ஆசியான் அமைப்பு தலைவரான சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ சியான் லூங் எழுதிய கட்டுரைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான “ஆசியான் அமைப்பு தலைவரான சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ சியான் லூங் எழுதிய பிரமாதமான கட்டுரை. இந்தியா – ஆசியான் உறவுகளின் வளமான வரலாறு, வலுவான ஒத்துழைப்பு, எதிர்கால உறுதிமொழி ஆகியவற்றை அழகாக உள்ளடக்கி உள்ளது இந்தக் கட்டுரை” என்று பிரதமர் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ சியான் லூங் “ஆயிரம் ஆண்டுகால ஒத்துழைப்பை புதுப்பிப்போம் : ஆசியானுடன் இந்தியா மேலும் நெருக்கமாக ஒருங்கிணைவதற்கு சிங்கப்பூர் பெரும் பங்கு ஆற்றியுள்ளது”. என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் தலையங்கப் பக்கத்தில் இன்று (25.01.2018) வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையேயான மிகப்பழமையான வியாபார, வர்த்தக மற்றும் பண்பாட்டு இணைப்புகள் உறவுகளை மேலும் வலுப்படுத்த முக்கியப் பங்காற்றி உள்ளதாக இக் கட்டுரையில் திரு லீ தெரிவித்துள்ளார்.
ஆசியான் இந்தியா உறவுகளின் 25 ஆண்டுகள் நினைப்படுத்தும் இந்த தருணத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் தொடர்புகள் 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். இந்தியாவுக்கும் கம்போடியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொன்மையான உறவுகள் தென்கிழக்கு ஆசியாவின் பண்பாடுகள், பாரம்பரியங்கள், மொழிகள் ஆகியவற்றின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தோனேசியாவில் யோகியாகர்த்தா அருகே உள்ள பரோபுடோர் மற்றும் பிரம்பணன் கோவில்கள், மலேசியாவின் கேடா அருகே உள்ள பழமையான வழிபாட்டு இடங்கள், கம்போடியாவின் சியம் ரீப் அருகே உள்ள அங்கோர் வாட் கோவில் வளாகம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தளங்களில் நாம் இந்தியா சார்ந்த இந்து – புத்த சமய தாக்கங்களை காணமுடிகிறது. தென்கிழக்கு ஆசியாவின், இந்தோனேசியா, மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட பல கலாச்சாரங்களில் ராமாயணம் பொதிந்து கிடப்பதைக் காணமுடியும். சிங்கப்பூரின் மலாய் மொழிபெயரான சிங்கப்பூரா என்பது சமஸ்கிருத மொழியில் சிங்க நகரம் என்ற பொருள்படும் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
ஆசியான் சமுதாயத்தில் இந்தியாவைச் சேர்க்க வேண்டும் என சிங்கப்பூர் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்று பயணமாக வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 1992 – ல் ஆசியான் பகுதிப் பேச்சுவார்த்தை கூட்டாளியாகவும், 1995 – ல் ஆசியான் பேச்சு வார்த்தை கூட்டாளியாகவும் ஆகிய இந்தியா 2005 – ம் ஆண்டிலிருந்து கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்று வருகிறது. கிழக்கு ஆசிய உச்சி மாநாடு என்பது வெளிப்படையான, அனைத்தையும் உள்ளடக்கிய, வலுவான மண்டல கட்டமைப்பு. மேலும் மண்டலத்தின் முக்கிய தலைவர்கள் தலைமையிலான அமைப்பு.
