தூய்மை இந்தியா திட்டத்தில் பொதுமக்களை மேலும் உத்வேகத்துடன் ஈடுபடுத்தும் வகையிலும் மகாத்மா காந்தி கண்ட தூய்மையான இந்தியா லட்சியத்தை நிறைவேறுவதற்குத் தூண்டுகோலாக அமையும் வகையிலும் புதிய “தூய்மையே சேவை இயக்கத்தை” (Swachhata Hi Seva movement) பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.
இன்று தொடங்கப்பட்டுள்ள தூய்மையே சேவை இயக்கம் தூய்மைப் பணியில் பொதுமக்களை மேலும் உத்வேகத்துடன் ஈடுபடத் தூண்டுதலாக அமையும். வரும் அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளன்று தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission) நான்கு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தத் தூய்மையே சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்று தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியையொட்டி, நாடு முழுவதும் 17 இடங்களில் உள்ள பல தரப்பட்ட மக்களுடன் பிரதமர் திரு. மோடி காணொலி காட்சியின் வழியாகக் கலந்துரையாடினார்.
பொதுமக்களுடன் கலந்துரையாடிய பிரதமர் திரு. மோடி கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் பல மாநிலங்களில் மொத்தம் 450 மாவட்டங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாவட்டங்களாக மாறியது உள்பட பல்வேறு சாதனைகளை குறிப்பிட்டார். இதே கால கட்டத்தில் 20 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாதவையாக அறிவித்துள்ளன. கழிவறைகளையும் குப்பைத் தொட்டிகளையும் அமைத்தால் மட்டும் போதாது. தூய்மை குறித்து ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய மேம்பாட்டில் நாடு முழுவதும் உள்ள மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தைச் சார்ந்த பள்ளிச் சிறுவர்கள் தங்களது பள்ளியும் அதையொட்டிய பகுதியும் தூய்மையாக இருப்பதற்குத் தாங்கள் செலுத்திய பங்களிப்பைப் பிரதமரிடம் விவரித்தனர். அதற்குப் பதிலளித்த பிரதமர், “இத்தகைய இளம் தலைமுறையினர்தான் சமூக மாற்றத்தின் தூதர்களாக விளங்குகிறார்கள். அந்தச் சிறுவர்கள் தூய்மைப் பணிகள் குறித்த தகவல்களை அவர்கள் தெரிவித்ததற்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
தூய்மையே சேவை இயக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகளை விவரிப்பதற்காக குஜராத் மாநிலம், மேஹ்ஸானா என்ற இடத்தில் கூடிய பால் மற்றும் வேளாண் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரதமருடன் உரையாடியபோது விவரித்தனர். அப்போது பிரதமர் தூய்மையே சேவை இயக்கத்தை அடுத்து வயிற்றுப்போக்கு உள்ளிட்ட சில நோய்கள் குறைந்துவிட்டன என்று தெரிவித்தார்.
அமிதாப் பச்சன்:
மும்பையிலிருந்து இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன், மும்பை கடற்கரை உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தூய்மையே சேவை இயக்கங்களில் தான் பங்கேற்றுள்ளதை விவரித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் முன்னணி தொழிலதிபர் திரு. ரத்தன் டாட்டா பங்கேற்றார். “ஒவ்வொரு இந்தியனின் கனவாக இருக்க வேண்டிய இந்தத் தூய்மையே சேவை இயக்கத்துக்கு உறுதுணையாக இருப்பது பெருமைக்கும் பெருமிதப் படுவதற்கும் உரியது” என்று குறிப்பிட்டார்.
தூய்மையான இந்தியா உருவாவதில் தனியார் துறையினருக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
திரு. சஞ்சய் குப்தா உள்ளிட்ட “தைனிக் ஜாக்ரண்” இதழைச் சார்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் நொய்டாவிலிருந்து இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றார். தூய்மையே சேவை இயக்கத்தில் தங்களது அலுவலகம் செலுத்தும் அதிக அக்கறை குறித்து அவர் விவரி்த்தார்.
