பிரதமர் திரு. நரேந்திர மோடி “ஐ.என்.எஸ். கல்வாரி” எனப்படும் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார்.
இதற்காக நாட்டு மக்களுக்குப் பாராட்டு தெரிவித்த பிரதமர், “ஐ.என்.எஸ். கல்வாரி கப்பல் இந்தியாவிலேயே தயாரிக்கவேண்டும் என்ற கோட்பாட்டுக்குச் சிறந்த உதாரணமாகும்” என்று வருணித்தார். இந்தக் கப்பலை வடிவமைப்பதில் ஈடுபட்ட அனைத்துப் பிரிவினரையும் பிரதமர் மிகவும் பாராட்டினார். இந்தியாவுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையில் வேகமாக வளர்ந்துவரும் தளத்தகை கூட்டாண்மைக்கு சரியான அடையாளமாக ஐ.என்.எஸ். கல்வாரி திகழ்கிறது. ஐ.என்.எஸ். கல்வாரி இந்தியக் கடற்படைக்கு மேலும் அதிக பலத்தை அளிக்கும்” என்றார்.
“இந்த 21ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கான நூற்றாண்டு ஆகும். 21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கான பாதை இந்தியப் பெருங்கடல் வழியே அமையும் என்பது நிச்சயம். அதனால்தான், இந்திய ஆட்சி அரசியலில் இந்தியப் பெருங்கடல் முக்கிய இடத்தை வகிக்கிறது” என்றார்.
“சாகர் (SAGAR) என்ற ஆங்கிலச் சொல்லை மண்டலத்தில் உள்ள எல்லோருக்கும் (All in the Region) பாதுகாப்பு (Security), வளர்ச்சி (Growth) என்பதன் சுருக்க வடிவம் என்று புரிந்துகொள்ளலாம். இந்தியப் பெருங்கடலின் உலகளாவிய, உத்தி சார்ந்த, பொருளியல் நலன்கள் சார்ந்தவை குறித்து இந்தியா முழுமையான விழிப்புடன் இருக்கிறது. அதனால்தான், இந்த மண்டலத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மேம்படுவதில் நவீன, பன்முகம் கொண்ட இந்திய கடற்படை முக்கியப் பங்கை ஆற்றுகிறது.
கடலின் உள்ளார்ந்த வளங்கள் நமது தேச மேம்பாட்டுக்கு பொருளாதார பலத்துக்குக் கூடுதல் வலு சேர்க்கிறது. அதனால்தான், கடல்வழியாகத் தாக்கும் பயங்கரவாதம், கடற்கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் ஆகிய சவால்கள் குறித்து விழிப்புடன் இருந்து வருகிறது. இந்த சவால்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்த மண்டலத்தில் உள்ள இதர நாடுகளும் சந்திக்கின்றன. இது விஷயத்தில் இந்தியா மிக முக்கியமான பங்கை ஆற்ற வேண்டியிருக்கிறது.
உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்றும் அதை நிறைவேற்றுவதில் உலகளாவிய பொறுப்பு இருக்கிறது என்றும் இந்தியா நம்புகிறது. சிக்கலான கால கட்டத்தில் கூட்டாளி நாடுகளுக்குக் கைகொடுக்கும் முதல் நாடாக இருந்து வருகிறது. இந்திய ராஜிய நிலைப்பாடு மற்றும் இந்திய பாதுகாப்பு ஆகியவற்றில் மனிதநேய அணுகுமுறையே இந்தியாவின் சிறப்புத் தன்மைக்குக் காரணம். மானுடத்தைக் காப்பதில் வலிமையான திறமையான இந்தியாவுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் உலக நாடுகள் இந்தியாவுடன் இணைந்து நடைபோட விரும்புகின்றன.
பாதுகாப்பு, ராணுவம் ஆகியவை தொடர்பான முழுமையான சூழல் கடந்த மூன்று ஆண்டுகளாக மாறிவிட்டன. ஐ.என்.எஸ். கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரிக்கும்போது, அதில் அதிகமான திறன்கள் சேர்க்கப்பட்டது கூடுதலான பலமாக உள்ளது.
ஒரு பதவி – ஓர் ஓய்வூதியம் என்ற நீண்டகாலக் கோரிக்கை தீர்க்கப்படவேண்டும் என்று அரசு உறுதிபூண்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதச் செயல் மூலம் நடத்தப்பட்ட போலிப் போர் தோல்வியடைந்ததற்கு அரசின் கொள்கைகள், ஆயுதப் படையினரின் தீரச் செயலும் உறுதி செய்துள்ளது.
தேசத்தின் பாதுகாப்புக்காக தங்களது இன்னுயிர்களை நீத்த தியாகிகளுக்கு மிகுந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்”
இவ்வாறு பிரதமர் பேசினார்.