புயலால் பாதிக்கப்பட்ட லட்சத்தீவு, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார். அப்போது, ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த நாளில் கவரட்டி மற்றும் கன்னியாகுமரி பகுதி மக்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். திருவனந்தபுரம் அருகே புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான புந்துரா-வுக்கும் அவர் பயணம் மேற்கொண்டார். புயலால் தங்களுக்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை பிரதமரிடம் பொதுமக்கள் விளக்கினர். அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். மேலும், இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு தோளோடு தோள் கொடுத்து நிற்கும் என்றும் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கவரட்டி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் தனித்தனியாக ஆய்வுக் கூட்டங்களை பிரதமர் நடத்தினார். இந்தக் கூட்டங்களில் ஆளுநர்கள், கேரளா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்கள், தமிழ்நாடு துணை முதலமைச்சர், மக்களவை துணை சபாநாயகர், லட்சத்தீவு பகுதி நிர்வாகிகள் ஆகியோருடன் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
-
புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரணத் தொகுப்பு நடவடிக்கைகள் மூலம், மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
• கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் தேவைகளை எதிர்கொள்ள உடனடி நிதியுதவியாக ரூ.325 கோடியை மத்திய அரசு வழங்கும்.
• பிரதமர் இன்று அறிவித்துள்ள நிதியுதவி, ஓக்கி புயல் தாக்கியதைத் தொடர்ந்து, இந்த மாதத் தொடக்கத்தில் தமிழகத்துக்கு ரூ.280 கோடியும், கேரளாவுக்கு ரூ.76 கோடியும், வழங்கப்பட்டதற்கும் கூடுதலாக வழங்கப்படும்.
• ஓக்கி புயலால் முழுமையாக சேதமடைந்த சுமார் 1,400 வீடுகளை மறுகட்டுமானம் செய்வதற்கு இந்திய அரசு உதவி செய்யும். இந்த வீடுகளுக்கு பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், முன்னுரிமை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு பயனாளியும் புதிய வீட்டைக் கட்டுவதற்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவி பெறுவார்கள்.
• ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கும் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்குமாறு காப்பீட்டு நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
• புயலால் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் பிரதமரின் தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, மறுஆய்வுக் கூட்டங்களின்போது, இந்தப் பகுதியில் கடந்த 125 ஆண்டுகளில் இதுபோன்று தாக்கிய மூன்றாவது மிகப்பெரிய புயலான ஓக்கியின் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. நவம்பர் 30, 2017-ல் புயல் தாக்கியது. தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் அன்றைய தினமே தொடங்கியது. இதுவரை 20 கப்பல்களை ஈடுபடுத்தி ஒட்டுமொத்தமாக 197 கப்பல் நாட்களுக்கு கடலோர காவல் படை பணியாற்றியுள்ளது. மேலும், 186 மணிநேரங்கள் வானில் பறந்து, தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளை கடலோர காவல் படை மேற்கொண்டுள்ளது. அதோடு, 10 கப்பல்களையும், 7 வகையான விமானங்களையும் இந்திய கடற்படை பயன்படுத்தி, 156 கப்பல் நாட்கள் மற்றும் 399 மணிநேரங்கள் வானில் பறந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த மீட்புப்பணிகளில் உதவுவதற்காக இந்த கப்பல்களில் மீனவர்கள் மற்றும் அரசு நிர்வாகத்தினர் என 183 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இது நாள் வரை, மீட்கப்பட்ட அல்லது உதவியைப் பெற்ற மீனவர்கள் 845 பேர்.
கடற்கரையிலிருந்து 700 கடல்மைல்கள் தொலைவையும் தாண்டி, கண்காணிப்புப் பணி நடைபெற்று வருவதாக பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.