நாடு முழுவதும் உள்ள முக்கிய சீக்கியர்களை 7 லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். சீக்கிய சமூகத்தின் நலனுக்காக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதற்கும், குறிப்பாக டிசம்பர் 26-ம் தேதியை வீர் பால் திவஸ் என அறிவிக்கும் முடிவின் மூலம் சார் சாஹிப்சாதேவை கௌரவித்ததற்கும் பிரதமருக்கு பிரதிநிதிகள் குழு நன்றி தெரிவித்தது. குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் ‘சிரோபாவ்’ மற்றும் ‘சிரி சாஹிப்’ விருதுகளை பிரதமருக்கு வழங்கி கவுரவித்தனர்.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு சார் சாஹிப்சாதேவின் பங்களிப்பு மற்றும் தியாகம் பற்றி தெரியாது என்று பிரதமர் கூறினார். பள்ளிகளிலும், குழந்தைகள் முன்னிலையிலும் பேச வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சார் சாஹிப்சாதே பற்றி பேசி வருவதை அவர் நினைவு கூர்ந்தார். டிசம்பர் 26-ம் தேதியை வீர் பால் திவஸ் என்று கொண்டாடும் முடிவு, நாட்டின் அனைத்து மூலைகளிலிருக்கும் குழந்தைகளுக்கு அவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றும்.
தம்மைச் சந்தித்ததற்காக சீக்கிய சமூகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அவர்களுக்காக தமது வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருப்பதாகக் கூறினார். பஞ்சாபில் அவர் தங்கியிருந்த காலத்தில் அவர்களுடனான தமது தொடர்பையும், ஒன்றாகக் கழித்த நேரத்தையும் நினைவு கூர்ந்தார்.
சீக்கிய சமூகத்தின் சேவை மனப்பான்மையை பாராட்டிய பிரதமர், இது குறித்து உலகிற்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். சீக்கிய சமூகத்தின் நலனுக்காக தமது அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் கூறினார். இது தொடர்பாக அரசு எடுத்துள்ள பல நடவடிக்கைகள் குறித்து பேசினார். ஆப்கானிஸ்தானில் இருந்து குரு க்ரந்த் சாகிப்பை முழு மரியாதையுடன் திரும்ப கொண்டு வர செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் விவரித்தார். சீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தை திறக்க இராஜாங்க வழிகள் மூலம் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார்.
வீர் பால் திவஸ் கொண்டாடும் முடிவு, சார் சாஹிப்சாதேவின் தியாகங்களை நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு உணர்த்தும் என்று திரு. மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறினார். கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தை மீண்டும் திறப்பது மற்றும் லங்கர் மீதான ஜிஎஸ்டியை நீக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுத்ததற்காக பிரதமருக்கு சிங் சாஹிப் கியானி ரஞ்சீத் சிங், ஜதேதார் தக்த் ஸ்ரீ பாட்னா சாஹிப் நன்றி தெரிவித்தார். சீக்கிய சமூகத்திற்காக பிரதமர் எடுத்துள்ள பல நடவடிக்கைகள் இதயத்தால் அவர் ஒரு சீக்கியர் என்பதைக் காட்டுவதாக அவர் மேலும் கூறினார். தேசிய சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு. தர்லோச்சன் சிங் பேசுகையில், பிரிவினையின் போது ஏராளமான உயிர்களை தியாகம் செய்த சீக்கிய சமூகத்தின் பங்களிப்பு, சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறை இப்போது தான் அங்கீகரிக்கப்படுகிறது என்று கூறினார். சீக்கிய சமூகத்தின் பங்களிப்பை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றதற்காக பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.