சாரம் வெறும் மூன்று ஆண்டுகளில் நாங்கள் அதிகரித்திருக்கிறோம்.
மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், நாம் உலகின் ஆறாவது பெரிய உற்பத்தியாளர் ஆகியிருக்கிறோம். இதுதான் பசுமை மற்றும் நீடித்த எதிர்காலத்திற்கான நமது உறுதிப்பாடு. உலகின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு கதை இந்தியாவின் உருவாகிக் கொண்டிருக்கிறது.
நான்காவதாக, நமது உற்பத்தி துறை மீண்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீட்டில் செங்குத்தான வளர்ச்சி காணப்படுகிறது – 2013-14ல் 36 பில்லியன் டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு 2016-17ல் 60 பில்லியன் டாலராகியுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்த தொழில்கள் துறையிலும் சிறப்பு கண்ணோட்டம் அளிக்கப்படுகிறது.
துறை சார்ந்த நவீனம் மற்றும் உற்பத்தி திட்டங்கள், குறைந்த நிறுவன வரி விகிதம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி வரிப் பயன்களை கவர்ச்சிகரமானதாக ஆக்கியதுடன் எளிதாகவும் ஆக்கியிருக்கிறோம். இந்திய புதிய நிறுவனங்கள் துறை வளர்ச்சியை சந்தித்து வருவதுடன் இப்போது உலகிலேயே பெரிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஏழைகள் மற்றும் விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு நுண் கடன் அளிக்கும் திட்டம் எனக்கு மிகவும் பிடித்தமான திட்டமாகும். கடந்த மூன்றாண்டுகளில் 128 மில்லியன் கடன்கள் 90 பில்லியன் டாலர் அளவுக்கு அளிக்கப்பட்டுள்ளது – இந்தக் கடன்களில் 74 சதவீதம் மகளிருக்கு சென்றுள்ளது, ஆம் 74 சதவீதம் மகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவதாக நிதி உள்ளடக்கத்தில் நாங்கள் வலிமையான கண்ணோட்டம் கொண்டுள்ளோம். கடந்த மூன்றாண்டுகளில் நாங்கள் 316 மில்லியன் வங்கிக் கணக்குகளை வங்கி கணக்கு இல்லாதவர்களுக்காக தொடங்கி இருக்கிறோம். தற்போது இந்தியாவின் 99 சதவீத குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு உள்ளது.
இது ஒவ்வொரு குடிமகனின் கண்ணியம் மற்றும் அடையாளத்திற்கான புதிய அடையாளமாக, அதிகாரமளித்தல் மற்றும் உள்ளடக்கத்திற்கான குறிப்பிடத்தக்க கதையாக உள்ளது. இந்தக் கணக்குகளில் 12 பில்லியன் டாலருக்கும் கூடுதலாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
50 பில்லியன் டாலருக்கும் கூடுதலான அரசுப் பயன்கள் பயனாளிகளுக்கு நேரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது கட்டுப்படியாக கூடிய ஓய்வூதியம் மற்றும் காப்பீடுகளை அணுகுகின்ற்னர். முன்பு இது அவர்களுக்கு வெறும் கனவாகவே இருந்தது. இந்த உலகில் தற்போது வங்கிச் சேவைகள் விரிவாக்கம் இந்த வேகத்தில் இந்த அளவுக்கு நடந்திருக்கிறது.
ஆறாவதாக தற்போது இந்தியா முழுவதும் ஒரு டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் விரல் ரேகை அடையாளம், ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு மொபைல் ஃபோன் மற்றும் ஒவ்வொருவரும் அணுகும் வகையில் ஒரு வங்கிக் கணக்கு ஆகியவை மூலம் ஒவ்வொரு இந்தியனின் வாழ்விலும் மாற்றம் ஏற்படுகிறது.
மேலும் இது அரசு நிர்வாகம், பொதுச் சேவை, ஏழைகளுக்கான பயன்கள் விநியோகம், வங்கிச் சேவை மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை அணுகும் வசதியில் வைத்தல் என இந்தியாவில் அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
2017ம் ஆண்டில் யு.பி.ஐ. அடிப்படையிலான பரிவர்த்தனைகள் ஏழாயிரம் சதவீதம் வளர்ந்தது. ஜனவரியில் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் 2 டிரில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டது. நாம் இருநூற்றி ஐம்பது ஆயிரம் கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை இணைப்புக்களை உருவாக்கி வருகிறோம். இந்த அனைத்து கிராமங்களிலும் நாம் பொது சேவை மையங்களை அமைத்து வருகிறோம்.
