கொவிட்-19 நிலவரம் குறித்து ஆன்மீக மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாடினார்.
நாட்டின் நன்மைக்காக சமுதாயம் மற்றும் அரசு இணைந்து பணி புரிவதற்கான மற்றும் ஒரு எடுத்துக்காட்டாக இந்த உரையாடல் விளங்குவதாக பிரதமர் கூறினார். கொரோனா சவால்களை எதிர்கொள்ள இந்த அமைப்புகள் செய்துள்ள பணியை அவர் பாராட்டினார். ஜாதி மற்றும் மதங்களை தாண்டி உதவிகள் செய்யப் பட்டுள்ளதாகவும், இது ஒரே பாரதம் ஒன்றுபட்ட முயற்சி என்பதற்கான ஒளிரும் உதாரணமாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்துவாராக்கள், மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் மையங்களாக மாறியதாகவும், தேவைப்படுவோருக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கியதாகவும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் துரிதகதியில் தொடங்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை குறித்து பேசிய பிரதமர், அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் கொரோனாவுக்கு எதிரான போரில் கவசமாகும் என்று கூறினார். தடுப்பு மருந்து குறித்த விழிப்புணர்வை பரப்புவதிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பான குழப்பங்கள் மற்றும் வதந்திகளை எதிர்கொள்வதிலும் அரசுடன் இணைந்து பணியாற்றுமாறு தலைவர்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். தடுப்பு மருந்து குறித்த தயக்கங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் குறிப்பாக அரசுடன் இணைந்து பணியாற்றுமாறும் அவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். நமது சுகாதார பணியாளர்கள் மக்கள் அனைவரையும் சென்றடைய இது பெரியளவில் உதவும்.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவின் ஒரு அங்கமாக இருக்குமாறும், விடுதலையின் அமிர்தம் கொண்டாட்டங்களில் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்யுமாறும் தலைவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். ஒரே பாரதம் ஒப்பற்ற பாரதம் என்ற உண்மையான உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தின் போது, பாரத் ஜோடோ இயக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த நாட்டை ஒன்றுபடுத்த நாம் பணிபுரிவோம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
பேராசிரியர் சலீம் இன்ஜினியர், அமைப்பாளர், கேந்திரிய தர்மிக் ஜன் மோர்ச்சா மற்றும் துணை தலைவர், ஜமாத்-ஈ-இஸ்லாமி ஹிந்த்; மகாரிஷி பீதாதீஸ்வர் கோசுவாமி சுஷில் மகராஜ், தேசிய அமைப்பாளர், பாரதிய சர்வ தரம் சன்சத், உத்தரப் பிரதேசம்; சுவாமி ஓம்காரந்த் சரஸ்வதி, பீதாதீஸ்வர், ஓம்கார் தாம், புது தில்லி; சிங் சாகிப் கியானி ரஞ்சித் சிங், தலைமை கிராந்தி, குருத்வாரா பங்க்லா சாகிப், புது தில்லி; டாக்டர் எம் டி, தாமஸ், நிறுவன இயக்குநர், நல்லிணக்கம் மற்றும் அமைதி படிப்புகளுக்கான நிறுவனம், புது தில்லி; சுவாமி வீர் சிங் ஹித்காரி, தலைவர், அனைத்திந்திய ரவிதாசிய தரம் சங்கத்தன்; சுவாமி சம்பத் குமார், கல்தா பீத், ஜெய்ப்பூர்; ஆச்சார்யா விவேக் முனி, தலைவர், சர்வதேச மகாவீர் ஜெயின் இயக்கம், புது தில்லி; டாக்டர் ஏ கே மெர்சண்ட், தேசிய அறங்காவலர் & செயலாளர், தாமரை கோவில் மற்றும் இந்திய பஹா’ய் சமூகம், புது தில்லி; சுவாமி சாந்தாத்மானந்த், தலைவர், ராமகிருஷ்ண இயக்கம், புது தில்லி; மற்றும் சகோதரி பி கே ஆஷா, ஓம் சாந்தி ரிட்ரீட் சென்டர், ஹரியானா ஆகியோர் உரையாடலில் பங்கேற்றனர்.
உரையாடலுக்கு ஏற்பாடு செய்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த தலைவர்கள், கொரோனாவுக்கு எதிரான போரில் அவரது சிறப்பான தலைமைக்கு பாராட்டு தெரிவித்தனர். கொவிட்-19 சவால்களை எதிர்கொள்ள பல்வேறு ஆன்மிக மற்றும் சமூக அமைப்புகள் ஆற்றிய சிறப்பான பணி குறித்து அவர்கள் பேசினர். தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த அவர்கள், மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்கான தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.