மேடையில் அமர்ந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்களே,
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் விருந்தினர்களே,
பெரியோர்களே,
தாய்மார்களே,
நிலைத்த வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாட்டை தொடங்கி வைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்திருப்பவர்களே, உங்களை நான் வரவேற்கிறேன்.
உச்சி மாநாட்டு மன்றத்திற்கு வெளியே, நீங்கள் இந்த நகரத்தின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்து அறிந்துகொள்ள நேரம் இருக்கும் என்று நம்புகிறேன். இந்த உச்சி மாநாடு நமக்காகவும் நமது எதிர்கால சந்ததியினருக்காகவும் நிலைத்த கோளை விட்டுச் செல்ல வேண்டுமென்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை செயல்படுத்துவதாகும்.
எங்கள் நாட்டின் நீண்ட வரலாறு மற்றும் மனிதனையும் இயற்கையையும் அருகருகில் வைத்திருக்கும் நல்லிணக்கப் பாரம்பரியம் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நமது மதிப்புமிகு வாழ்க்கை முறையுடன் ஒருங்கிணைந்த பகுதியான இயற்கைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.
நமது பாரம்பரிய நடைமுறைகள் நிலைத்த வாழ்க்கை முறைக்கு பங்களித்துள்ளது. இயற்கை நமது அன்னை; நாம் அதன் குழந்தைகள் எனவே இயற்கையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தொன்மையான மந்திரத்தை கடைபிடித்து வாழ முயல்வதே நமது குறிக்கோளாகும். மிகப் பழமையான அதர்வண வேதத்தில் இது குறிப்பிடப்படுகிறது.
நமது செயல்பாடுகள் மூலம் நாம் வாழ்க்கையை வாழ விரும்புவது இயல்புதான் அனைத்து ஆதாரங்களும், வளங்களும் இயற்கைக்கும், கடவுளுக்கும் சொந்தமானவை என்று நாம் நம்புகிறோம். நாம் இந்த வளங்களைப் பாதுகாக்கும் காவலர்கள் மட்டுமே. மகாத்மா காந்தியும் இதே தத்துவத்தை போதித்திருக்கிறார்.
அண்மையில் வெளியிடப்பட்ட நேஷனல் ஜியாக்ரபி பசுமைக் குறியீட்டு அறிக்கை 2014 நுகர்வோர் விருப்பம் குறித்த சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மதிப்பிட்டிருந்தது. அதில் பசுமை நுகர்வு மாதிரியின் அடிப்படையில் இந்தியா தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பல ஆண்டுகளாக நிலைத்த வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாடு அன்னை பூமியின் தூய்மையைப் பாதுகாக்கும் நமது நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை உலகத்தின் மற்றப் பகுதிகளுக்கும் பரப்பியுள்ளது.
2015 –ல் பாரிசில் நடந்த 21 –வது மாநாட்டில் சாதாரண மனிதனின் விருப்பம் வெளிப்பட்டது. நமது பூமியை நிலைத் தன்மையோடு பாதுகாக்கும் பொதுவான விருப்பத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்பட நாடுகள் ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டன. மாற்றத்தைக் கொண்டுவர உலகமே உறுதி பூண்டதைப் போலவே நாமும் அந்த நிலையை எடுத்தோம். உலகம் இந்த நிலையை வசதியற்ற உண்மை என்று விவாதித்துக் கொண்டிருந்த போது நாம் அதை வசதியான நடவடிக்கை என்று மாற்றினோம். இந்தியா தனது வளர்ச்சியில் நம்பிக்கை வைத்திருக்கும் அதே நேரம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உறுதி பூண்டுள்ளது.
நண்பர்களே, இந்த எண்ணத்தின் அடிப்படையில் இந்தியா பிரான்சுடன் சேர்ந்து சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கு முன்முயற்சி எடுத்தது. தற்போது அதில் 121 உறுப்பினர்கள் உள்ளனர். பாரிஸ் மாநாட்டிற்கு பின்னர் நிகழ்ந்த மிக முக்கியமான உலகளாவிய சாதனை இது என்பதில் ஐயமில்லை. தேசிய உறுதிப்பாட்டுப் பங்களிப்பின் ஒரு பகுதியாக இந்தியா 2005 முதல் 2030 வரை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் தன்மைக்கேற்ப கார்பன் உமிழ்வை 35 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக குறைக்க இந்தியா உறுதி அளித்தது.
