அசாமில் தேஜ்பூர் பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். அசாம் மாநில ஆளுநர் பேராசிரியர் ஜெகதீஷ் முகி, மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் `நிஷாங்க்', அசாம் முதல்வர் திரு. சர்பானந்த சோனோவல் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர், 1200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்நாளில் நினைவில் வைக்க வேண்டிய பெருமைக்குரிய நாளாக இன்றைய நாள் இருக்கிறது என்று குறிப்பிட்டார். தேஜ்பூர் பல்கலைக்கழகத்தில் இந்த மாணவர்கள் கற்றுக் கொண்ட விஷயங்கள், அசாம் மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என்று நம்புவதாக அவர் கூறினார். பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ பாடலை பாரத ரத்னா பூபேன் ஹஜாரிகா எழுதியுள்ளார். அது தேஜ்பூரின் வரலாற்றுப் பெருமையைக் கூறுவதாக உள்ளது. பல்கலைக்கழகத்தின் பாடலில் சில வரிகளை பிரதமர் மேற்கோள் காட்டினார்
“अग्निगड़र स्थापत्य, कलियाभोमोरार सेतु निर्माण,
ज्ञान ज्योतिर्मय,
सेहि स्थानते बिराजिसे तेजपुर विश्वविद्यालय”
அதாவது, அக்னிகாட் போன்ற கட்டடக் கலை அம்சம் உள்ள, காலியா-போமோரா பாலம் உள்ள, அறிவின் விளக்கு உள்ள பகுதியில் தேஜ்பூர் பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது என்று அர்த்தம். பூபேன் தா, ஜோதி பிரசாத் அகர்வாலா, விஷ்ணுபிரசாத் ராபா போன்ற ஆளுமைமிக்க தலைவர்கள் தேஜ்பூருடன் தொடர்புள்ளவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் மத்தியில் பேசிய பிரதமர், இப்போதிருந்து இந்திய சுதந்திரத்தின் 100-வது ஆண்டு பூர்த்தியாகும் காலம் வரையில் அவர்கள் வாழ்வில் பொற்காலமாக இருக்கும் என்று கூறினார். தேஜ்பூரின் பெருமைகளை இந்தியா முழுவதிலும், உலகம் முழுக்கவும் மாணவர்கள் பரப்பி, அசாம் மற்றும் வடகிழக்குப் பிராந்தியத்தை வளர்ச்சியில் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். வடகிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளில், குறிப்பாக போக்குவரத்துத் தொடர்பு வசதி, கல்வி, சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளில், உள்ள வாய்ப்புகளை முழுமையாக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அவர் யோசனை தெரிவித்தார்.
புதுமை சிந்தனை படைப்புக்கான மையமாகவும் தேஜ்பூர் பல்கலைக்கழகம் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். அடித்தள நிலையில் இந்தப் புதுமை சிந்தனைகள் உருவாகி இருப்பதால், உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதில் முனைப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தங்கள் பகுதி பிரச்சினைகளுக்கு தாங்களே தீர்வு காணும் முனைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். இதன் மூலம் வளர்ச்சிக்கான புதிய கதவுகள் திறக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். சுத்தமான குடிநீர் அளிப்பதற்காக குறைந்த செலவிலான தொழில்நுட்பம் உருவாக்குதல், ஒவ்வொரு கிராமத்திலும் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு உறுதி எடுப்பது, பயோகேஸ் மற்றும் இயற்கை உரங்கள் தொடர்பாக செலவுகள் இல்லாத மற்றும் செயல்திறன் மிக்க தொழில்நுட்பங்கள் உருவாக்குதல், வடகிழக்குப் பிராந்தியத்தில் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் வளமான பாரம்பரியத்தைக் காப்பதற்கான முயற்சி போன்றவற்றை பிரதமர் பாராட்டினார். வடகிழக்குப் பிராந்தியத்தில் அழிவின் விளிம்பில் உள்ள மலைவாழ் மக்களின் மொழிகளை ஆவணப்படுத்துதல், பல நூறாண்டு பழமை மிகுந்த படட்ரவ் தானா மர சிற்பங்களைப் பாதுகாத்தல், காலனி ஆதிக்க காலத்தில் எழுதப்பட்ட அசாமின் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற முயற்சிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
