இந்தியா ஆசியான் உறவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் ஆசியான் – இந்தியா நினைவு உச்சிமாநாட்டையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகர் மேதகு டா ஆங் சான் சூ சி, வியட்நாம் பிரதமர் மேதகு யூன் க்சுவான் ஃபூ, பிலிப்பைன்ஸ் பிரதமர் மேதகு திரு. ரோட்ரிகோ ரோ ட்யூடெர்ட் ஆகியோருடன் தனித்தனியாக இருதரப்பு உறவுகள் குறித்து சந்தித்துப் பேச்சுகள் நடத்தினார்.
ஆசியான் – இந்தியா நினைவு உச்சிமாநாட்டில் பங்கேற்கவும், இந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று வந்திருக்கும் அவர்களுக்கு பிரதமர் வரவேற்பு அளித்தார்.
மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ சி உடன் பிரதமர் மோடியின் சந்திப்பின் போது இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதுடன், இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 2017 செப்டம்பரில் பிரதமர் மோடியின் மியான்மர் பயணத்தின்போது எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் தொடர் நடவடிக்கையும் இதில் அடங்கும்.
வியட்நாம் பிரதமர் ஃபூ உடன் நடைபெற்ற சந்திப்பில் இரு தலைவர்களும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் முழுமையான யுக்திபூர்வமான பங்களிப்புக்கான கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் வளர்ச்சி குறித்து திருப்தி தெரிவித்தனர். இந்தப் பயணத்தின் போது தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையிலும், தரவு கண்காணிப்பு மற்றும் தரவு வரவேற்பு நிலையம் மற்றும் தரவு நடைமுறைப்படுத்தும் வசதியை ஆசியான் இந்தியா விண்வெளி ஒத்துழைப்பு கீழ் வியட்நாமில் அமைப்பதற்கான இரு ஒப்பந்தங்களும் இந்திய வியட்நாம் உறவுக்கு ஊக்கத்தை அளிப்பதாக இருக்கும் என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். 100 மில்லியன் டாலர் கடன் திட்டத்தின் கீழ் எல் அண்ட் டி நிறுவனம் ஓ.பி.வி. எனப்படும் கரையோர ரோந்து வாகனங்களை தயாரிக்கும் திட்டம் குறித்தும் அவர்கள் திருப்தி தெரிவித்தனர். 500 பில்லியன் டாலர் கடன் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அவர்கள் முடிவு செய்தனர்.
அதிபர் ட்யூரெட் உடன் நடந்த சந்திப்பின் போது இருதலைவர்களும் இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஆய்வு செய்ததுடன் 2017 நவம்பரில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் உலகளாவிய மற்றும் பிராந்திய சூழ்நிலை குறித்தும் ஆய்வு செய்தனர். இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை குறிப்பாக உள்கட்டமைப்புத் துறையில் வேகம் கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் பிலிப்பைன்ஸ்சின் பில்டு-பில்டு-பில்டு திட்டத்தின் கீழ் இரு நாடுகளின் தனியார் துறைகளுக்கு இடையே பல துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இன்வெஸ்ட் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ்சின் முதலீடுகள் வாரியத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருதலைவர்கள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.இந்த மூன்று சந்திப்புகளிலும் அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகள் இந்திய பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் இந்தியா இடையே அமைதி, பாதுகாப்பு மற்றும் சமூக பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இது தொடர்பான ஆலோசனைகள் ஆசியான் இந்தியா உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.