எனது அமைச்சரவை சகாக்கள் டாக்டர் ஹர்ஷ்வர்தன், டாக்டர் மகேஷ் சர்மா, திரு.மனோஜ் சின்ஹா அவர்களே,
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட நிர்வாக இயக்குநர் அவர்களே,
சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் அமைச்சக செயலாளர் அவர்களே,
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள இதர பெருமை மிகு பிரமுகர்களே,
பெரியோரே, தாய்மார்களே,
இந்தியாவின் 130 லட்சம் மக்கள் சார்பில் உங்கள் அனைவரையும் புதுதில்லிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நிகழ்ச்சியின் போது, உலக நாடுகளின் பிரதிநிதிகள் தில்லியின் வரலாற்று அம்சங்களையும் சிறப்புக்களையும் காண்பதற்கு சிறிது அவகாசம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
2018 உலக சுற்றுச்சூழல் தின அகில உலக கொண்டாட்டத்தை நடத்துவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.
இந்த முக்கியமான நிகழ்ச்சியை நாம் கொண்டாடும் வேளையில், நமது உலக சகோதரத்துவம் குறித்த தொன்மையான கொள்கைகளை நினைவு கூர்கிறோம்.
இவை மிகப்பிரபலமான வசுதைவ குடும்பகம் என்ற சமஸ்கிருத சொற்றொடரில் அடங்கி உள்ளது. இதற்கு உலகம் ஒரு குடும்பம் என்று பொருள்.
மகாத்மா காந்தியடிகள் பரிந்துரைத்த உபதேசம் இதே கருத்தை எதிரொலிக்கிறது. இந்த பூமி “ஒவ்வொருவரின் சேவையை நிறைவு செய்யும் வகையில் போதுமானவற்றை வழங்குகிறது, ஆனால், ஒவ்வொருவரின் பேராசையை நிறைவு செய்ய அல்ல” என்று அவர் கூறினார்.
நமது பாரம்பரியம் இயற்கையுடன் நல்லிணக்கமாக வாழுவதன் முக்கியத்துவத்தை நீண்டகாலம் தொட்டே வலியுறுத்தி வருகிறது.
இயற்கையின் கூறுகளின்பால் நமக்கிருக்கும் பக்தி இதனை எதிரொலிக்கிறது. நமது திருவிழாக்கள், நமது தொன்மையான வாசகங்கள் ஆகியவற்றிலும் இது காணக்கிடக்கிறது.
பெரியோர்களே, தாய்மார்களே,
இன்று உலகில் மிக விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரம் இந்தியா. எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் நாம் உறுதியுடன் உள்ளோம்.
இந்த விஷயத்தை நிலைத்த தன்மையுடனும், பசுமைத் தன்மையுடனும் நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.
இதனடிப்படையில் நாங்கள் 4 கோடி புதிய சமையல் எரிவாயு இணைப்புகளை கடந்த இரண்டாண்டுகளில் வழங்கியுள்ளோம்.
இதன் காரணமாக கிராமப்புற பெண்கள் நச்சுப்புகை துயரத்திலிருந்து காப்பற்றப்பட்டுள்ளனர்.
இது அவர்கள் விறகை சார்ந்து இருப்பதையும் அகற்றி உள்ளது
இதே உறுதிப்பாட்டுடன்தான் இந்தியா எங்கும் 3,00,000 எல்இடி பல்புக்களை வழங்கியுள்ளோம்.
இதனால் மின்சாரம் சிக்கனப்படுத்தப்படுவதுடன், காற்றுவெளியில் பெரிய அளவிலான கரியமில வாயு வெளியிடப்படுவதையும் தடுத்து நிறுத்தியுள்ளோம்.
புதுப்பிக்கக்கூடிய மின்சார உற்பத்தித் திட்டங்களை பெரிய அளவில் நடைமுறைப்படுத்துவதில் நாம் ஈடுபட்டுள்ளோம். 2022-ல் 175 கிகாவாட் சூரியசக்தி மற்றும் காற்று சக்தி மின்சாரத்தை உற்பத்திச் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
நாங்கள் ஏற்கெனவே உலகின் ஐந்தாவது மிகப்பெரிய சூரியசக்தி உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளோம். மேலும் புதுப்பிக்கக்கூடிய மின்சார உற்பத்தியில், உலகின் 6-வது மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் உள்ளோம்.
ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சார இணைப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதனால் சுற்றுச்சூழலின் தரத்தை குறைக்கும் எரிப்பொருட்களை நம்பியிருக்கும் நிலையை வெகுவாக குறைத்து வருகிறோம்.
மண்ணிலிருந்து எடுக்கப்படும் எரிப்பொருட்களை நம்பியிருக்கும் நிலைமையையும் குறைத்து வருகிறோம். எங்கெல்லாம் சாத்தியமோ, அங்கெல்லாம் எரிபொருள் ஆதாரங்களை மாற்றியமைத்து வருகிறோம். நகரங்களையும், பொதுமக்கள் போக்குவரத்தையும் மாற்றியமைத்து வருகிறோம்.