ஆசியான் இந்தியா உறவுகளின் 20 – வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 2012 – ம் ஆண்டு கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பாக வலுப்படுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று ஆசியானும், இந்தியாவும் ஆசியான் அமைப்பின் அரசியல் – பாதுகாப்பு பொருளாதாரம் மற்றும் சமூகப் பண்பாட்டு தூண்களாக பன்முக ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் “கிழக்கு நோக்கிய செயல்பாடு’ கொள்கை மற்றும் வர்த்தகம், இணைப்பு, பண்பாடு எனப் பொருள்படும் 3 – சி கொள்கை ஆகியன ஆசியான் உடனான ஒத்துழைப்பு விரிவானதாக உள்ளது என்பதற்கு அத்தாட்சிகளாகும். நம்மிடையே ஒத்துழைப்புக்கான தலைவர்கள் ஆண்டு உச்சிமாநாடு, அமைச்சர்கள் நிலையிலான 7 பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட 30 மேடைகள் ஏற்பட்டுள்ளன. ஆசியான் மண்டல அமைப்பு, ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூடுதல் கூட்டங்கள், கிழக்கு ஆசிய உச்சிமாநாடு போன்றவை உள்பட பல்வேறு ஆசியான் தலைமையிலான மேடைகளை இந்தியா தீவிரமாக பங்கேற்று உள்ளது.
வியாபாரம் மற்றும் வர்த்தக உறவுகள் பற்றி குறிப்பிடுகையில் ஆசியான் இந்தியா வரி அற்ற வர்த்தக பகுதி உடன்பாட்டுடன் ஆசியான் இந்தியா வர்த்தகம் 1993 – ல் 2.9 பில்லியன் டாலர் என்ற அளவிலிருந்து 2016 – ல் 58.4 பில்லியன் டாலர் அளவாக உயர்ந்துள்ளது என அவர் குறிப்பிடுகிறார். சமூகப்பண்பாட்டு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை ஆசியான் – இந்தியா மாணவர்கள் பரிமாற்றத்திட்டம், ஆண்டுதோறும் நடைபெறும் தில்லி பேச்சுகள் ஆகியன மக்கள் தொடர்புகளை நெருக்கமாக ஏற்படுத்தி உள்ளன என்றார். இந்த மேடைகள் மூலம் நமது இளைஞர்கள், கல்வியாளர்கள், வர்த்தகர்கள் சந்தித்து, கற்றுக்கொண்டு, உறவுகளை ஆழப்படுத்தி உள்ளனர்.
ஆசியான் இந்தியா உறவுகளின் வெள்ளிவிழாவைக் குறிக்கும் வகையில் இருதரப்பும் பல்வேறு நினைவு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளன. சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற பிரவாசி பாரதீய தினக் கொண்டாட்டம் அங்கு வாழும் இந்திய மக்களின் பங்களிப்புக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்துள்ளது. இன்று நடைபெறும் ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாடு இந்தக் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்காக புதுதில்லி வந்துள்ள ஆசியான் தலைவர்கள் இதனைக் கவுரவமாக கருதுகின்றனர். நாளை நடைபெற உள்ள குடியரசுதின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள இவர்கள் இதற்காக மிகுந்த பெருமை அடைகிறார்கள்.
தற்போதைய பெரிய உலக போக்குகள் கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை மாற்றியமைத்திருப்பதுடன் புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளன என்று சிங்கப்பூர் பிரதமர் இக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். கேந்திரிய சம நிலைகள் மாறி வருகின்றன. உலக மயமாக்கல், வரியற்ற வர்த்தகம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள கருத்து ஒருமைப்பாடு சற்று குறைந்து வரும் நிலையில் ஆசியாவின் நிலவரம் நேர்மறை நோக்குடனேயே தொடருகிறது. இந்த பொருளாதார ஒருங்கிணைப்பை நாம் மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். தற்போது உருவாகி வரும் பயங்கரவாதம், சைபர் குற்றங்கள், பருவநிலைமாற்றம் உள்ளிட்ட எல்லை கடந்த சவால்களை கையாள்வதில் நாம் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
தற்போதைய புவி அரசியல் உறுதியற்ற நிலவரம் ஆசியானின் இந்தியா போன்ற நண்பர்களுடனான ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்று சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளார். மண்டலத்தில் அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றில் பொதுவான அக்கறையையும், வெளிப்படையான, சமச்சீரான, அனைத்தையும் உள்ளடக்கிய மண்டல கட்டமைப்பையும் இந்தியாவும் ஆசியானும் பகிர்ந்து கொண்டுள்ளன என்றார் அவர். இந்தியப் பெருங்கடல் முதல் பசிபிக் கடல் வரை அமைந்துள்ள முக்கிய கடல்வழிப்பாதைகளில் இந்தியா மையமான இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கடல்வழிப்பாதைகள் ஆசியான் உறுப்பு நாடுகள் பலவற்றின் முக்கிய வர்த்தக பாதைகளான உள்ளன. இந்த முக்கிய கடல்சார்ந்த வர்த்தக மார்க்கங்களைப் பாதுகாப்பதில் இருதரப்பினரும் ஆர்வம் கொண்டுள்ளனர்.
