மும்பையில் இன்று (26.06.2018) வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். இந்தியப் பொருளாதாரத்தின் பரந்த தோற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 41 வர்த்தகத் தலைவர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விரிவான விவாதத்தில் கடந்த நான்காண்டுகளில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் முன் முயற்சிகள் இடம் பெற்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொழில்துறையின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நாட்டின் வர்த்தகச் சூழலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தொழில்துறைப் பிரதிநிதிகள் பலர் பாராட்டு தெரிவித்தனர். இது இந்தியாவின் வளர்ச்சித்திறனை உணர்வதற்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறினர். பிரதமரின் புதிய இந்தியா என்ற தொலைநோக்கு திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
புதியன உருவாக்குதல், தொழில் முயற்சிகள் என்பதுமுடன் தமது அண்மைக்கால விவாதங்கள் இருந்ததாகப் பிரதமர் தெரிவித்தார். ஆக்கப்பூர்வமான மனநிலையும், “செய்ய முடியும்” என்ற உணர்வும் தற்போது நாட்டில் பரவியிருப்பதாக அவர் தெரிவித்தார். கார்ப்பரேட் நிறுவனங்கள் பெருமளவில் குறிப்பாக வேளாண்துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பற்றி வற்புறுத்திய அவர், மருத்துவ சாதனங்கள், மின்னணு கருவிகள், பாதுகாப்பு தளவாடங்கள் போன்றவற்றில் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
முன்னதாக, கடந்த நான்காண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை நிதியமைச்சர் திரு.பியூஷ் கோயல் சிறப்பித்துக் கூறினார். கொள்கை முன்முயற்சிகள், வளர்ச்சிக்கு முழுமையான அணுகுமுறைகள், புதிய கண்டுபிடிப்பு உணர்வு, தொழில்நுட்பம் ஆகியவை குறித்தும் அவர் பேசினார்.