எமது நாடு ஒரு இளமையான நாடு. வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் இந்தியாவை உலக உற்பத்தி மையமாக மாற்றி அமைப்பதற்காக பணியாற்றி வருகிறோம்.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் இயக்கத்தை நாம் தொடங்கி உள்ளோம். இந்த வகையில் குறைகள் முற்றிலும் இல்லாத சுற்றுச்சூழலை முற்றிலும் பாதிக்காத உற்பத்தி முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அதாவது குறைபாடு இல்லாத பொருட்கள் உற்பத்தி, சுற்றுச்சூழலுக்கு குந்தகம் விளைவிக்காத நடைமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றுகிறோம்.
நிர்ணயிக்கப்பட்ட தேசிய பங்களிப்பு என்ற வகையில், 2005 முதல் 2030 வரையிலான காலத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 33 முதல் 35 சதவீதம் வரையிலான வாயு வெளியேற்றத்தை குறைக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. 2030-ஆம் ஆண்டு தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பை நிறைவு செய்யும் பாதையில் பயணப்பட்டுள்ளோம்.
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் இடைவெளி அறிக்கையின்படி, கோபன்ஹேகன் உறுதிமொழியை நிறைவு செய்யும் பாதையில் இந்தியா பயணிக்கிறது. 2020-ஆம் ஆண்டு வாக்கில் வாயு வெளியேற்றத்தை 2005-ஆம் ஆண்டு இருந்த நிலையிலிருந்து 20 முதல் 25 சதவீதம் வரை நாங்கள் குறைத்துவிடுவோம்.
எம்மிடம் வலுவான தேசிய பல்லுயிர் பலதரப்புத்தன்மை அணுகுமுறை உள்ளது. உலகின் மொத்த பரப்பில் 2.4 சதவீதமே கொண்டுள்ள இந்தியா, உலகின் பதிவு செய்யப்பட்ட இனங்கள் சார்ந்த பலதரப்புத் தன்மையில் 7 முதல் 8 சதவீதத்தை தாங்கி நிற்கிறது. அதே வேளையில், இந்தியா உலக மக்கள் தொகையில் 18 சதவீதத்திற்கு இடமளித்து பேணி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் எமது மரங்கள் மற்றும் வனப் பரப்பளவு ஒரு சதவீதம் உயர்ந்துள்ளது.
வன விலங்கு பாதுகாப்புத்துறையிலும் நாங்கள் சிறப்பாக செயலாற்றி வருகிறோம். புலிகள், யானைகள், சிங்கங்கள், காண்டாமிருகம் மற்றும் இதர வன விலங்குகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் தண்ணீ்ர் பிரச்சினை பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதன் அவசியத்தை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். நமாமி கங்கை என்ற பெரிய திட்டத்தை நாம் தொடங்கி உள்ளோம். ஏற்கெனவே நல்ல பலன்களை கொடுக்கத் தொடங்கி உள்ள இத்திட்டம் விரைவில் எமது மதிப்பு மிக்க நதியான கங்கைக்கு புத்துயிரூட்டும்.
அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயத்திற்கு தொடர்ந்து தண்ணீர் கிடைப்பது மிகவும் முக்கியமானது. இந்தியாவில் எந்த வயலும் தண்ணீர் இன்றி இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய பிரதமரின் விவசாயப் பாசனத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் நெறி “ஒவ்வொரு சொட்டு நீருக்கும் மிக அதிகபட்ச பயிர்” என்பதாகும்.
எமது விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக மதிப்புமிக்க ஊட்டச்சத்துப் பொருட்களாக மாற்றுவதை உறுதி செய்யும் பெரிய திட்டம் ஒன்றையும் தொடங்கியுள்ளோம்.
பெரியோரே, தாய்மார்களே,
வசதியற்ற உண்மை என்பதில் உலகின் பெரும்பகுதி கவனம் செலுத்தி வரும் வேளையில் நாங்கள் வசதியான செயல் திட்டம் என்பதை நோக்கி முன்னேறுகிறோம்.
இந்தியா தலைமையில் பிரான்ஸ் நாட்டின் ஒத்துழைப்புடன் வசதியான செயல்திட்டம் என்ற அழைப்பின் அடிப்படையில் சர்வதேச சூரிய சக்தி கூட்டணியை உருவாக்கி உள்ளோம். பாரீஸ் மாநாட்டை அடுத்து, இந்த முயற்சியே உலக மேம்பாட்டின் ஒரு தனியான மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் நலன் காக்கும் திட்டமாகும்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் 45 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் புதுதில்லியில் கூடி சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் அமைப்பு மாநாட்டை நடத்தினார்கள்.
மேம்பாடு என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க முடியும் என்பதையே எமது அனுபவம் காட்டுகிறது. மேம்பாடு தமது பசுமைச் சொத்துக்களுக்கு பாதிப்பாக அமைய வேண்டிய அவசியம் இல்லை.
