மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமும், நிதி ஆயோக்-கும் இணைந்து ஏற்பாடு செய்த வருடாந்திர நிகழ்வில் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின் போது, எரிசக்தி என்பது மனித வளர்ச்சியின் மையமாக இருக்கிறது; ஆகவேதான் எரிசக்தி துறை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். அனைத்து இந்தியர்களுக்கும் சரிசமமான தூய்மையான, சிக்கனமான மற்றும் நீடித்த எரிசக்தியை வழங்குவதே அரசின் முக்கியமான கொள்கை என்று கூறிய அவர், அதற்காக நாடு ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்திய எரிசக்தி துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால், இந்தியாவை முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய இலக்காக உருவாக்க தொடர்ச்சியான கொள்கை முடிவுகளை தமது அரசு எடுத்து வருவதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கோடிட்டுக் காட்டினார்.
இந்தியா இப்போது எண்ணெய் வளங்கள் கண்டறிதல் மற்றும் உற்பத்தித் திட்டங்களில் 100 சதவிகிதம் அந்நிய முதலீடை அனுமதிப்பதாகக் கூறிய பிரதமர், பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்கள் தாமாக 49 சதவிகிதம் அந்நிய முதலீட்டைப் பெறும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தச் சீர்திருத்தங்கள் காரணமாக இந்தத் துறையில் அந்நிய முதலீடு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த பிரதமர், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி நாடு அடி எடுத்து வைக்கிறது என்றார். `ஒரே தேசம் ஒரு எரிவாயு பாதை’ என்ற இலக்கை முன்னெடுக்க, எரிவாயு குழாய் கட்டமைப்பு முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார். சமைப்பதற்கான தூய்மையான எரிபொருள் மற்றும் போக்குவரத்துக்கான எரிவாயு விநியோகத்தில் உதவுவதற்காக, நகர எரிவாயு விநியோகத்தை விரிவாக்கும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் தமது உரையில் எடுத்துரைத்தார்.
மனித தேவைகளும், விருப்பங்களும் இயற்கை சூழலுடன் முரண்பட முடியாது என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். மக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் இந்தியா நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் கூறினார். எத்தனால் உபயோகத்தை அதிகரிப்பது மற்றும் இரண்டாம் தலைமுறை எத்தனால், அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு, பயோ டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், இறக்குமதியாகும் எரிவாயுவை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக நம் நாடு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். நீடித்த வளர்ச்சி என்ற தத்துவத்தின் அடிப்படையில், சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு போன்ற புதிய அமைப்புகளை வளர்ப்பதற்கு இந்தியா முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக அவர் கூறினார். `ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே எரிசக்தி கட்டமைப்பு’ என்பதே நமது இலக்கு என்றும் பிரதமர் உறுதிபடத்தெரிவித்தார். அருகாமை நாடுகளுக்கு முதலிடம் என்ற இந்தியாவின் முக்கியமான கொள்கை குறித்தும் பிரதமர் எடுத்துக் கூறினார். நேபாளம், வங்கதேசம், இலங்கை, பூடான், மியான்மர் ஆகிய அண்டை நாடுகளுடன் எரிசக்தி தொடர்பான பணிகளை இந்தியா வலுப்படுத்தி வருகிறது என்று கூறினார்.
பிரதமர் தமது உரையின் முடிவில், இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தித் துறை, முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே, இந்தியாவின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக கைகோர்த்து, வளர்ச்சியைப் பகிர்ந்து கொண்டு இந்தியாவின் அனைத்து வடிவத்திலான எரிசக்தி உற்பத்தியையும் விரிவாக்கம் செய்வதற்கு சர்வதேச தொழில்துறையினருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்வில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் 40 தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் 28 தலைவர்கள் பிரதமரிடம் தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர். அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில்துறை மற்றும் நவீன தொழில்நுட்பத்துறை அமைச்சருமான டாக்டர் சுல்தான் அகமது அல் ஜபார், கத்தார் எரிசக்தி விவகாரத்துறை அமைச்சர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான திரு.சாத் ஷெரிடா அல்-காபி, ஒபெக் பொதுச்செயலாளர் திரு.முகமது சனுசி பார்கிண்டோ, ஐஇஏ செயல் இயக்குனர் டாக்டர் ஃப்யெத் பைரோல், ஜிஇசிஎஃப்-பின் யூரி சென்டியூரினின், இங்கிலாந்தின் ஐஎச்எஸ் மார்கிட்டின் துணைத்தலைவர் டாக்டர்.டேனியல் யெர்க்கின் ஆகியோரும் துறை சார்ந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ரோசென்ஃப்ட், பிபி, டோட்டல், லியோண்டெல் பாஸல், டெல்லூரியன், ஷுலம்பெர்க்கர், பேக்கர் ஹியூஸ், ஜெரா, எமர்சன், எக்ஸ்-கோல் ஆகியவை உள்ளிட்ட முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.