கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மடம் ஏற்பாடு செய்திருந்த சுவாமிவிவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 –வது  ஆண்டு விழா நிறைவுநிகழ்ச்சியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம்  உரையாற்றினார்.

சுவாமி ஜி-யின் உரை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் மேற்கத்திய நாடுகள் இந்தியாவை நோக்கிய முறையை மாற்றியமைத்தது என்பதையும் இந்திய சிந்தனையும், தத்துவமும் தனக்குரிய இடத்தை எவ்வாறு பிடித்தது என்பதையும் காட்டுவதாக இந்த கொண்டாட்டங்கள் அமைந்துள்ளன என்று பிரதமர் தமது உரையில் கூறினார்.  

வேதத் தத்துவத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர் என்று பிரதமர் கூறினார். “சிகாகோவில் அவர் உலகிற்கு வேதத் தத்துவத்தை  கற்பித்தார், அதேசமயம் நமது நாட்டின் வளமான வரலாற்றையும் மிகப்பெரிய திறனையும் நினைவுபடுத்தினார்.  நமக்கு நமது நம்பிக்கை, நமது கவுரவம், நமது வேர்களை மீட்டுக் கொடுத்தார் அவர்” என்று பிரதமர் கூறினார்.

சுவாமி விவேகானந்தரின் இந்த நெடுநோக்குடன் “இந்தியா முழு நம்பிக்கையுடன் முன்நோக்கிச் செல்கிறது” என்று திரு நரேந்திர மோடி கூறினார்.  மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்.  

பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு:

“சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் 125-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதை எனது அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன். இந்த நிகழ்ச்சியில் இளையோரும், முதியோருமாக சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர் என்று எனக்கு சொல்லப்பட்டது.

125 ஆண்டுகளுக்கு முன் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற உலக சமயங்கள் மாநாட்டில் உரையாற்றிய போதும், 4 ஆயிரம் பேர் அதனை கேட்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய அனைவரையும் ஈர்க்கக் கூடிய உரையின் ஆண்டு விழாவை கொண்டாடும் வேறு எந்த உதாரணத்தையும் நான் அறிந்திருக்கவில்லை.

அப்படியேதும் நடந்திருக்க வாய்ப்பும் இல்லை.

எனவே இந்த கொண்டாட்டங்கள் சுவாமிஜி உரையின் தாக்கத்தையும் – மேற்கத்திய நாடுகள் இந்தியாவை நோக்கிய முறை எவ்வாறு மாறியது, இந்திய சிந்தனையும், தத்துவமும் தனக்குரிய இடத்தை எவ்வாறு பிடித்தது என்பதையும் காட்டுகிறது.  

நீங்கள் ஏற்பாடு செய்துள்ள சிகாகோ உரையின் ஆண்டுவிழா நிகழ்ச்சி மேலும் சிறப்புமிக்கதாகும்.

ராமகிருஷ்ணா மடம் மற்றும் இயக்கம், தமிழக அரசு, இங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்கான இளம் நண்பர்கள் உள்ளிட்ட இந்த கொண்டாட்டத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

ஞானிகளின் சாத்வீக தனித்தன்மை பண்புகள் மற்றும் இளையோரின் ஆற்றலும், ஆர்வமும் ஒருங்கிணைந்து இருப்பது இந்தியாவின் உண்மையான பலத்தின் அடையாளமாகும்.

நான் உங்களிடமிருந்து அதிக தூரத்திற்கு அப்பால் இருக்கலாம். ஆனால், இந்த தனித்தன்மை வாய்ந்த ஆற்றலை என்னால் உணரமுடிகிறது.

இந்த தினத்தை வெறும் உரைகளுடன் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை என்று என்னிடம் சொல்லப்பட்டது.  ராமகிருஷ்ணா மடம் வேறுபல திட்டங்களையும் மேற்கொண்டுள்ளது. சுவாமிஜியின் போதனைகளை பரப்ப பள்ளி, கல்லூரிகளில் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.   நம்நாட்டு இளைஞர்கள் முக்கிய பிரச்சினை குறித்து விவாதங்கள் மேற்கொண்டு இந்தியாவை இன்று எதிர்நோக்கியுள்ள  சவால்களுக்கு தீர்வுகாண முயற்சிப்பார்கள்.  இந்த மக்கள் பங்கேற்பு, சவால்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் மன உறுதி.  ஒன்றுபட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம் என்ற தத்துவம் – இவைகளே சுவாமிஜியின் செய்திகளின் சாரம்.