ஆசியான் மற்றும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 1.8 பில்லியன் என்பது உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதி என்றும் இது இந்த இரு தரப்பின் முக்கியத்துவத்தையும், வலிமையையும் எடுத்துக் காட்டுகிறது என்று திரு லீ சியான் லூங் குறிப்பிட்டுள்ளார். இருதரப்பும் இணைந்த உள்நாட்டு மொத்த உற்பத்தி 4.5 டிரில்லியன் டாலர் அளவை தாண்டுகிறது. 2025 – ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் நுகர்வோர் சந்தை உலகிலேயே 5 – வது மிகப்பெரிய சந்தையாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். அதே சமயம் தென்கிழக்கு ஆசியாவில் நடுத்தர வகுப்பு வீடுகள் எண்ணிக்கை இரட்டிப்பாகி 163 மில்லியன் அளவைத் தொடும் என்றார். இரண்டு மண்டலங்களும் மக்கள் தொகை அடிப்படையிலான லாப ஈவுகளை அனுபவித்து வருகின்றன – ஆசியான் மக்கள் தொகையும் 60 சதவீதம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அதே சமயம் 2020 வாக்கில் இந்திய மக்களின் சராசரி வயது 29 என்று ஏற்பட்டு அந்தநாடு உலகிலேயே இளைஞர் அதிகமுள்ள நாடாக திகழும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆசியானும் இந்தியாவும் விரைவாக வளர்ந்துவரும் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது. இதனை அடுத்து டிஜிட்டல் பொருளாதாரத்தில் நாம் வளர வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்தப் பின்னணியில் இந்தியா – ஆசியான் உறவுகளை மேலும் வளர்ப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 2016 – ல் ஆசியானின் வெளிவர்த்தகத்தில் இந்தியா 2.6 சதவீதத்தையும் பெற்றுள்ளது என்ற நிலவரம் இந்த வளர்ச்சிக்கு கட்டியம் கூறுகிறது.
பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பு திட்டங்களாக மூன்று திட்டங்களை சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.