2030 –ம் ஆண்டிற்குள் 250 கோடியிலிருந்து 300 கோடி டன் கரியமில வாயுவுக்கு சமமான கார்பன் தொட்டியை உருவாக்கும் நமது குறிக்கோளை எட்டுவது பலருக்கு மிகவும் கடினமாகத் தோன்றியது இருப்பினும் நாம் அந்த பாதையை நோக்கி உறுதியாக முன்னேறிச் செல்கிறோம். இந்தியா கோபன்கேஹன் மாநாட்டில் அளித்த உறுதியின்படி ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20 முதல் 25 சதவீத உமிழ்வை குறைக்கும் பாதையில் இந்தியா சரியாக பயணிக்கிறது என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை கூறுகிறது.
2030 தேசிய உறுதிப்பாட்டுப் பங்களிப்பை நோக்கிய நமது பயணம் சரியான பாதையில் செல்கிறது. ஐ.நா. நிலைத்தன்மையுள்ள வளர்ச்சி இலக்கு நம்மை சமத்துவம், பருவநிலை நீதி பாதையில் நிறுத்தியுள்ளது. நமக்குத் தேவையான அனைத்தையும் நாம் செய்துவரும் நிலையில், மற்றவர்களும் தாங்கள் அளித்த உறுதிமொழியின்படி நடந்து நம்முடன் சேர வேண்டுமென என்று எதிர்பார்க்கிறோம்.
பாதிப்புக்கு இலக்காகக் கூடிய அனைத்து மக்களுக்கும் பருவநிலை நீதி கிடைக்க வேண்டுமென்பது நமது அழுத்தமான நிலைப்பாடு ஆகும். சிறந்த நிர்வாகம் நிலைத்த வாழ்வாதாரம் தூய்மையான சுற்றுச்சூழல் மூலமாக எளிமையான வாழ்க்கையில் இந்தியர்களாகிய நாம் கவனம் செலுத்திவருகிறோம். தூய்மை இந்தியா பிரச்சாரம் தலைநகர் தில்லியின் தெருக்களிலிருந்து நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைந்துள்ளது. சிறந்த சுகாதாரம், சிறந்த ஆரோக்கியம், சிறந்த பணியிடச்சூழல் அதன் மூலம் கிடைக்கும் சிறந்த வருமானம் மற்றும் வாழ்க்கைக்கு தூய்மை வழிவகுக்கிறது.
விவசாயிகள் தங்களது வேளாண் கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக மதிப்புமிக்க ஊட்டச்சத்தாக மாற்றுவதை உறுதி செய்யும் மிகப்பெரிய பிரச்சாரத்தை நாம் தொடங்கினோம்.
உலகம் முழுவதையும் தூய்மையான இடமாக உருவாக்கும் நமது தொடர்ச்சியான உறுதிப்பாட்டை எடுத்துக் கூறும் வகையில் 2018 –ம் ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் தினத்தை நாம் கொண்டாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கும் நீர் இருப்புக் குறித்த பிரச்சனையை சமாளிக்க வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் கங்கையை தூய்மைப்படுத்தும் முன்முயற்சியை நாம் தொடங்கியுள்ளோம். ஏற்கெனவே பலன் அளிக்கத் தொடங்கியிருக்கும் இந்த திட்டம் நமது பெருமைமிகு நதியான கங்கைக்குப் புத்துயிரூட்டும்.
நமது நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். விவசாயத்திற்கு தொடர்ச்சியாக தண்ணீர் கிடைப்பது அவசியமாகும். எந்த நிலமும் தண்ணீரின்றி இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய பிரதம மந்திரி க்ரிஷி சின்சாய் யோஜனா தொடங்கப்பட்டுள்ளது. “ஒவ்வொரு துளிக்கும் அதிகப் பயிர்” என்பதே நமது குறிக்கோளாகும்.
உயிரி -பல்வகைத்தன்மை பாதுகாப்புக் குறித்த விஷயத்தில் நமக்கு நியாயமான இடம் உள்ளது. உலகின் நிலப்பகுதியில் 2.4 சதவீத அளவிற்கு உள்ள இந்தியா 7 முதல் 8 சதவீத அளவிற்கு பல்வகைப்பட்ட பயிர்களை சாகுபடி செய்து 18 சதவீத மக்கள் தொகைக்கு அளித்துவருகிறது.