நண்பர்களே, தனது உரையின் மூலம் சுவாமி விவேகானந்தர் இந்திய பண்பாடு, தத்துவம், தொன்மையான பாரம்பரியம் ஆகியவற்றை அகில உலகிற்கும் வெளிச்சம் போட்டு காட்டினார்.

சிகாகோ உரை குறித்து மிகப்பலர் எழுதியுள்ளார்கள்.  இன்றைய நிகழ்ச்சியின் போது நீங்கள் இந்த உரையின் முக்கிய அம்சங்கள் குறித்து பேசியுள்ளீர்கள்.  சுவாமிஜியின் வார்த்தைகள் தொடர்ந்து பரவ நாம் முயற்சி செய்வோம், அவற்றிலிருந்து புதியவற்றை அறிந்துகொள்வோம்.

இந்த உரையின் தாக்கத்தை சுவாமிஜியின் சொந்த வார்த்தைகளால் கூற விழைகிறேன்.  சென்னையில் சுவாமிஜியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்தியாவுக்கும், இந்திய சிந்தனைகளுக்கும் வெற்றியாக சிகாகோ உலக சமய மாநாடு அமைந்திருந்தது.  உலகை வெள்ளத்தில் ஆழ்த்திய வேதாந்த கருத்துகளுக்கு உச்சாணிக் கொம்பாக அமைந்தது” என்று கூறினார்.

நண்பர்களே,

சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்தை கருத்தில் கொண்டால், அவரது சாதனை அளவு மேலும் பெரிதாகவே தோன்றும்.

நமது நாடு அப்போது அந்நிய ஆதிக்கத்தில் இருந்தது.  நாம் ஏழைகளாக இருந்தோம். நமது சமுதாயம் பின்தங்கியதாகக் கருதப்பட்டது.  சமூக அமைப்பில் மிகப்பல சமூகக் கேடுகளும் கலந்தே இருந்தன. 

அந்நிய ஆட்சியாளர்கள் அவர்களது நீதிபதிகள், அவர்களது போதகர்கள் அனைவரும் நமது ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான அறிவையும், பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கேவலப்படுத்தி கூறுவதற்கு எந்த சந்தர்ப்பதையும் விட்டுவைக்கவில்லை.

நமது பாரம்பரியத்தை தரக்குறைவாகப் பார்ப்பதற்கு நமது மக்களுக்கு அவர்கள் கற்பித்தனர். நமது மக்கள் தங்கள் சொந்த வேர்களில் இருந்து அகற்றப்பட்டனர்.  இந்த மனப்போக்கினை சுவாமிஜி முற்றிலுமாக எதிர்த்தார்.  இந்திய பண்பாடு, தத்துவார்த்த சிந்தனை அடிப்படையிலான அறிவின் மீது பல நூற்றாண்டுகளாக படிந்திருந்த தூசியை அகற்றும் பணியை அவர் மேற்கொண்டார்.

வேதத் தத்துவத்தின் பெருமையை உலகிற்கு அவர் அறிமுகம் செய்தார்.  சிகாகோவில் வேத தத்துவம் குறித்து உலகிற்கு கற்றுக் கொடுத்தார்.  அதேசமயம் நமது நாட்டின் வளமான வரலாறு, மாபெரும் திறன்கள் ஆகியவற்றை நாட்டுக்கு நினைவுபடுத்தனார். நமது தன்னம்பிக்கை,. நமது கவுரவம், நமது வேர்கள் ஆகியவற்றை நமக்கு திரும்பக் கொடுத்தார்.