முதலாவதாக ஆசியானும் இந்தியாவும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்தும் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும். தற்போதுள்ள ஏ.ஐ.எஃப்.டி.ஏ உள்ளிட்ட வழிவகைகளை மேம்படுத்தி பொருந்தக் கூடியனவாக மாற்ற வேண்டும். தற்போதுள்ள ஏ.ஐ.எஃப்.டி.ஏ – க்கு பதிலாக உயர்தரமுள்ள விரிவான மண்டல பொருளாதார ஒத்துழைப்பு (ஆர்சிஇபி) இறுதி செய்வதில் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இதனால் உலக மக்கள் தொகையில் பாதிப்பேரை உள்ளடக்கிய, உலக உள்நாட்டு மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள ஒருங்கிணைந்த ஆசிய சந்தையை உருவாக்க முடியும். விதிகளையும் கட்டுப்பாடுகளையும் செம்மைப்படுத்தி இரு வழிகளிலுமான முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும், இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாடு கொள்கையை நிறைவு செய்ய வேண்டும், மண்டலத்திற்கான இந்தியாவில் தயாரிப்போம் ஏற்றுமதிகளுக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக பெரிய அளவிலான நிலம், ஆகாயம், கடல் இணைப்புகளால் நமது மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். இந்தியா – மியான்மர் – தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை விரிவாக்கத்திட்டம், ஆசியானுடனான இணைப்பு அடிப்படை வசதி மேம்பாட்டுக்கு இந்தியா வழங்க முன்வந்துள்ள ஒரு பில்லியன் டாலர் பணஉதவி உள்ளிட்ட நடவடிக்கைகள் நிலம் சார்ந்த இணைப்பை மேம்படுத்தும் இந்தியாவின் நடவடிக்கைகள் என அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஆசியான் – இந்தியா விமானப் போக்குவரத்து உடன்பாட்டை விரைவில் இறுதி செய்வது உள்ளிட்ட இணைப்புத் திட்டங்களை மேம்படுத்த இந்தியாவுடன் நெருங்கி ஒத்துழைப்பதை ஆசியான எதிர்நோக்கி இருப்பதாக அவர் கூறுகிறார். இதனால் இம் மண்டலத்தில் மக்கள் தொடர்புகள் அதிகரிக்கும். ஆசியான் அமைப்பின் போக்குவரத்து நிறுவனங்கள் வளர்ந்துவரும் புதிய சந்தைகளை குறிப்பாக வர்த்தகம், முதலீடு, சுற்றுலா சந்தைகளை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
ஒத்துழைப்புக்கான முக்கியப் பகுதிகளில் மற்றும் ஒன்று டிஜிட்டல் இணைப்பு ஆகும். இந்த இணைப்பு எதிர்கால மக்கள் தொடர்புகளை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்தது. இந்தியாவின் ஆதார் நடைமுறைகள் புதிய வாய்ப்புகளை உருவாக்கி உள்ளன. இந்தியா – ஆசியான் நிதித் தொழில்நுட்ப மேடைகளையும், மின்னணு செலுத்துகை முறைகளையும் ஒருங்கிணைத்தல் நடவடிக்கையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
இந்தியாவும் ஆசியானும் புதிய ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளை எதிர்நோக்கி உள்ளன என்று திரு. லீ சியான் லூங் கூறியுள்ளார். அமைப்புத் தலைமை என்ற வகையில் சிங்கப்பூரின் நோக்கம், ஆசியான் அதிநவீன நகரங்கள் கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும். இந்த வகையில் சிங்கப்பூரும் இந்தியாவும் இயல்பான நண்பர்கள் ஆவர். இந்தியா விரைவாக நகரமயமாகி வருகிறது: 100 அதிநவீன நகரங்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நோக்கிய இந்தியாவுக்கு நகரமயமான அரசாக விளங்கும் சிங்கப்பூர் ஒத்துழைப்பு நல்க தயாராக உள்ளது. எமது அனுபவத்தின் அடிப்படையில் நகர தீர்வுகளை உருவாக்க உதவ முடியும். இதற்கு ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகர் அமராவதி உதாரணமாகும்.
இந்தக் கட்டுரையின் நிறைவாக சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிடுவது, ஆசியான் இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதில் சிங்கப்பூர் உறுதியுடன் உள்ளது என்பதாகும். இருதரப்பினரும் இன்றைய சவால்களைச் சமாளிக்க தங்களது வரலாற்று மற்றும் பண்பாட்டு இணைப்புகளைப் பயன்படுத்தினால் எதிர்கால உறவுப் பாலங்கள் உருவாகும் : நமது இளைஞர்களும் அடுத்த சந்ததியினரும் இதனால் பெரும் பலனை அடைவார்கள்.
A wonderful article by @ASEAN Chair Singapore’s PM, Mr. @leehsienloong. It beautifully covers the rich history, robust cooperation and promising future of India-ASEAN relations. https://t.co/FPGfI1eLbj
— Narendra Modi (@narendramodi) January 25, 2018