யுனெஸ்கோவின் மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டத்தில் இந்தியா தனது 18 உயிர்க்கோளில் 10 –க்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இது நமது வளர்ச்சி பசுமையானதாக இருப்பதற்கும், நமது வனவிலங்கினம் அபரிமித வளர்ச்சியைப் பெற்றுள்ளதற்கும் இது சான்றாகும்.
நண்பர்களே, நல்ல நிர்வாகத்தின் பலன்கள் அனைத்தும் ஒவ்வொருவரையும் சென்று சேர வேண்டுமென்பதில் இந்தியா எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்த தத்துவத்தின் விரிவாக்கம்தான் சப்கா சாத் சப்கா விகாஸ் என்னும் நமது இயக்கமாகும். இந்த தத்துவத்தின் மூலம் நமது மிகவும் நலிவடைந்த பகுதிகளில் சில, மற்ற இடங்களுக்கு இணையாக சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை நாம் உறுதி செய்து கொண்டிருக்கிறோம்.
இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் மின்சாரம், தூய்மையான சமையல் தீர்வு கிடைக்கவேண்டியது மிகவும் அடிப்படையானதாகும். இது தான் எந்த பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமாக இருக்கிறது.
இருப்பினும், இந்த தீர்வு கிடைக்கப்பெறாமல் இந்தியாவிலும், வெளியிலும் ஏராளமானோர் போராடிக்கொண்டிருக்கின்றனர். சுகாதாரமற்ற சமையல் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது வீடுகளில் காற்று மாசுக்குக் காரணமாகிறது. கிராமப்புற சமையல் அறைகளில் ஏற்படும் புகை கடுமையான சுகாதாரக்கேட்டிற்கு காரணமாகிறது என்று என்னிடம் சொல்லப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு உஜ்வாலா, சவுபாக்கியா என்னும் இரண்டு தொலைநோக்குத் திட்டங்களை நாம் தொடங்கினோம். இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. காட்டிலிருந்து பெறப்படும் காய்ந்த விறகு மூலமோ அல்லது பசுஞ்சாணத்திலிருந்து செய்த வரட்டிகள் மூலமோ அடுப்பை எரித்து தாய்மார்கள் தங்களது குடும்பத்தினருக்கு உணவளித்து வந்த காலம், இந்த இரட்டைத் திட்டங்கள் மூலம் விரைவில் காணாமல் போய்விடும். பாரம்பரிய விறகு அடுப்புகள் இனி நமது சமூக வரலாற்றுப் புத்தகப்பாடங்களில் மட்டுமே படங்களாக இடம்பெறும்.
இதுபோல சவுபாக்கியா திட்டத்தின் மூலம், இந்த ஆண்டிற்குள் அநேகமாக நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார வசதி அளிக்க நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆரோக்கியமான நாடுதான் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். இதைக் கருத்தில் கொண்டு, அரசின் நிதி உதவியுடன் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை நாம் தொடங்கியிருக்கிறோம். இந்த திட்டம் 100 மில்லியன் (10 கோடி) ஏழைக் குடும்பங்களுக்கு பலனளிக்கும்.
“அனைவருக்கும் வீட்டுவசதி”, “அனைவருக்கும் மின்சாரம்” என்ற நமது முன்முயற்சிகள், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டுமென்ற அதே கருத்திலிருந்து உருவாக்கப்பட்டவையாகும்.
நண்பர்களே, உலகின் மக்கள் தொகையில் 6 –ல் ஒரு பகுதியை இந்தியா கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்களது வளர்ச்சிக்கான தேவை அளப்பரியது. எங்களது வறுமை அல்லது முன்னேற்றம், உலக வறுமை அல்லது முன்னேற்றத்தின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இந்திய மக்கள் நவீன வசதிகளையும், வளர்ச்சிக்குரிய வழிகளையும் பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருந்தார்கள்.