“கடலின் உயர் அலைகளைப் போல ஆன்மிகமும், தத்துவமும் மேலெழுந்து உலகில் வெள்ளமாகப் பாய்ந்தது இந்த பூமியில் இருந்துதான்”.  தரம் தாழ்ந்து வரும் மனித குலத்திற்கு உயிரையும், பலத்தையும் அளிக்கும் இத்தகைய சக்திவாய்ந்த ஆலைகள் இந்த நிலத்திலிருந்து தான் தோன்றின” என்று சுவாமிஜி நமக்கு நினைவுபடுத்தினார்.

சுவாமி விவேகானந்தர் உலகில் தனது முத்திரையை பதித்ததோடு விட்டுவிடாமல், நாட்டின் சுதந்திர இயக்கத்திற்கு புதிய ஆற்றலையும், புதிய நம்பிக்கையையும் அளித்தார்.

நம்மால் முடியும், நமக்கு திறன் உள்ளது என்ற உணர்வுடன் நாட்டு மக்களை அவர் விழித்தெழச்செய்தார்.   இதுதான் தன்னம்பிக்கை, இளம் சன்னியாசியான அவரது ஒவ்வொரு துளி ரத்தத்திலும் இருந்த தன்னம்பிக்கை. இந்த தன்னம்பிக்கையை அவர் நாட்டு மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்த்தார். “உங்கள் மீது நம்பிக்கைவையுங்கள், தேசத்தை நேசியுங்கள்” இதுவே அவரது தாரக மந்திரம்.

நண்பர்களே,

சுவாமி விவேகானந்தரின் இந்த நெடுநோக்குடன் இந்தியா முழு தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. நம்மீது நாமே நம்பிக்கை வைத்தால், கடுமையாக உழைக்க தயாராக இருந்தால், நம்மால் சாதிக்க முடியாதது என்ன?

யோகா, ஆயுர்வேதா போன்ற ஆரோக்கிய பாரம்பரியம் கொண்டது இந்தியா என்பதை உலகம் உணர்ந்துள்ளது – அதேசமயம் அது நவீன தொழில்நுட்பத்தின் ஆற்றலை பயன்படுத்திக் கொண்டும் உள்ளது.

இன்று ஒரே சமயத்தில் 100 செயற்கைக் கோள்களை இந்தியா ஏவிவரும் நிலையில், உலகம் மங்கள்யான், ககன்யான் ஆகியவை குறித்து விவாதித்து வரும் நிலையில், பீம் போன்ற நமது டிஜிட்டல் செயலிகளை பின்பற்ற இதர நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், நாட்டின் தன்னம்பிக்கை பல மடங்கு உயருகிறது.  ஏழைகள், வாய்ப்பு வசதிகளற்றோர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் தன்னம்பிக்கையை உயர்த்த நாம் கடுமையாக பாடுபட்டு வருகிறோம்.  இந்த முயற்சிகளின் தாக்கத்தை நமது இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆகியோரின் தன்னம்பிக்கையில் காணமுடிகிறது.

சமீபத்தில் ஆசிய விளையாட்டுக்களில் நமது வீரர்கள், அவர்கள் எவ்வளவு ஏழைகளாக இருந்தாலும், எத்தகைய குடும்பத்திலிருந்து வந்தவர்களாக இருந்தாலும், தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பின் மூலம் நாட்டை பெருமை கொள்ளச் செய்ய முடியும் என்று உணர்த்தியிருக்கிறார்கள்.

இன்று இந்தியாவின் சாதனை வேளாண் உற்பத்தி நமது விவசாயிகளிடையே இத்தகைய பண்புகள் இருப்பதைக் காட்டுகிறது. நாட்டின் வர்த்தகர்கள், தொழிலாளர்கள், தொழிலியல் உற்பத்தியை முடுக்கிவிட்டுள்ளனர். உங்களைப் போன்ற இளம் பொறியாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள் இணைந்து நாட்டினை புதிய புரட்சிப்பாதையில் கொண்டு சென்றுள்ளனர்.

நண்பர்களே,

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களை நம்பியிருக்கிறது என்று சுவாமிஜி உறுதியாக நம்பினார்.  வேதங்களை மேற்கோள் காட்டி அவர் கூறினார், “இளையோர், பலசாலிகள், ஆரோக்கியவான்கள், கூர்மையான புத்தி கொண்டவர்கள் இவர்களே இறைவனை அடைபவர்கள்” என்று கூறினார். 

