குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைர விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார். குஜராத் உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் நினைவு தபால்தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், உச்ச நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள், குஜராத் மாநில முதல்வர் மற்றும் நீதித் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கடந்த 60 ஆண்டுகளாக இந்திய நீதித் துறையையும், இந்திய ஜனநாயகத்தையும் வலுப்படுத்துவதில் மிகப் பெரும் பங்காற்றி வரும் உயர்நீதிமன்றத்தின் கிளைகளையும், வழக்கறிஞர்கள் சங்கங்களையும் வெகுவாக பாராட்டினார்.
அரசியலமைப்பின் வாழும் சக்தியாக தனது கடமையை நீதித்துறை சிறப்பாக நிறைவேற்றி வருவதாக பிரதமர் தெரிவித்தார். ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாகவும் விளக்கங்களை அளித்து நீதித்துறை அரசியலமைப்பை தொடர்ந்து வலிமைப்படுத்துகிறது. குடிமக்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் வழங்குவதில் சிறப்பாக பங்காற்றி அது சட்டவிதிமுறையை நிறைவேற்றியுள்ளது.
நாகரிகம் மற்றும் சமூகக் கட்டுமான அமைப்பின் அடித்தளமாக சட்டவிதிமுறைகள் விளங்குவதாக பிரதமர் கூறினார். சிறந்த நல்லாட்சியின் அடித்தளமாகவும் இது திகழ்கிறது. நமது சுதந்திரப் போராட்டத்தில் இது துணிச்சலை ஏற்படுத்தியது. இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தவர்கள் இதற்கு உயரிய மதிப்பை அளித்ததோடு, இந்த உறுதிமொழியின் வெளிப்பாடே அரசியலமைப்பின் முகவுரையாகும்.
இந்த முக்கிய கொள்கைக்கு நீதித்துறை தொடர்ந்து ஆற்றலையும், வழிகாட்டுதலையும் வழங்குகிறது. நீதியின் அடிப்படை இலக்குகளை நிறைவேற்றி வரும் வழக்கறிஞர்கள் சங்கங்களையும் பிரதமர் பாராட்டினார். சமூக கட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள நபருக்கும், உரிய நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் உலகத்தரம் வாய்ந்த நீதி முறையை உருவாக்குவது, நிர்வாகம் மற்றும் நீதித்துறையின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார்.
பெருந்தொற்று போன்ற நெருக்கடி மிக்க தருணங்களில் நீதித்துறையின் அர்ப்பணிப்பை பிரதமர் பாராட்டினார். வழக்குகளைக் காணொலி காட்சி வாயிலாக விசாரித்து, குறுஞ்செய்தி வாயிலாக தகவல்களைப் பரிமாறி, மின்னணு மூலம் வழக்குகளைப் பதிவு செய்து, வழக்கின் தற்போதைய நிலையை மின்னஞ்சல் வழியாக வழங்கி குஜராத் உயர்நீதிமன்றம் தனது தகவமைப்பு திறமையை முதலில் வெளிப்படுத்தியது.
மேலும் யூடியூப் வாயிலாக தனது அறிவிக்கை பலகைகளை ஒளிபரப்பிய தோடு, நீதிமன்றத்தின் இணையதளத்தில் நீதிமன்ற உத்தரவுகளும், தீர்ப்புகளும் வெளியிடப்பட்டன.
நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையின் வாயிலாக முதன்முதலில் குஜராத் நீதிமன்றம் ஒளிபரப்பியது. சட்ட அமைச்சகத்தின் மின்னணு நீதிமன்றங்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் விரைவாக அனைத்து நீதிமன்றங்களிலும் அமல்படுத்தப்படுவதற்கு பிரதமர் தமது திருப்தியை வெளிப்படுத்தினார்.
தற்போது 18,000-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் நவீனமயமாக்கப்பட்டிருப்பதாகவும், காணொலி காட்சி, தொலைதூர ஆலோசனைகளுக்கு உச்சநீதிமன்றம் சட்டரீதியான அனுமதி வழங்கியதையடுத்து இணையதளம் வாயிலான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு புதிய உத்வேகம் கிடைத்திருப்பதாகவும் திரு மோடி தெரிவித்தார்.
“உலகின் அனைத்து உச்சநீதி மன்றங்களையும் விட காணொலி காட்சி வாயிலாக அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை விசாரித்த பெருமை நமது உச்சநீதிமன்றத்திற்கு கிடைத்திருக்கிறது”, என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இணையதளம் வாயிலாக வழக்குகளை பதிவு செய்தல், பிரத்தியேக அடையாளக் குறியீடு, வழக்குகளுக்கான க்யூ ஆர் குறியீடு போன்றவை எளிதான நீதிக்கு புதிய பரிமாணத்தை வழங்கியிருப்பதோடு, தேசிய நீதி தரவு தொகுப்பு உருவாவதற்கான காரணியாகவும் அமைந்துள்ளன.
வழக்கறிஞர்களும், வழக்குரைஞர்களும் தங்களது வழக்குகள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்த தொகுப்பு உதவிகரமாக இருக்கும். அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது நீதி சார்ந்த உரிமையின் பாதுகாப்பில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதால் எளிதான நீதி, எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை மேம்படுத்துகிறது.
தேசிய நீதி தரவு தொகுப்பை உலக வங்கியும் வெகுவாக பாராட்டியுள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய தகவலியல் மன்றத்தின் மின்னணுக் குழு, க்ளவுட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான ஒரு உள்கட்டமைப்பை உருவாக்கி வருகின்றன.
எதிர்காலத்திற்கு தயார் செய்யும் வகையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயன்பாடுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதன்மூலம் நீதித்துறையின் செயல்திறனும் வேகமும் அதிகரிக்கும்.
நீதித்துறையை நவீனமயமாக்கும் பணிகளில் தற்சார்பு இந்தியா மிகப்பெரும் பங்கு வகிக்கும் என்று பிரதமர் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியா தனது சொந்த காணொலிக்காட்சி தளத்தை ஊக்குவிக்கின்றது. டிஜிட்டல் பிரிவுகளை இணைப்பதில் உயர் நீதிமன்றங்களிலும், மாவட்ட நீதிமன்றங்களிலும் செயல்படும் மின்னணு சேவை மையங்கள் உதவியாக இருக்கின்றன.
மின்னணு மக்கள் நீதிமன்றங்கள் குறித்து பேசிய பிரதமர், முதலாவது மின்னணு மக்கள் நீதி மன்றங்கள் ஜுனாகரில் 30-40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றதாக தெரிவித்தார். இன்று இதுபோன்ற மக்கள் நீதி மன்றங்கள் உரிய நேரத்தில், ஏற்புடைய வகையில் நீதியை வழங்குவதால் 24 மாநிலங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் மின்னணு மக்கள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன.
இது போன்ற வேகம், நம்பகத்தன்மை மற்றும் வசதிதான் இன்றைய நீதித்துறையின் தேவையாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.