அந்தப் பகுதியின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் உத்வேகத்தை அளிப்பதாக தேஜ்பூர் பல்கலைக்கழக வளாகம் உள்ளதாக பிரதமர் கூறினார். அந்தப் பிராந்தியத்தில் உள்ள மலைச் சிகரங்கள் மற்றும் நதிகளின் பெயர்கள், அங்குள்ள விடுதிகளுக்கு சூட்டப்பட்டுள்ளன. இவை வெறும் பெயர்களாக மட்டுமின்றி, வாழ்வுக்கு உத்வேகம் தருபவையாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். வாழ்க்கைப் பயணத்தில், நாம் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும், பல மலை சிகரங்கள், பல நதிகளை நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார். ஒவ்வொரு மலைச் சிகரத்தைக் கடக்கும் பயணத்திலும் மாணவர்களின் அனுபவங்கள் கூடும் என்றும், புதிய சவால்களை சந்திக்க தயாராவார்கள் என்றும் குறிப்பிட்டார். பல கிளை நதிகள் ஒன்றாகக் கலந்து, கடலில் கலக்கின்றன. அதுபோல வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களிடம் இருந்து நாம் அறிவைப் பெற்று, விஷயங்களை கற்றுக் கொண்டு, நமது இலக்குகளை அடைந்து, முன்னேறிச் செல்ல வேண்டும் என்றார் அவர். இந்த அணுகுமுறையுடன் ஒருவர் முன்னேறிச் சென்றால், நாட்டின் வளர்ச்சியில் வடகிழக்குப் பிராந்தியம் முக்கிய பங்களிப்பு ஆற்ற முடியும் என்று பிரதமர் கூறினார்.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கோட்பாடுகளை பிரதமர் இந்த உரையில் விவரித்தார். ஆதார வளங்கள், கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார, ராணுவ பலங்களை அதிகரிப்பதுடன், உள்ளுணர்வு, செயல்பாடு, எதிர்வினையாற்றுதல் ஆகிய அம்சங்கள் இன்றைய இளைஞர்களின் சிந்தனைகளுடன் ஒத்துப்போவதாக உள்ளன என்று பிரதமர் கூறினார்.
இன்றைய இளம் இந்தியாவானது சவால்களை தனித்துவமான வழியில் எதிர்கொள்ளக் கூடியதாக உள்ளது என்றார் அவர். தனது கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில், ஆஸ்திரேலியாவில் இளம் இந்திய கிரிகெட் அணி நிகழ்த்திய சாதனையை பிரதமர் குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் அணி பல சவால்களை சந்தித்தது. மோசமான தோல்வியை அவர்கள் சந்தித்தபோதிலும், அடுத்த ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றனர். பலரும் காயமுற்றிருந்த நிலையிலும், மிகுந்த உறுதியுடன் விளையாடினர். சிரமமான சூழ்நிலைகளால் மனம் தளர்ந்து போய்விடாமல், அதை எப்படி சமாளிப்பது என்பதில் புதிய வழிமுறைகள் மூலம் அவர்கள் செயல்பட்டனர். அதிக அனுபவம் இல்லாத வீரர்களாக இருந்தாலும், அவர்களுடைய மன உறுதி அதிகமாக இருந்ததால், தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டனர். தங்களைவிட சிறந்த மற்றும் அழுத்தத்தைத் தாங்கும் வீரர்களைக் கொண்ட அணியை அவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
விளையாட்டுத் துறை என்ற வகையில் மட்டும் நமது வீரர்களின் இந்த வெற்றியை முக்கியமானதாகக் கருதக் கூடாது என்று பிரதமர் குறிப்பிட்டார். அந்த வீரர்களின் செயல் திறன்கள் வாழ்வில் எந்த அளவுக்கு முக்கியமான பாடங்களைக் கற்பித்துள்ளது என்று திரு. மோடி பட்டியலிட்டார். முதலாவதாக, நமது திறமையில் நமக்கு நம்பிக்கை வேண்டும்; இரண்டாவதாக, நேர்மறை சிந்தனை இருந்தால், நேர்மறை முடிவு கிடைக்கும். மூன்றாவது மற்றும் மிக முக்கியமானதாக, ஒருவருக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தால், ஒன்று பாதுகாப்பானதாக, மற்றொன்று சிரமப்பட்டு பெறும் வெற்றியாக இருந்தால், வெற்றிக்கான தேர்வைத்தான் ஒருவர் தேர்வு செய்ய வேண்டும் என்பதாக உள்ளது. எப்போதாவது தோல்வி அடைவதில் தவறு கிடையாது. சவால்களை எதிர்கொள்ள யாரும் தயக்கம் காட்டக் கூடாது. நாம் அச்சமற்றவர்களாக, நேர்மறையான செயல்பாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும். தோல்வி மற்றும் தேவையற்ற அழுத்தத்தின் அச்சங்களில் இருந்து நாம் விடுபட்டால், அச்சமற்றவர்களாக நாம் உருவாவோம். நம்பிக்கையான மற்றும் இலக்குகளை எட்டுவதில் அர்ப்பணிப்புடன் செயல்படக் கூடியதாக இந்தப் புதிய இந்தியா உள்ளது என்பது, கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் வெளிப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது. நீங்கள் எல்லோரும் இதில் அங்கமாக இருக்கிறீர்கள் என்று மாணவர்களிடம் பிரதமர் கூறினார்.