இன்றைய இளைஞர்கள் இலக்குகளை முன்வைத்து நடைபோட்டு வருகின்றார்கள் என்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  இளைஞர்களின் உள்ளக்கிடக்கைகளை மனதில் கொண்டு அரசு புதிய பணி கலாச்சாரத்தையும், புதிய அணுகுமுறையையும் கொண்டு வந்துள்ளது. நண்பர்களே, சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகும், எழுத்தறிவு முன்னேறிய நிலையிலும், நமது இளைஞர்களில் மிகப்பலர் வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன்களை பெறாத நிலையில் உள்ளனர். நமது கல்வி முறை திறன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் தராதது வருத்தம் அளிக்கிறது.

இளைஞர்களிடையே திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு தனியாக திறன் மேம்பாட்டுக்கென அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தங்கள் கனவுகளை நனவாக்கும் சாதனைபடைக்க விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிகளின் கதவுகளை அரசு திறந்துவிட்டுள்ளது. 

முத்ரா திட்டத்தின்கீழ், இதுவரை 13 கோடிக்கும் கூடுதலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.  நாட்டின் கிராமங்களிலும், நகரங்களிலும் சுய வேலைவாய்ப்பை மேம்படுத்த இத்திட்டம் குறிப்பிடத்தக்க பங்கு பணியை ஆற்றிவருகிறது.

தொடக்கநிலை நிறுவனங்கள் திட்டத்தின்கீழ், புதுமையான கருத்துகளை ஊக்குவிக்க அரசு மேடை அமைத்து உதவி வருகிறது.

இதன் பலனாக சென்ற ஆண்டு மட்டும் சுமார் 8 ஆயிரம் தொடக்க நிலை நிறுவனங்கள் அங்கீகார சான்றிதழ்களை பெற்றுள்ளன.  2016-ல், 800 நிறுவனங்களே இத்தகைய சான்றிதழ்களை பெற்றன.  அதாவது ஓராண்டிற்குள் 10 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளில் புதுமைப்படைப்பு சூழலை உருவாக்க “அடல் புதுமைப்படைப்பு இயக்கம்” தொடங்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ், நாடெங்கம் அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களை உருவாக்க உழைத்து வருகிறோம்.

புதுமையான கருத்துகளை வெளிக்கொண்டு வர நவீன இந்தியா ஹேக்கத்தான் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 

நண்பர்களே,

சுவாமி விவேகானந்தர் நமது சமூகப் பொருளாதார பிரச்சினைகள் பற்றியும் பேசியுள்ளார்.  நமது நாட்டின் மிகவும் ஏழையான மக்களை மிகவும் உயர்ந்த மக்களுக்கு இணையாக உயர்த்தினால், சமுதாயத்தில் சமத்துவம் தோன்றும் என்று அவர் கூறினார்.  கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிலையை நோக்கித்தான் நாங்கள் உழைத்து வருகிறோம்.  ஜன்தன் கணக்குகள், இந்தியா அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கிகள் ஆகியவற்றின் மூலம் வங்கிகளை ஏழை மக்களின்  வீட்டு வாயில்களுக்கு கொண்டு சென்றுள்ளோம். வீடில்லாத ஏழைகளுக்கு வீட்டுவசதி, எரிவாயு இணைப்புகள், மின்சார இணைப்புகள், மருத்துவ மற்றும் ஆயுள்காப்பீட்டு திட்டங்கள் போன்ற பல திட்டங்கள் மிகவும் ஏழைப்பட்ட மக்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டவை.

இம்மாதம் 25 ஆம் தேதி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நாடெங்கும் தொடங்கவுள்ளோம்.  இந்தத் திட்டத்தின்படி, கடுமையான வியாதிகளுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளது.  இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ள தமிழ்நாடு அரசிற்கும், மக்களுக்கும் எனது பாராட்டுகள்.