இவை பல டிஜிட்டல் சேவைகளை அளிப்பதுடன் ஆயிரக்கணக்கான ஊரக வேலைகளை உருவாக்கும். அடல் புதுமை இயக்கத்தின் கீழ், நாம் 100 அடைகாக்கும் மையங்களைத் திறக்க இருப்பதுடன் 2400 டிங்கரிங் ஆய்வகங்களை இந்தியா முழுவதும் திறந்திருக்கிறோம். நமது குழந்தைகள் புதுமையாளர்களாகவும் வேலை உருவாக்குவோராகவும் ஆக இவை திறக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஆய்வகங்களில் இருந்து வந்த ஒருவர் இங்கு அரங்கு அமைத்திருக்கிறார்.
ஏழாவதாக, அடுத்த இரண்டு தசாப்தங்களில் உலகின் மிகப்பெரிய நகரமயமாக்கல் அலையை இந்தியா எதிர்கொள்ளும். இது ஒரு சவால் என்றபோதிலும், இது ஒரு பெரும் பொறுப்பு மற்றும் வாய்ப்பு ஆகும்.
100 நகரங்களை பொலிவுறு நகரங்களாகவும், 115 விருப்பம் தெரிவிக்கும் மாவட்டங்களை முன்னேற்றத்திற்கான புதிய நகரங்களாகவும் மாற்றுவதற்கு நாங்கள் செயலாற்றி வருகிறோம்.
அதிக மக்கள் போக்குவரது, திடக்கழிவு மேலாண்மை, மாசு கட்டுப்பாடு, நீடித்த குடியிருப்பு மற்றும் கட்டுப்படியாகக் கூடிய வீட்டு வசதி ஆகியவை நாம் அதிக முன்னுரிமை அளிக்கும் திட்டங்களாகும்.
நமது எண்ணூறு பில்லியன் இளைஞர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை மற்றும் வாய்ப்புகளை அளிக்க உயர் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும் திறன்களிலும் நாங்கள் முதலீடுகளை செய்து வருகிறோம். சிங்கப்பூரில் இருந்து நாம் பயின்று, திறன் மேம்பாட்டிற்கான மேம்படுத்தப்பட்ட பயிற்சி நிறுவனங்களை நாம் அமைத்து வருகிறோம்.
மேலும் நமது உயர்கல்வி அமைப்பை மேலும் வலுப்படுத்த இந்த நிதியாண்டில் நாம் 15 பில்லியன் டாலர் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
ஒன்பதாவதாக, தசாப்தங்களுக்கு முன்பாக பசுமைப் புரட்சிக்குப் பின் இல்லாத அளவுக்கு வேளாந்துறை முன்னுரிமையை பெற்று வருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் மற்றும் புதிய இந்தியா பிறக்க இருக்கும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக ஆக்கும் நோக்கத்தை நாம் கொண்டுள்ளோம்.
இதற்காக நாம் தொழில்நுட்பம், தொலை உணர்வு, இண்டர்நெட், டிஜிட்ட்ல் நிதி முறை, மென் கடன், காப்பீடு, மணல் ஆரோக்கிய மேம்பாடு, பாசனம், விலை மற்றும் இணைப்பு ஆகியவற்றை நாம் பயன்படுத்துகிறோம்.
பத்தாவதாக 2022க்குள் எளிதான வாழ்க்கை என நான் கூறுவதை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். உதாரணத்திற்கு 2022ம் ஆண்டுக்குள் ஒவ்வொருவருக்கும் வீடுகள் இருக்க 50 மில்லியன் புதிய வீடுகள் அமைக்கப்படும்.
கடந்த மாதம் நாம் ஒரு மைல்கல்லை எட்டினோம். நமது 600 ஆயிரம் கிராமங்களும் மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார இணைப்பை அளிக்க நாம் செயலாற்றி வருகிறோம்.
இந்த ஆண்டு நாம் ஆயுஷ்மான் பாரத் என்ற தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். இது 100 மில்லியன் குடும்பங்கள் அல்லது 500 மில்லியன் இந்தியர்களை ஆண்டுக்கு 8000 டாலர் அளவுக்கு உள்ளடக்கும். இது உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமாகும்.
தரமான வாழ்க்கை என்பது தூய்மையான மற்றும் நீடித்த வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டதாகும். இது நமது முதன்மையான இலக்குகளில் ஒன்றாகும். இது நமது பாரம்பரியத்தில் வேரூன்றி இருப்பதுடன் இந்த கோளின் எதிர்காலத்தில் நமது உறுதிப்பாடாகும். மேலும் இது இப்போது இந்தியாவின் பொதுக் கொள்கை மற்றும் பொருளாதார விருப்பங்களின் ஒவ்வொரு அம்சத்தையும் கூறுகிறது.