நண்பர்களே,
உலகச் சுற்றுச்சூழல் தினம் இந்த ஆண்டின் மிக முக்கியமான சவாலுக்கு பதில் நடவடிக்கை எடுக்க விழைகிறது.
பிளாஸ்டிக்குகள் மனித குலத்தின் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இவற்றில் பெரும் பகுதி மறுசுழற்சி செய்யப்படாமலேயே நின்று விடுகிறது. இதில் மோசமான நிலை என்னவென்றால், பிளாஸ்டிக்குகளில் பல மக்கும் தன்மை அற்றவை என்பதுவே.
நமது கடல்சார் சூழல் அமைப்பில் மிக மோசமான தாக்கத்தை பிளாஸ்டிக்குகளின் தூய்மைக் கேடு ஏற்படுத்தி உள்ளது. விஞ்ஞானிகளும் மீனவர்களும் இதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். குறைந்து வரும் மீன்பிடிப்பு அளவு, உயர்ந்து வரும் கடல் வெப்பநிலை, அழிந்து வரும் குடியிருப்பு பகுதிகள் ஆகியன இந்த விளைவுகளில் சில.
கடல் குப்பைகள் குறிப்பாக நுண்ம பிளாஸ்டிக், ஒரு பெரிய எல்லை தாண்டிய பிரச்சினை. நமது கடல்களை காப்பதற்கான “கடல் தூய்மை இயக்கத்தில்” சேரந்து பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது.
பிளாஸ்டிக்கினால் ஏற்படும் கேடுகள் நமது உணவுச் சங்கிலியையும் பாதிக்கத் தொடங்கி உள்ளது. அடிப்படை உணவுப்பொருட்களான உப்பு, பாட்டில் குடிநீர், குழாய் குடிநீர் ஆகியவற்றிலும் நுண்ம பிளாஸ்டிக்குகள் தற்போது கலந்து தூய்மைக்கேட்டை உருவாக்கி வருகின்றன.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த உலகின் பல பகுதிகளில் இருப்பதை விட இந்தியாவில் தனிநபர் பிளாஸ்டிக் நுகர்வு மிகவும் குறைவாகவே உள்ளது.
எமது தேசிய தூய்மை மற்றும் துப்புரவு இயக்கமான தூய்மை இந்தியா இயக்கம் “பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை” பற்றிய சிறப்பு அம்சத்தை உள்ளடக்கியது.
சில காலம் முன்னதாக மத்திய சுற்றுச்சூழல், வனங்கள், பருவநிலை மாற்ற அமைச்சகம் நடத்திய கண்காட்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன். இந்த கண்காட்சி எனது வெற்றி நடவடிக்கைகளில் பலவற்றை காட்சிப்படுத்தியது. இதில் பங்கேற்ற அமைப்புகளில் ஐ.நா. மத்திய அரசு, மாநில அரசுகள், தொழில் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை அடங்கும். இந்த அமைப்புகள் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தூய்மைக் கேட்டை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து நல்ல பணிகளை ஆற்றும் என்று நான் நம்புகிறேன்.
பெரியோரே, தாய்மார்களே,
சுற்றுச்சூழல் தரம் குறைவதால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்கள்.
பொருள் வளத்தைத் தேடும்போது நமது சுற்றுச்சூழல் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
2030 நிலைத்த மேம்பாட்டு அலுவல் பட்டியலின் ஒரு பகுதியாக “எவரையும் பின்தங்க விட்டுவிடாதீர்” என்பதை சேர்த்துள்ளோம். இயற்கை அன்னை நமக்கு அளித்த செல்வங்களை பாதுகாப்பதில் நாம் அனைவரும் சேர்ந்து உழைக்க தவறினால் இதனை உறுதி செய்ய இயலாது.
நண்பர்களே,
இதுவே இந்தியாவின் மார்க்கமாகும். இந்த உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தின்போது இதனை சர்வதேச சமுதாயத்துடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
நிறைவாக 2018 உலக சுற்றுச்சூழல் கொண்டாட்டத்தின் அமைப்பாளர் என்ற முறையில் நிலைத்த மேம்பாட்டுக்கான எமது உறுதிமொழியை வலியுறுத்த விரும்புகிறேன்.
பிளாஸ்டிக் தூய்மைக் கேட்டை முறியடிக்க நாம் அனைவரும் கைகோர்ப்போம். இந்த புவியை வாழ்வதற்கு மேலும் சிறந்த இடமாக்குவோம்.
இன்று நாம் எடுக்கும் முடிவுகள் நமது ஒட்டமொத்த எதிர்காலத்தை வரையறை செய்ய உள்ளன. நமது முடிவுகள் எளிமையானவை அல்ல. ஆனால், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், உள்ளார்ந்த உலகக் கூட்டாண்மை ஆகியவற்றின் மூலம் நாம் சரியான முடிவை எடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
அனைவருக்கும் நன்றி.