எமது அணுகுமுறை ஏழ்மையை ஒழிப்பது மட்டுமல்ல, நாட்டின் ஏழ்மைக்கு காரணமாக உள்ளவற்றை வேரறுப்பதே ஆகும்.

இந்த நாள் மற்றொரு வித்தியாசமான நிகழ்வின் ஆண்டு தினம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தியே ஆகவேண்டும்.  உலகமெங்கும் எதிரொலித்த 9/11 பயங்கரவாத தாக்குதல் நினைவு தினமாகும்.  பயங்கரவாதப் பிரச்சினைக்கு தீர்வுகாண உலக நாடுகளின் சமுதாயம் முயன்று வருகிறது.  ஆனால், இதற்கான உண்மையான தீர்வு சுவாமிஜி சிகாகோவில் உலகிற்கு உணர்த்திய சகிப்புத்தன்மை, ஏற்றுக் கொள்ளும் தன்மை ஆகியனவேயாகும்.

சுவாமிஜி கூறினார், “உலகுக்கு சகிப்புத் தன்மையையும், ஒட்டுமொத்த ஏற்றுக்கொள்ளும் தன்மையையும் கற்றுத்தந்த சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்”

நண்பர்களே,

சுதந்திரமான கருத்துகளுக்கு இடமளிக்கும் நாடு நமது நாடு. பல நூற்றாண்டுகளாக இந்த நாடு பலதரப்பட்ட கருத்துகளுக்கும், பண்பாடுகளுக்கும் சொந்த வீடாக இருந்து வந்துள்ளது. விவாதித்து முடிவு எடுப்பது என்பது நமது பாரம்பரியம்.  ஜனநாயகமும், விவாதங்களுமே நமது நிரந்தரமான நன்நெறிகள்.

ஆனால், நண்பர்களே, நமது சமுதாயம் தமது தீமைகள் அனைத்தையும் இன்னும் அகற்றிவிடவில்லை.  இவ்வளவு பெரிய நாட்டில், தனித்தன்மையான பலதரப்பு தன்மை கொண்ட நாட்டில் பல பெரிய சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன.

“அனைத்து காலங்களிலும், அனைத்து இடங்களிலும் கேடு செய்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்” என்று விவேகானந்தர் சொல்வது வழக்கம்.  நமது சமுதாயத்தின்   இத்தகைய கேடுகள் குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருந்து அவற்றை தோற்கடிக்க வேண்டும். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  நம்மிடம் எவ்வளவு வளங்கள் இருக்கும் நிலையிலும், இந்திய சமுதாயம் எப்போதெல்லாம் பிரிவினைப்படுத்தப்படுகிறதோ, உள்நாட்டு குழப்பங்கள் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் வெளியில் இருக்கும் எதிரிகள் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான போராட்டக் காலங்களில் நமது ஞானிகளும், சமூக சீர்திருத்தவாதிகளும் நமக்கு சரியான பாதையை காட்டியிருக்கிறார்கள். நம்மையெல்லாம் மீண்டும் ஒருங்கிணைத்துக் கொண்டுவரும் பாதை அது.

சுவாமி விவேகானந்தரிமிருந்து எழுச்சிப் பெற்று புதிய இந்தியாவை நாம் நிர்மாணிக்க வேண்டும்.

உங்கள் அனைவருக்கும் பலமுறை நன்றி சொல்லி உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.  இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பளித்தீர்கள்.  சுவாமிஜியின் செய்திகளை படித்து உணர்ந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்ற பல்லாயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி நண்பர்களுக்கு எனது பாராட்டுகள்.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி”.  

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Employment increases 36 pc to 64.33 cr in last ten years: Mansukh Mandaviya

Media Coverage

Employment increases 36 pc to 64.33 cr in last ten years: Mansukh Mandaviya
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets on the occasion of Urs of Khwaja Moinuddin Chishti
January 02, 2025

The Prime Minister, Shri Narendra Modi today greeted on the occasion of Urs of Khwaja Moinuddin Chishti.

Responding to a post by Shri Kiren Rijiju on X, Shri Modi wrote:

“Greetings on the Urs of Khwaja Moinuddin Chishti. May this occasion bring happiness and peace into everyone’s lives.