இந்த இலக்கை எதிர்பார்த்ததை விட விரைந்து முடிக்க நாம் உறுதி பூண்டுள்ளோம். இருப்பினும் இவை அனைத்தையும் சுத்தமாகவும் பசுமை வழியிலும் செய்து முடிப்போம் என்று நாம் கூறியிருக்கிறோம். ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம். நாங்கள் ஒரு இளம் நாடு இளைஞர்களுக்கு வேலை வழங்க நாங்கள் இந்தியாவை உலக அளவில் உற்பத்தி மையமாக உருவாக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக நாங்கள் மேக்-இன்-இந்தியா இயக்கத்தை தொடங்கியுள்ளோம் அதே சமயம் நாங்கள் குறைகளற்ற, பாதிப்பற்ற உற்பத்தியை அறிவுறுத்தி வருகிறோம்.
உலகின் வெகுவேகமாக வளர்ந்துவரும் முக்கியப் பொருளாதாரம் என்ற வகையில் எங்களது எரிசக்தி தேவை அதிகமாகும் எனினும் 2022 –ம் ஆண்டுவாக்கில் புதுப்பிக்கக்கூடிய ஆதாரங்கள் மூலம் 175 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதில் 100 ஜிகாவாட் சூரியசக்தியின் மூலமும், 75 ஜிகாவாட் காற்றாலை மற்றும் இதர வளங்கள் மூலமும் கிடைக்கும். மூன்றாண்டுக்கு முன்பு வெறும் மூன்று ஜிகாவாட்டாக இருந்த சூரியசக்தி உற்பத்தி தற்போது 14 ஜிகாவாட்டிற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.
இத்துடன் சூரியசக்தி மின்சார உற்பத்தியில் உலகிலேயே 5 –வது இடத்தை நாம் பிடித்துள்ளோம். இதுமட்டுமல்லாமல் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி உற்பத்தியில் 6 –வது இடத்தை நாம் பிடித்துள்ளோம்.
நகரமயமாக்கல் அதிகரித்துவரும் நிலையில் நமது போக்குவரத்தும் வளர்ச்சி அடைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் நாம் மக்கள் அதிகமாக சென்றுவரும் மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்து திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறோம். நெடுந்தொலைவிற்கான சரக்குப் போக்குவரத்திற்கு தேசிய நீர்வழிகளைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். பருவநிலை மாற்றத்திற்கு எதிராக ஒவ்வொரு மாநிலமும் தனது செயல் திட்டத்தைத் தயாரித்துவருகிறது.
இது நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வழியில் நமது பணிகள் இருப்பதை உறுதி செய்யும். அதிகமாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் பலவற்றையும் பாதுகாத்து வருகிறோம். பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிரா ஏற்கெனவே இந்த வகையிலான திட்டத்தை கடைபிடித்துள்ளது. நமது நிலைத்த வளர்ச்சி நோக்கங்களை நாமாக எட்ட முயற்சி மேற்கொண்டுள்ளோம். ஆனால் கூட்டு முயற்சிதான் முக்கியமான ஒன்றாகும். அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். வளர்ச்சி அடைந்த உலகம் இந்த இலக்குகளை விரைந்து எட்ட நமக்கு உதவ முடியும்.
வெற்றிகரமான பருவநிலை நடவடிக்கைக்கு நிதி ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை எளிதில் அணுகவேண்டியது மிகவும் அவசியமாகிறது. இந்தியா போன்ற நாடுகள் தங்களது நிலைத்த வளர்ச்சியைப் பராமரிக்கவும் அதன் மூலம் ஏழைகள் பயன்பெறவும், தொழில்நுட்பம் உதவ முடியும்.
நண்பர்களே,
மனிதர்களாகிய நாம் இந்தக் கோளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் நாம் இங்கே இன்று கூடியுள்ளோம். இந்தக் கோளும், நமது அன்னை பூமியும் ஒன்று என்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியமாகும். அத்துடன் இனம், மத வேறுபாடுகளை களைந்து நாம் ஒன்றாக இணைந்து பூமியைப் பாதுகாக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இயற்கையையும், மனிதர்களையும் சார்ந்திருக்கும் நமது ஆழ்ந்த தத்துவத்தின்படி இந்த பூமியை மிகவும் பாதுகாப்பான நிலைத்த இடமாக மாற்றுவதற்கான பயணத்தில் எங்களுடன் சேருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
நிலைத்த வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாடு மிகப்பெரிய வெற்றியைப்பெற நான் வாழ்த்துகிறேன்.
நன்றி.