நாட்டு மக்களுடன் உரையாற்றிய சற்று நேரத்தில், மிஷன் சக்தித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாடினார்.
மிஷன் சக்தித் திட்டம் இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகனை வாயிலாக, எதிரிகளின் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக தாக்கி அழிக்கும் திறனைப் பெற்ற உலகின் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்காக விஞ்ஞானிகளை பாராட்டிய பிரதமர், தாங்கள் திட்டமிட்டதை வெற்றிகரமாக நிறைவேற்றி சாதனைப் படைத்த விஞ்ஞானிகளால் ஒட்டுமொத்த நாடே பெருமிதம் அடைவதாக தெரிவித்தார்.
“இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்தின்படி, இந்தியா எந்தவொரு நாட்டிற்கும் சளைத்தது அல்ல என்பதை நமது விஞ்ஞானிகள் உலகிற்கு பறைசாற்றி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகம் ஒரே குடும்பம் என்ற தத்துவத்தை இந்தியா பின்பற்றி வருவதாகவும் பிரதமர் கூறினார். எனினும், அமைதி மற்றும் நல்லெண்ணத்திற்காக பாடுபட்டு வரும் சக்திகள், எப்போதும் வலிமையானதாக திகழ வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலக அளவிலும், பிராந்திய அளவிலும் அமைதி நிலவ வேண்டுமெனில் இந்தியா திறமை வாய்ந்ததாகவும், வலிமையானதாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்திய விஞ்ஞானிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியிருப்பதாகவும் அவர் கூறினார். விஞ்ஞானிகளுக்கு ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையின் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.
தங்களது திறமையை நிரூபிக்க வாய்ப்பு அளித்தமைக்காக, விஞ்ஞானிகள், பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.