இந்தியாவில் தொழில், வணிகம் தொடங்குவதற்கான மிகப் பெரிய அளவிலான அழைப்புக்கான திட்டத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (நவம்பர் 19) புது தில்லி லோக் கல்யாண் மார்கில் தொடங்கிவைத்தார்.
புதிய சிந்தனைகள், செயற்கை அறிவு (Artificial Intelligence), இணையம் தொடர்பானவை (Internet of Things), பெரிய தகவல் திரட்டு (Big Data Analytics), தகவல்களை தொடர்ந்து பதிவு செய்ய வகை செய்யும் தொடரேடு (Blockchain) என்ற தொழில்நுட்பம், அரசு நடைமுறையை எளிதாக்கும் அதி நவீன தொழில்நுட்பம் ஆகியவை இந்த அழைப்பின் குறிக்கோள் ஆகும். இந்த அழைப்பு குறித்த தளமாக “இந்தியாவில் தொடங்குக” திட்டத்தின் இணையவாசல் (Startup India Portal) அமைந்துள்ளது.
திட்டத்தைத் தொடங்கிவைத்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இந்தியாவில் எளிதில் தொழில் வணிகம் தொடங்கும் (Ease of Doing Business) நிலையை மேம்படுத்துவதற்காக தொழிலதிபர்கள் எடுத்துவரும் முயற்சிகளைப் பெரிதும் பாராட்டினார்.
அவர் பேசியதாவது:
உலகில் எளிதாக தொழில் வணிகம் தொடங்கும் சிறந்த நாடுகளின் பட்டியலில் 50 இடங்களுக்குள் இந்தியா இடம் பெறுவது எனது இலக்கு என்று ஆரம்பத்தில் கூறிய போது பலர் அது குறித்து சந்தேகம் எழுப்பினர். ஆனால், அது கடந்த நான்கே ஆண்டுகளில் சாத்தியமாகி வருகிறது. அத்துடன், இந்த காலக் கட்டத்தில் எளிதில் தொழில்தொடங்கும் நிலைக்கான மதிப்பீட்டில் இந்தியா 65 புள்ளிகள் முன்னேறியுள்ளது. அது மட்டுமல்ல, தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இப்போது இந்தியா முதல் 50 இடங்களில் இடம்பெறுவதை நெருங்கிவிட்டது.
எளிதில் தொழில் தொடங்கும் நிலையை மேம்படுத்துவதில் இந்திய அரசும் மாநில அரசுகளும் ஒத்துழைத்து, போட்டித் தன்மையுடன் கூடிய கூட்டாட்சி உணர்வுடன் பாடுபட்டு வருகின்றன.
மத்திய அரசு கொள்கைசார்ந்த ஆளுகையையும் (Policy Driven Governance) வெளிப்படைத் தன்மையுடன் யூகிக்கும் கொள்கைகளையும் (Predictable Transparent Policies) வலியுறுத்தி வருகிறது. அத்துடன், பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்குரிய சீர்திருத்தங்களையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
இன்றைக்கு சிறு தொழில்முனைவோர் எளிதாக தொழில் தொடங்கலாம். அதற்குத் தேவையான மின்சாரம் எளிதில் கிடைக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில் பழமையான 1400 சட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. தொழில் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் இறக்குமதி சரக்குகளை உடனுக்குடன் பைசல் செய்வதிலும் இருந்த கால அவகாசம் வியக்கத் தக்க வகையில் குறைந்துள்ளது. இதைப் போல் பல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை நடத்துவதற்கு ரூ. 1 கோடி வரையிலான கடன் பெறுவதற்கான ஒப்புதல் 59 நிமிடத்தில் வழங்கப்படுகிறது. அந்த அளவுக்கு வேகம் எட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் எதிர்காலம் குறித்து பன்னாட்டு நிதியமும் (IMF) அமெரிக்காவின் நிதிச் சேவை நிறுவனமான மூடியும் (Moody's Analytics) மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளன. இந்தியாவை ஐந்து லட்சம் கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.380 லட்சம் கோடி) பொருளாதார வலிமை கொண்ட நாடாக முன்னேற்றுவதுதான் நமது லட்சியம். இதற்கு ஒவ்வொரு பொருளாதாரத் துறையிலும் முன்னேற்றம் காண்பது அவசியம்.
அவையெல்லாம் நடைமுறைக்கு வரும் வகையிலான தொழில்கொள்கைக்காக மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது. அது புதிய இந்தியாவின் தொழில்முனைவோரின் புதிய இலக்குக்கு உகந்ததாக அமையும்.
இந்தியாவில் எளிதில் தொழில் வணிகம் தொடங்கும் நிலையில் (Ease of Doing Business) முதல் 50 நாடுகளில் இந்தியா இடம்பெறும் வகையில் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.
தொழில் தொடங்குவதற்கான நடைமுறையை விரைவுபடுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பங்களைக் கையாண்டு மனிதர்களின் (பணியையும் நேரத்தையும்) செயல்பாட்டைக் குறைக்க வேண்டும். அத்தகைய பணிக் கலாசாரம் (Work Culture) இந்தியாவின் கொள்கை சார்ந்த ஆளுகையை மேம்படுத்தும்”
இவ்வாறு பிரதமர் திரு மோடி பேசினார்.