இமயமலையின் உச்சியில் எல்லைப் புறத்தில் இருக்கும் இந்திய திபெத் எல்லைக் காவல் படையினர் (ITBP) லடாக் பாங்காங் என்ற மலை உச்சியிலிருந்து இந்தக் காணொலி கலந்துரையாடலில் பங்கேற்றனர். இந்திய எல்லையில் திபெத் எல்லைக் காவல் படையினர் காட்டும் தீரம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை பிரதமர் மிகவும் பாராட்டினார்.
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா இயக்கத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்தக் காணொலிக் கலந்துரையாடலில் பங்கேற்றார். “தூய்மை இந்தியா இயக்கத்தின் மீது கணிசமான அளவு உத்வேகம் ஆர்வம் அதிகரித்து வருகின்றன என்று குறிப்பிட்ட அவர், அது தனது பயணத்தின்போது தெளிவாகத் தெரிகிறது என்றும் சுட்டிக் காட்டினார். பிரதமர் இதற்கு அளிக்கும் உத்வேகத்தை அவர் பெரிதும் பாராட்டினார்.
அதற்கு, பிரதமர் திரு. மோடி, “தூய்மை இந்தியா இயக்கம் என்பது ஒரு நாட்டுக்கோ, ஓர் அரசுக்கோ சொந்தமான இயக்கமல்ல. ஒட்டுமொத்த தேசத்திற்கும் சொந்தமான இயக்கமாகும்” என்று குறிப்பிட்டார்.
இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள சத்தீஸ்கர் மாநிலம் தந்தவடா மற்றும் சேலம் ஆகிய இடங்களைச் சேர்ந்த தூய்மைப் பணி பெண் தொண்டர்கள் (Swachhagrahis) தங்களது பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள் குறித்து பிரதமரிடம் விவரித்தனர். பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் குருத்வாரா, அபு மலையில் பிரம்மகுமாரிகள் இயக்கத்தைச் சார்ந்த தாதி ஜான்கிஜி ஆன்மிகத் தலைவர்களும் பொதுமக்களும் பிரதமருடன் கலந்துரையாடினர். அப்போது, பிரம்மகுமாரி இயக்கத்தினர் இந்தத் தூய்மைப் பணியில் காட்டும் முயற்சிகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர், உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த பொதுமக்கள், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பெங்களூரிலிருந்து ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரும் பிரதமருடன் கலந்துரையாடினர். பிரதமர் தேசத்துக்கும் இளைஞர்களுக்கும் உத்வேகம் அளித்து வருகிறார் என்றார் அவர்.
கங்கை, உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் ஆகிய இடங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவரும் தன்னார்வத் தொண்டர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார். கங்கை அன்னை நதியைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அவர்களைப் பிரதமர் பாராட்டினார். கங்கைக் கரையோரம் வசிக்கும் மக்கள் இந்தத் தூய்மைப் பணி இயக்கத்தின்போது தொண்டர்களுடன் இணைந்து நதியைத் தூய்மையாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆஜ்மீர் தர்காவைச் சேர்ந்த பக்தர்களும் அரியானா ரிவாரியில் உள்ள ரயில்வே பணியாளர்களும் பிரதமருடன் கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலில் கொல்லத்திலிருந்து மாதா அமிர்தானந்தமயியும் இணைந்து கொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துரைகளைத் தொகுத்தளித்த பிரதமர் திரு. மோடி தூய்மையே சேவை இயக்க தொண்டர்களின் (Swachhagrahis) பணிகளைப் பெரிதும் பாராட்டினார்.
“அவர்களது பங்களிப்பு வரலாற்றில் என்றும் நினைவில் கொள்ளப்படும். தூய்மைப் பணி குறித்த நமது நம்பிக்கையும் உறுதியும் வானளாவியது என்று கூறிய பாரதப் பிரதமர், “தூய்மையே சேவை இயக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக ஈடுபாடு காட்ட வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.