2019 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி தேசிய சிறுவர் விருது பெற்றவர்களோடு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (24.01.2019) கலந்துரையாடினார்.
குழந்தைகள் தங்களது சிறப்புச் சாதனைகள் மற்றும் ஊக்கம் தரும் கதைகளை விவரமாக எடுத்துக்கூறினர்.
பிரதமர், விருது பெற்றவர்களின் சாதனைகளை பாராட்டி வாழ்த்துக் கூறினார்.
இந்த விருதுகள் திறன்மிக்க குழந்தைகளை அங்கீகரிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதோடு, மற்றவர்களுக்கு ஓர் உந்து சக்தியாக இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
அபாரமான திறன் கொண்ட இந்தக் குழந்தைகள், இயற்கையோடு தங்களை தொடர்ந்து சம்பந்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
பிரதமரின் கையெழுத்தைக் கோரிய குழந்தைகளோடு, சில சுவையான தருணங்களை பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
பின்னணி
தேசிய சிறுவர் விருதுகள் இரு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன: தனிநபர்களுக்கு சிறுவர் சக்தி விருதுகள்; குழந்தைகளுக்காக பணியாற்றும் அமைப்புக்களுக்கும் தனிநபர்களுக்கும் சிறுவர் கல்யாண் விருதுகள்.
இவ்வருடத்திற்கான சிறுவர் சக்தி விருதுகளுக்கு 783 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் புதுமை, பள்ளி சார் கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், சமூக சேவை மற்றும் வீர தீர செயல்கள் ஆகிய பிரிவுகளின் கீழ், விருது பெறுவதற்கு 26 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேசிய தேர்வுக்குழு சிறுவர் கல்யாண் விருதுக்கு இரண்டு தனிநபர்களையும், மூன்று அமைப்புக்களின் பெயர்களையும் முடிவு செய்தது.