நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ குழுவினருடன் கொவிட் நிலைமை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாடினார்.
கொவிட் இரண்டாம் அலையின் அசாதாரண சூழ்நிலைகளுக்கு எதிரான சிறப்பான போருக்காக ஒட்டுமொத்த மருத்துவத் துறைக்கும், துணை மருத்துவப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், நாடு அவர்களுக்கு கடன்பட்டு இருப்பதாக தெரிவித்தார். பரிசோதனைகளாக இருக்கட்டும், புதிய உள்கட்டமைப்பை குறுகிய காலத்தில் நிறுவுவது ஆகட்டும், அனைத்துமே மிக வேகமாக நடை பெற்றதாக அவர் குறிப்பிட்டார். ஆக்சிஜன் உற்பத்தி குறித்த பல்வேறு சவால்கள் எதிர்கொள்ளப்பட்டு வருகின்றன. எம்பிபிஎஸ் மாணவர்களை கொவிட் சிகிச்சையில் ஈடுபடுத்துவது, ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை கிராமப்புற பகுதிகளில் ஈடுபடுத்துவது போன்ற மனித வளங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் நாட்டின் சுகாதார அமைப்புக்கு கூடுதல் ஆதரவை வழங்கியுள்ளது.
முன்கள வீரர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் இரண்டாம் அலையின் போது நல்ல பலனைக் கொடுத்தது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். நாட்டில் உள்ள சுமார் 90% சுகாதாரப் பணியாளர்கள் முதல் டோஸை ஏற்கனவே பெற்றுவிட்டனர். பெரும்பாலான மருத்துவர்களின் பாதுகாப்பை தடுப்பூசிகள் உறுதி செய்தன.
தங்களது தினசரி பணிகளில் ஆக்சிஜன் தணிக்கையை இணைத்துக் கொள்ளுமாறு மருத்துவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். அதிக அளவிலான நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், அவர்கள் ஒவ்வொருவருக்கும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின் படி பராமரிப்பை உறுதி செய்யுமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு தொலை மருத்துவ சேவை பெரிதும் உதவியதாக குறிப்பிட்ட பிரதமர், கிராமப்பகுதிகளுக்கும் அதை விரிவு படுத்த வேண்டும் என்று கூறினார். குழுக்களை அமைத்து கிராமப்புறங்களில் தொலை மருத்துவ சேவையை வழங்கிவரும் மருத்துவர்களை அவர் பாராட்டினார். நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் இதுபோன்ற குழுக்களை அமைத்து எம்பிபிஎஸ் மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்து, நாட்டின் அனைத்து தாலுகாக்கள் மற்றும் மாவட்டங்களில் தொலை மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
கருப்பு பூஞ்சை சவால் குறித்து பேசிய பிரதமர், அது குறித்த விழிப்புணர்வை உருவாக்க அதிக அளவிலான முயற்சிகளை மருத்துவர்கள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடல்நல பராமரிப்போடு மனநல பராமரிப்பும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். பெருந்தொற்றுக்கு எதிரான நீண்ட போரில் ஈடுபட்டு வருவது மருத்துவத்துறைக்கு மனதளவில் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கூறிய அவர், மக்களின் நம்பிக்கையின் சக்தி அவர்களோடு இந்த போரில் துணை நிற்பதாக குறிப்பிட்டார்.
பிரதமரின் வழிகாட்டுதலுக்கும், பாதிப்புகள் சமீபத்தில் அதிகரித்த போது அவரின் தலைமைக்காகவும் உரையாடலின் போது மருத்துவர்கள் நன்றி தெரிவித்தனர். தடுப்பு மருந்து வழங்குதலில் சுகாதாரப் பணியாளர் களுக்கு முன்னுரிமை அளித்ததற்காக பிரதமருக்கு மருத்துவர்கள் நன்றி தெரிவித்தனர். கொவிட் முதல் அலையின் போதிலிருந்தே தாங்கள் தயாராக இருந்ததாகவும், இரண்டாம் அலையில் சந்தித்த சவால்கள் குறித்தும் மருத்துவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
தங்களது அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான முயற்சிகள் குறித்த தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். கொவிட்டுக்கு எதிரான போரின் போது, கொவிட் இல்லாத நோயாளிகளின் மீதும் முறையான கவனம் செலுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். மருந்துகளை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பது குறித்து நோயாளிகளிடையே விழிப்புணர்வை உருவாக்கி வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்), சுகாதார செயலாளர், மருந்துகள் துறை செயலாளர் மற்றும் பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.