இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்து அளித்தார். பாரா தடகள வீரர்களும் அவர்களது பயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
ஒட்டுமொத்த குழுவினருடன் பிரதமர் இயல்பாகக் கலந்துரையாடினார். போட்டிகளில் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையைப் படைத்த அவர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அவர்களது இந்த சாதனை, விளையாட்டு சமூகம் மொத்தத்திற்கும் ஊக்கமளிக்கும் என்றும், விளையாட்டுகளில் முன்னேற இளம் வீரர்களுக்கு எழுச்சியூட்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவர்களது செயல் திறனால் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு பெருமளவு அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக, குழுவினரின் அசைக்கமுடியாத மனநிலை மற்றும் உறுதிப்பாட்டைப் பாராட்டிய பிரதமர், பாரா தடகள வீரர்கள் தங்களது வாழ்வில் எதிர்கொண்ட பல்வேறு கடினமான தடைகளைக் கருத்தில் கொண்டு இந்த செயல்திறன் போற்றத்தக்கது என்று கூறினார். போட்டிகளில் வெற்றி பெறாத வீரர்களின் மனநிலையை ஊக்குவிக்கும் வகையில், உண்மையான விளையாட்டு வீரர், வெற்றி, தோல்விகளால் துவளாமல் முன்னேறிச் செல்வார் என்று பிரதமர் குறிப்பிட்டார். அந்த பாரா வீரர்கள் தான் நாட்டின் தூதர்கள், தங்களது குறிப்பிடத்தக்க செயல்திறனால் உலக அரங்கில் தேசத்தின் புகழை வீரர்கள் உயர்த்தியிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
தங்களது தவம், புருஷார்த்தம் மற்றும் பராக்கிரமம் வாயிலாக மக்கள் தங்கள் மீது கொண்டிருந்த பார்வையை தடகள வீரர்கள் மாற்றியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவ கொண்டாட்டத்தின் இந்தக் காலகட்டத்தில் மக்களை ஊக்கப்படுத்தவும், மாற்றம் ஏற்படுத்த உதவும் வகையிலும், விளையாட்டுக்கு வெளியேயும் சில துறைகளைக் கண்டறிந்து அவற்றிலும் ஈடுபடுமாறு பாராலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
தங்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்த பாராலிம்பிக் தடகள வீரர்கள், அவருடன் மேசையைப் பகிர்ந்து கொள்வதே மிகப்பெரும் சாதனை என்று குறிப்பிட்டனர். குறிப்பாக, தங்களது முயற்சிகள் அனைத்திற்கும் தொடர்ச்சியான வழிகாட்டுதல், ஊக்குவிப்பு மற்றும் ஆதரவு அளித்து வரும் பிரதமருக்கு நன்றி தெரிவித்ததுடன், பிரதமரிடம் இருந்து தொலைப்பேசியில் தங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது என்பதை அறிந்து பிற நாட்டு வீரர்கள் வியப்படைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். தங்களது பயிற்சிக்கு தேவையான சிறந்த ஏற்பாடுகளை அரசு எவ்வளவு தீவிரமாக மேற்கொண்டது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
பல்வேறு வீரர்கள் தாங்கள் பதக்கம் வென்ற விளையாட்டு உபகரணங்களில் தங்களது கையொப்பமிட்டு அதனை பரிசாக பிரதமருக்கு அளித்தனர். அனைத்து வீரர்களும் கையொப்பமிட்ட அங்கியும் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டது. விளையாட்டு உபகரணங்கள் ஏலம் விடப்படும் என்ற பிரதமரின் கருத்தை வீரர்கள் வரவேற்றனர். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.