வாரணாசியில் நடைபெறும் இந்தியா கம்பளக் கண்காட்சியில் பிரதமர் திரு. நரேந்திரமோடி இன்று (21.10.2018) காணொலி மூலம் உரையாற்றினார்.
வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வந்திருந்த விருந்தினர்களை வரவேற்ற பிரதமர், வாரணாசியில் உள்ள தீன்தயாள் கைவினைப்பொருட்கள் இணையத்தில் இந்தியா கம்பளக் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல் முறை என்று கூறினார். வாரணாசி, பாடோஹி, மிர்ஸாபூர் ஆகிய இடங்கள் கம்பள தொழிலின் முக்கிய மையங்கள் என்று கூறினார். கைவினைப் பொருட்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகியவற்றை ஊக்குவிப்பதில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் பேசினார்.
கைவினைப் பொருட்களைப் பொறுத்தவரை இந்தியா நீண்ட பாரம்பரியம் கொண்டது என்று குறிப்பிட்ட பிரதமர், வாரணாசி இந்த வகையில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றார். இது தொடர்பாக இந்த பகுதியைச் சேர்ந்த மாபெரும் ஞானக் கவிஞர் கபீரின் பெயரை அவர் குறிப்பிட்டார்.
கைவினைப்பொருட்கள் விடுதலைப்போராட்டத்தின் ஊக்க ஊற்றாக விளங்கியது என்றும், தற்சார்பு நிலையை பெறுவதற்கும் அது உதவுகிறது என்றும் அவர் கூறினார். இந்த வகையில் பிரதமர் மகாத்மாகாந்தி, சத்தியாகிரகம், ராட்டை ஆகியனப்பற்றி குறிப்பிட்டார்.
இந்தியா இன்று மிகப்பெரிய கம்பள உற்பத்தி நாடாக திகழ்கிறது என்றும், உலக சந்தையில் இந்திய கம்பளத்தின் பங்கு 35 சதவீதம் என்றும் பிரதமர் கூறினார். இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க ஏற்றுமதி சாதனைகள் குறித்தும் பிரதமர் பேசினார். இந்தத் துறையின் வளர்ச்சிக்கு உயர்ந்து வரும் நடுத்தர வகுப்பினரின் பொருளாதார நிலையும், கம்பளத் தொழிலுக்கு அரசு மூலம் அளிக்கப்பட்டு வரும் ஆதரவும் அடிப்படைக் காரணங்கள் என்று அவர் கூறினார். கம்பள உற்பத்தியாளர்கள் திறன்களை வெகுவாக பாராட்டிய பிரதமர், இதன் காரணமாகவே “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கம்பளம்” பெரிய வர்த்தகச் சின்னமாக மாறிவிட்டது என்றார். கம்பள ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் போக்குவரத்து ஆதரவு குறித்தும் கம்பளங்களின் தரத்தை உறுதி செய்வதற்கு உலகத்தரம் வாய்ந்த சோதனைக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதையும் பற்றி பிரதமர் பேசினார். இந்தத் துறைக்கு கிடைத்து வரும் கடன் வசதிகள் உள்ளிட்ட இதர வசதிகள் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.
கம்பள தயாரிப்பாளர்களின் திறனும், கடுமையான உழைப்பும் நாட்டின் மிகச்சிறந்த வலுவாக மாறுவதை உறுதி செய்வதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது என்று பிரதமர் திரு.நரேந்திரமோடி தெரிவித்தார்.