இது தூய்மை இந்தியா, தூய்மையான ஆறுகள், தூய்மையான காற்று மற்றும் தூய்மையான நகரங்கள் என்ற நமது இயக்கத்தை உள்ளடக்கியதாகும். இது ஒரேயொரு காரணத்தால் இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏற்படுகிறது: அதுதான் நமது மக்கள். 35 வயதுக்கும் குறைவான 65 சதவீதத்துடன் கூடிய 125 கோடி மக்கள் கொண்ட நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது, மாற விரும்புகிறது, புதிய இந்தியாவை அடைய விரும்புகிறது. இது நிர்வாகம் மற்றும் அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
நண்பர்களே,
இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் வேகம் மற்றும் திசை குறித்த முழுமையான தெளிவு மற்றும் நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் வர்த்தகம் செய்வதை நாம் எளிதாகவும் சுமூகமாகவும் ஆக்குவோம். நாம் வெளிப்படையான, நிலையான மற்றும் நியாயமான சர்வதேச வணிக ராஜ்ஜியத்திற்காக செயலாற்றுவோம். நமது கிழக்கு நோக்கிய ஈடுபாடு வலிமையானதாக இருப்பதுடன் பொருளாதாரம் நமது கிழக்கு நோக்கிய கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும்.
வணிகம் மற்றும் முதலீட்டு அலையில் அனைத்து நாடுகளையும் உயர்த்தும் முழுமையான, நியாயமான, சமநிலை உடன்படிக்கையை நாம் காண விரும்புகிறோம். இந்தியா – சிங்கப்பூர் முழுமையான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை ஆய்வினை நாம் சமீபத்தில் நிறைவு செய்து, அதனை மேம்படுத்த செயலாற்றுவோம்.
நாம் அனைவருடனும், ஆசியானில் உள்ள அனைவருடனும் இணைந்து செயலாற்றி பிராந்திய முழுமையான பொருளாதார கூட்டணி விரைவாக நிறைவடைய செயலாற்றுவோம். இந்த பிராந்தியத்துடன் இந்தியாவின் ஈடுபாடு வளரும் போது சிங்கப்பூர் ஆசியானுக்கான மற்றும் பரந்த கிழக்கிற்கான நுழைவு வாயிலாக இருக்கும். இந்த ஆண்டு ஆசியானுக்கு சிங்கப்பூரின் தலைமை ஆசியானுடனான இந்தியாவின் உறவுகளை மேலும் முன்னெடுத்துச் செல்லும்.
நண்பர்களே,
நிறைவாக, சிங்கப்பூருக்கு இந்தியாவை விட வேறு சிறந்த வாய்ப்புகள் இல்லை. இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இருப்பது போல வெகு சில நாடுகளுக்கே இத்தனை பொதுவான அம்சங்களும் வாய்ப்புகளும் உள்ளன. நமது சமூகங்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிப்பதாக இருப்பதுடன் இதே எதிர்காலத்தை நமது பிராந்தியம் பெற நாம் விரும்புகிறோம்.
சட்டத்தின் ஆட்சி அடிப்படையிலான உலகத்தை நாம் கொண்டிருப்பதுடன் திறந்தவெளி மற்றும் ஒரு நிலையான வர்த்தகம் அமைப்பால் இணைக்கப்பட்டிருக்கிறோம். அனைத்துக்கும் மேலாக நாம் உலகின் மிகவும் திறன் கொண்ட, நிபுணத்துவம் கொண்ட உறுதிமிக்க இந்திய வம்சாவளியினை கொண்டிருப்பதுடன் பெருமிதம் கொண்ட சிங்கப்பூர் வாசிகளாக இந்திய பாரம்பரியம் கொண்ட இந்திய வம்சாவளியை கொண்டவர்களாக இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த தயாராக இருக்கிறோம்.
வரையற்ற வாய்ப்புகளை கொண்ட உலகமாக எதிர்காலம் உள்ளது. அது நமக்கானது. அதனை கையகப்படுத்த உறுதியும் விருப்பமும் தேவை. நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை இந்த மாலைப்பொழுது சொல்கிறது. எதிர்காலத்திற்குள் இரண்டு சிங்கங்களும் இணைந்து பயணிப்போம்.
நன்றி.
அனைவருக்கும் மிக்க நன்றி.