பாரதியாரின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சர்வதேச பாரதி விழா 2020-ல் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், வானவில் கலாச்சார மையம் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவின் போது இந்த ஆண்டுக்கான பாரதி விருது பெற்ற அறிஞர் திரு சீனி விஸ்வநாதனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
சுப்பிரமணிய பாரதி பற்றி விளக்குவது மிகவும் கடினம் என பிரதமர் கூறினார். ஒரு தொழிலுடனோ அல்லது பரிமாணத்துடனோ பாரதியை குறுக்கிவிட முடியாது. அவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், மனிதநேயர், மேலும் பல பரிமாணங்களைக் கொண்டவர் என திரு மோடி புகழ்ந்துரைத்தார்.
இந்தப் பெருங்கவியின் கவிதைகள், தத்துவம் உள்ளிட்ட பிரமாதமான படைப்புகள் மட்டுமல்லாமல் அவரது வாழ்க்கையும் வியப்புக்குரியது என பிரதமர் குறிப்பிட்டார். வாரணாசியுடன் மகாகவிக்கு இருந்த நெருங்கிய தொடர்பு பற்றி திரு மோடி நினைவுகூர்ந்தார். பாரதி பற்றி புகழ்ந்துரைத்த பிரதமர், 39 ஆண்டுகள் என்ற குறுகிய வாழ்க்கையில், அவர் ஏராளமாக எழுதினார், ஏராளமானவற்றைப் படைத்தார், பலவற்றில் சிறந்து விளங்கினார் என்று தெரிவித்தார். அவரது எழுத்துக்கள் நமக்கு பெருமை மிகு எதிர்காலத்தை நோக்கிய வழிகாட்டும் விளக்காக உள்ளது என்று அவர் கூறினார்.
நமது இளைஞர்கள் இன்று சுப்பிரமணிய பாரதியிடம் இருந்து ஏராளமானவற்றை கற்றுக் கொள்ளலாம் என பிரதமர் குறிப்பிட்டார். மிக முக்கியமாக தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அச்சம் என்பது சுப்பிரமணிய பாரதியிடம் இருந்ததே இல்லை. ‘’ அச்சமில்லை, அச்சமில்லை, உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே’’ என்ற பாரதியின் பாடலைக் குறிப்பிட்ட பிரதமர், புதுமையிலும், திறமையிலும் முன்னணியில் திகழும் இன்றைய இளம் இந்தியாவின் எழுச்சியை அவர் கண்டார் எனக் குறிப்பிட்டார். இந்தியாவின் ஸ்டார்ட் அப் வெளி மனித குலத்துக்கு புதியவற்றை அளித்து வரும் அச்சமற்ற இளைஞர்களால் நிரம்பியுள்ளது என அவர் தெரிவித்தார். நம்மால் முடியும் என்ற எழுச்சி நமது நாட்டுக்காகவும், நமது புவிக் கோளத்துக்காகவும் அதிசயங்களை கொண்டு வரும் என்று அவர் மேலும் கூறினார்.
பழமையும், புதுமையும் இணைந்த ஆரோக்கியமான கலவையில் பாரதியார் நம்பிக்கை கொண்டிருந்தார் என பிரதமர் தெரிவித்தார். ஞானம் நமது வேர்களுடன் இணைந்துள்ளதை பாரதி கண்டதாகத் தெரிவித்த அவர், எதிர்காலத்தை நோக்கிய பார்வையும் அவருக்கு இருந்தது என்றார். தமிழ் மொழியையும், தாய்நாடான இந்தியாவையும் அவர் தமது இரு கண்களாக கருதினார் என்று பிரதமர் குறிப்பிட்டார். பழமையான இந்தியாவின் பெருமை, வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் மகிமை, நமது கலாச்சாரம், பாரம்பரியம், நமது கீர்த்தி மிக்க கடந்த காலம் ஆகியவை குறித்து பாரதி பாடல்களைப் புனைந்தார். ஆனால், அதே சமயம், கடந்த கால பெருமைகளைக் கூறி மட்டும் வாழ்வது போதாது என அவர் நம்மை எச்சரித்தார். அறிவியல் மனநிலை, பலவற்றை தெரிந்து கொள்ளும் துடிப்பு ஆகியவற்றை மேம்படுத்தி, முன்னேறி செல்ல வேண்டியது அவசியம் என திரு மோடி வலியுறுத்தினார்.
மகாகவி பாரதியாரின் வளர்ச்சி பற்றிய விளக்கம் பெண்களின் பங்கை மையமாகக் கொண்டிருந்தது என பிரதமர் கூறினார். சுதந்திரமும், பெண்களின் முன்னேற்றமும் அவரது முக்கியமான தொலை நோக்குகளாக இருந்தன. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என பெண்கள் பற்றி மகாகவி பாரதியார் எழுதினார். இந்த கண்ணோட்டத்தால், ஊக்கம் பெற்ற அரசு, பெண்களுக்கு அதிகாரம் கிடைக்க பாடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். அரசின் ஒவ்வொரு பணியிலும், பெண்களின் கண்ணியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. முத்ரா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் 15 கோடிக்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இன்று, பெண்கள் நமது ஆயுதப் படைகளில் நிரந்தர பணியுடன் பங்காற்றி வருகின்றனர். சுகாதாரம் இன்றி பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்த பரம ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இன்று 10 கோடிக்கும் அதிகமான தூய்மையான, பாதுகாப்பான கழிவறைகள் மூலம் பயனடைந்துள்ளனர். இனி அவர்கள் இத்தகைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘’ இது புதிய இந்தியாவின் பெண்கள் சக்தி யுகமாகும். அவர்கள் தடைகளை உடைத்து, தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது சுப்பிரமணிய பாரதிக்கு புதிய இந்தியாவின் மரியாதை’’ என்று திரு மோடி கூறினார்.
பிளவுபட்ட எந்த சமுதாயமும் வெற்றி பெற முடியாது என்பதை மகாகவி பாரதியார் உணர்ந்திருந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். அதே சமயம், அரசியல் சுதந்திரத்தின் வெற்றிடம், சமூக ஏற்றத் தாழ்வுகளையும், சமூக அவலங்களையும் தீர்க்க முடியாது என்றும் அவர் எழுதினார். ‘’ இனி ஒரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம். தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’’ என்ற பாடலை குறிப்பிட்ட பிரதமர், நாம் ஒற்றுமையாக இருப்பதுடன், ஒவ்வொரு மனிதரையும், குறிப்பாக ஏழைகள், ஒக்கப்பட்ட பிரிவினர் அதிகாரம் பெறுவதற்கு உறுதி மேற்கொள்ள வேண்டும் என பாரதியார் நமக்கு போதித்ததாகக் கூறினார்.
பாரதியின் படைப்புகளிலிருந்து நமது இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் எனக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அவரது படைப்புகளை படித்து ஊக்கம் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பாரதியாரின் போதனைகளைப் பரப்பி வரும் வானவில் கலாச்சார மையத்தின் அற்புதமான பணியை அவர் பாராட்டினார். இந்த விழா, இந்தியாவை புதிய எதிர்காலத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆக்கபூர்வமான விவாதங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.