கென்யாவில் நைரோபி நகரில் நடைபெற்ற ஸ்ரீகட்ச்சி லேவா படேல் சமாஜ் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் பல்வேறு நல செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் கட்ச்சி லேவா படேல் சமூகத்தவர்களின் பங்களிப்பை, தனது உரையின் போது பிரதமர் பாராட்டினார். கென்யாவின் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் இந்திய சமூகத்தவர்களின் பங்களிப்பையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
அனைத்து வகையிலான வளர்ச்சிகளிலும், குறிப்பாக கட்ச் பகுதியில் 2001-ல் பூகம்பம் ஏற்பட்ட பிறகு மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்புப் பணிகளில் பங்களிப்பு செய்ததிலும் கட்ச்சி சமாஜத்தின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். “ஒரு காலத்தில் பாலைவனப் பகுதியாகக் கருத்தப்பட்ட கட்சி பகுதி, முக்கியமான சுற்றுலா தளமாக மாற்றப் பட்டிருக்கிறது” என்று அவர் கூறினார். தாம் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, கட்ச் பிராந்தியத்தில் தொலைவில் உள்ள பகுதிகளுக்கும் நர்மதா ஆற்றின் நீரை கொண்டு செல்வதில், தமது அரசு மேற்கொண்ட நீடித்த முயற்சிகளை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்தப் பிராந்தியத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய மற்றும் மாநில அரசின் இரட்டை என்ஜின் சக்தியுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை பிரதமர் மேற்கோளிட்டுக் கூறினார். “கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பிராந்தியம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளது” என்று அவர் தெரிவித்தார். கட்ச் மற்றும் ஜாம்நகர் இடையே குஜராத்தில் ரோ-ரோ ( Ro-Ro) சேவை தொடங்கப்படுவது பற்றி அவர் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே பங்கேற்புகள் அதிகரித்து வருவதாக பிரதமர் கூறினார். “இந்தியா ஆப்பிரிக்கா உச்சி மாநாடு மற்றும் ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி கூட்டம் ஆகியவை சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்டன” என்று அவர் குறிப்பிட்டார். இப்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரும், பிரதமர் என்ற வகையில் தாமும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 20-க்கும் மேற்பட்ட முறைகள் பயணம் மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை, குறிப்பாக இன்னும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளாதவர்களை, 2019 ஜனவரியில் கும்பமேளா நடைபெறும் சமயத்தில் வருகைதந்து, இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தை அனுபவித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.
ஸ்ரீகட்ச்சி லேவா படேல் சமாஜத்தின் நைரோபி – மேற்கு வளாகத்தின் வெள்ளிவிழாவை ஒட்டி கூடியிருந்த அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.