மற்றவர்கள் செல்லாத பாதையில் முன்னெடுத்துச் செல்வதில் தன்னம்பிக்கையும், அச்சமற்ற நிலையும், இளமையின் சக்தியும் கொரோனாவுக்கு எதிரான நமது நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளன. ஆரம்ப கட்டத்தில் இருந்த சந்தேகங்களை இந்தியா சமாளித்து முன்னேறி, எதையும் தாங்க முடியும் என்பதையும், அதில் உள்ள உறுதியையும் இந்தியா நிரூபித்துள்ளது. நம்மிடம் ஆதாரவளங்களுக்குக் குறைபாடு இல்லை என்பதையும் இந்தியா எடுத்துக் காட்டியுள்ளது. சூழ்நிலைகளைப் பார்த்து தளர்ந்துவிடாமல், வேகமான, ஆக்கபூர்வமான முடிவுகளை எடுத்த காரணத்தால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக சிறப்பாக நடவடிக்கைகள் எடுக்க முடிந்தது. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட தீர்வுகள் காரணமாக நோய் பரவாமல் தடுக்கப்பட்டு, ஆரோக்கிய கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. தடுப்பூசி தொடர்பான நமது ஆராய்ச்சியும், தடுப்பு மருந்து உற்பத்தித் திறனும், தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை உலகில் மற்ற நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார்.
அரசின் உதவித் திட்டப் பயன்களை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்துவது, நிதி தொழில்நுட்ப டிஜிட்டல் வசதி, உலகில் மிகப் பெரிய அளவுக்கு வங்கிச் சேவைகளில் மக்களை பங்கேற்கச் செய்தல், வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டுவதில் உலகில் மிகப் பெரிய அளவிலான திட்டம், எல்லா வீடுகளுக்கும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதற்கான திட்டம், உலகில் மிகப் பெரிய அளவில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், உலகில் மிகப் பெரிய அளவிலான தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகியவை இன்றைய இந்தியாவின் அணுகுமுறைகளுக்கான அத்தாட்சிகளாக உள்ளன என்று அவர் கூறினார். தீர்வுகளை உருவாக்குவதில் அச்சப்படாமல், பெரிய அளவிலான திட்டங்களை அமல் செய்வதில் தயக்கம் காட்டாமல் இருப்பதைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் மூலம் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களும் பயன் பெறுகின்றன என்றார் அவர்.
புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு குறித்து பிரதமர் பேசினார். உலகில் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும், எந்தப் பகுதியில் இருந்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையவழியில் இடம் பெறும் வாய்ப்புகள் கொண்டவையாக எதிர்கால பல்கலைக்கழகங்கள் இருக்கும் என்று கூறிய அவர், அதுபோன்ற ஒரு நிலைமாற்றத்துக்கான ஒழுங்குபடுத்தும் வரையறைகளை உருவாக்க வேண்டியுள்ளதாக வலியுறுத்தினார். தேசிய கல்விக் கொள்கை அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதாக இருக்கும் என்று அவர் கூறினார். தொழில்நுட்பத்தை அதிகபட்ச அளவில் பயன்படுத்தி, பன்முக அம்சங்கள் கொண்ட கல்வி முறையை, மாணவர்களின் தேவைக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் அம்சங்கள் கொண்டதாக இந்த கல்விக் கொள்கை இருக்கும் என்றார் அவர். தகவல் மற்றும் தகவல் ஆய்வு முறைக்கு நமது கல்வி முறையை தயார்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். மாணவர் சேர்க்கையில் இருந்து கற்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் வரையிலான செயல்பாடுகளை பெரிய அளவில் மேம்படுத்துவதற்கு தகவல் ஆய்வு வசதிகள் பயன்படும் என்று அவர் கூறினார்.
இந்தக் குறிக்கோள்களை அடைவதற்கு தேஜ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் உதவிட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். முறைப்படியான கல்வியை முடித்ததை அடுத்து, தங்களின் எதிர்காலத்துக்காக மட்டுமின்றி, நாட்டின் எதிர்காலத்திற்காகவும் அவர்கள் உழைக்க வேண்டும் என்று அவர் கூறினார். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், தங்கள் நோக்கங்களை உயர்வானதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். அடுத்த 25 - 26 ஆண்டுகள் அவர்களுக்கும், நாட்டிற்கும் முக்கியமான காலமாக இருக்கும் என்று கூறிய பிரதமர், மாணவர்கள் இந்த நாட்டை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.