குஜராத் மாநிலம் ஹசிராவில் உள்ள எல் & டி துப்பாக்கித் தொழிற்சாலையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.01.2019) நாட்டிற்கு அர்ப்பணித்தார். அந்த வளாகத்தை சுற்றிப் பார்த்த பிரதமர், இத்திட்டத்தின் பின்னணியில் உள்ள புதுமை மற்றும் கண்டுபிடிப்பு உணர்வுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். நவ்சாரியில் நிராலி புற்றுநோய் மருத்துவமனைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை அந்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் புற்றுநோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள் கிடைக்க உதவிகரமாக இருக்கும்.
இந்த நிகழ்ச்சியுடன் தமது குஜராத் பயணத்தை நிறைவு செய்த பிரதமர், மூன்று நாள் பயணத்தின் அடுத்தக்கட்டமாக சில்வாசா மற்றும் மும்பை புறப்பட்டுச் சென்றார்.
துடிப்புமிக்க குஜராத் மாநாட்டின் முன்னோடி நிகழ்ச்சியாக, அங்குள்ள கண்காட்சி மையத்தில், சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடக்க விழாவுடன் பிரதமரின் குஜராத் பயண முதல் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கியது. அகமதாபாதில் அதிநவீன உயர்சிறப்பு பொது மருத்துவமனையான சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் வளர்ச்சி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை நிறைவேற்றும் விதமாக, புதிய இந்தியாவை உருவாக்க, அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக கூறினார்.
சபர்மதி ஆற்றங்கரையில், அகமதாபாத் வணிகத் திருவிழா 2019-ஐ தொடங்கி வைத்தது, பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் மற்றொரு முக்கிய அம்சமாகும். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
குஜராத்தில் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளின் தொடக்கமாக, துடிப்புமிக்க குஜராத் மாநாடு-2019-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார். காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் கண்காட்சி மற்றும் மாநாட்டு அரங்கில் 9-ஆவது துடிப்புமிக்க குஜராத் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் இடையே உரையாற்றிய அவர், இந்தியாவில் தொழில் தொடங்குவது தொழில் முனைவோருக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக அமையும் என்றார்.
இந்த நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக, 18 ஜனவரி 2019 அன்று, உஸ்பெகிஸ்தான் அதிபர் சவ்கத் மிர்ஸியோயேவ், செக் குடியரசின் பிரதமர் திரு ஆன்ட்ரேஜ் பாபிஸ், மால்டா பிரதமர் டாக்டர் ஜோசப் மஸ்கட் மற்றும் டென்மார்க் பிரதமர் லார்ஸ் லோக்கே ராஸ்முஸேன் ஆகியோரை பிரதமர் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து குஜராத்தின் காந்திநகரில் உள்ள தண்டி குடிலில் முப்பரிமாண லேசர் ஒலிக்காட்சி நடைபெற்றது.
துடிப்புமிக்க குஜராத் மாநாட்டை குறிக்கும் விதமாக குஜராத்தில் பெருமளவுக்கு முதலீடு செய்வதற்கான திட்டங்களை தொழிலதிபர்கள் அறிவித்தனர்.