தமது சமீபத்திய மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாகக் கடைபிடிக்கப்பட இருப்பதைச் சுட்டிக்காட்டினார். தேசமும், ஊட்டச்சத்தும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு உள்ளவை என்றும் அவர் குறிப்பிட்டார். நாம் உட்கொள்ளும் உணவும், நமது மனநலம் மற்றும் அறிவுசார் மேம்பாடும் நேரடியாக தொடர்புகொண்டவை என்பதைக் குறிக்கும் விதமாக, எத்தகைய உணவு உட்கொள்கிறோமோ அதற்கேற்ற மனநிலை தான் உருவாகும் என்ற பழமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். ஊட்டச்சத்தும், சத்துள்ள உணவும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தங்களது வயதுக்கேற்ற திறனை அடைய உதவுவதோடு, அவர்களது மன தைரியத்தை வெளிப்படுத்தவும் உதவும் என்று அவர் தெரிவித்தார். குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாகப் பிறக்க வேண்டுமெனில், தாய்மார்கள் சத்துமிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியம் என்றார். ஊட்டச்சத்து என்பது சாப்பிடுவது மட்டும் அல்ல என்று கூறிய அவர், உப்பு, வைட்டமின் போன்ற அத்தியாவசிய சத்துப் பொருள்களை உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள், குறிப்பாக கிராமப்புறங்களில் பொதுமக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் ஊட்டச்சத்து வாரம் மற்றும் ஊட்டச்சத்து மாதம் போன்றவை, ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை மாபெரும் மக்கள் இயக்கமாகவே மாற்றியுள்ளதாகவும் பிரதமர் கூறினார். இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தில், பள்ளிக்கூடங்களையும் இணைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், குழந்தைகளிடையே ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான போட்டிகள் நடத்தப்படுவதை உறுதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
ஒரு வகுப்பில் மாணவர்களைக் கண்காணிக்க ஆசிரியர்கள் இருப்பது போன்று, ஊட்டச்சத்துக் கண்காணிப்பாளரும் தேவை என பிரதமர் தெரிவித்தார். அதேபோன்று, மாணவர்களின் முன்னேற்றத்தை அறிந்துகொள்ள மதிப்பெண் விவர அட்டை வழங்கப்படுவது போன்று, ஊட்டச்சத்து விவர அட்டை முறையும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஊட்டச்சத்து மாதத்தின்போது, மை கவ் இணையதளத்தில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய வினாடி-வினா போட்டிகளும் மீம் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். நேயர்கள் இதில் பெருமளவில் பங்கேற்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
குஜராத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலை வளாகத்தில், பிரத்யேகமான ஊட்டச்சத்துப் பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு ஊட்டச்சத்து பற்றிய பாடம், வேடிக்கை மற்றும் வினோதங்களுடன் எடுத்துரைக்கப்படுவதை காண முடியும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியா, பன்முக உணவும், பானங்களும் பரிமாறப்படும் நாடு என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அந்தந்தப் பகுதியின் பருவகாலத்திற்கேற்ற, சமச்சீரான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த, உணவுத் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதோடு, இவை, அப்பகுதியில் விளையும் உள்ளூர் உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படுபவையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையக்கூடிய பயிர்கள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு பற்றிய முழுமையான தகவல் அடங்கிய “இந்திய வேளாண் நிதியம்” ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நேயர்கள் அனைவரும், ஊட்டச்சத்து மாதத்தில், ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை உட்கொண்டு, ஆரோக்கியத்துடன் இருக்குமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.