ஆராய்ச்சிகள், மனித ஆன்மா போன்ற நிரந்தர நிறுவனத்தைப் போன்றது என பிரதமர் திரு.நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். ஆராய்ச்சி முடிவுகளை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளவும் , கண்டுபிடிப்புகளை அமைப்பு ரீதியாக்கவும் வகை செய்வதென்ற இரட்டைக் குறிக்கோளுடன் அரசு பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். தேசிய அளவியல் மாநாடு 2021-ல், தேசிய அணு கால அளவு மற்றும் பாரதீய நிர்தேஷக் திரவிய அமைப்பு ஆகியவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்த பிரதமர், தேசிய சுற்றுச்சூழல் தர ஆய்வகத்திற்கும் இன்று காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிப் பேசினார்.
அறிவுசார்ந்த பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியின் பங்கு குறித்து, பிரதமர் விரிவாக விவாதித்தார். எந்தவொரு முன்னேறும் சமுதாயத்திலும், ஆராய்ச்சி என்பது இயற்கை வாழ்விடமாக மட்டுமின்றி, இயற்கையான செயல்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார். ஆராய்ச்சியின் விளைவு வணிக ரீதியானதாகவோ, சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவோ இருக்கலாம் என்பதோடு, நமது அறிவாற்றல் மற்றும் புரிந்துகொள்ளும் தன்மையை விரிவுபடுத்தவும் ஆராய்ச்சி உதவும் என்றும் அவர் கூறினார். ஒரு ஆராய்ச்சியின் எதிர்காலப் போக்கு மற்றும் பயன்களை முன்கூட்டியே கணிப்பது, எப்போதும் சாத்தியமற்றது. ஆராய்ச்சி என்பது, அறிவாற்றலின் புதிய அத்தியாயத்திற்கு வழிவகுக்கக் கூடியது என்பதோடு, அது என்றைக்கும் வீண்போகாது என்பது மட்டும் உறுதி. மரபியலின் தந்தை என்றழைக்கப்படும் மென்டல் மற்றும் நிகோலஸ் டெஸ்லா சுட்டிக்காட்டிய உதாரணங்களைப் பட்டியலிட்ட பிரதமர், இவர்களது பணியின் திறமை, காலங்கடந்து தான் அங்கீகரிக்கப்பட்டது என்றார்.
பல நேரங்களில், ஆராய்ச்சிகள், அதன் உடனடி இலக்குகளை நிறைவேற்றாது என்றாலும், வேறு சில துறைகளில், அதே ஆராய்ச்சி, புதிய வழிகாட்டுவதாக அமையக்கூடும். ஜெகதீஷ் சந்திர போஸின் நுண்ணலைக் கோட்பாடு, வணிக ரீதியாக முன்னெடுத்துச் செல்லப்படாவிட்டாலும், இன்று மேற்கொள்ளப்படும் ரேடியோ தொலைத்தொடர்பு முறை முழுவதும், அதனை அடிப்படையாகக் கொண்டது தான் என்பதையும், பிரதமர் உதாரணத்துடன் விளக்கிக் கூறினார். உலகப் போர்களின்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், பின்னாளில் பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தியிருப்பதற்கும் அவர் உதாரணங்களை எடுத்துரைத்தார். உதாரணமாக, போர் காலத்தில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ட்ரோன்கள், தற்போது படப்பிடிப்புகளுக்கும் , பொருட்களை விநியோகிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, நமது விஞ்ஞானிகள், குறிப்பாக இளம் விஞ்ஞானிகள், ஆராய்ச்சிகளை பல்வேறு துறையிலும் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். ஆராய்ச்சியின் பயன்பாடு, அவர்கள் அதனை மேற்கொள்ளும் நோக்கத்திற்கு அப்பாற்பட்டதாக எப்போதும் இருக்க வேண்டும் .
போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தொழிற்சாலைகள் அல்லது அன்றாட வாழ்க்கைத் தேவைகள் உப்பட, தற்போது மின்சாரம் இல்லாமல் எதுவும் இல்லை என்றாகிவிட்டதுபோல, சிறிய கண்டுபிடிப்புகள் கூட உலகையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றவை என்பதையும் பிரதமர் விளக்கிக் கூறினார். அதேபோன்று, குறைகடத்திகள் (செமி கன்டக்டர்) போன்ற கண்டுபிடிப்புகளும், டிஜிட்டல் புரட்சியுடன் நமது வாழ்வை வளப்படுத்தியுள்ளன. அதுபோன்ற பல வாய்ப்புகள் நமது இளம் ஆராய்ச்சியாளர்கள் முன் உள்ளன, இதனைப் பயன்படுத்தி, தங்களது ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் வாயிலாக முற்றிலும் மாறுபட்ட எதிர்காலத்திற்கு வழிவகுக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
எதிர்கால-ஆயத்த சூழல் முறையை உருவாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளையும் பிரதமர் பட்டியலிட்டார். உலக அளவில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, முதல் 50 இடங்களுக்குள் வந்திருப்பதோடு, அடிப்படை ஆராய்ச்சியை வலியுறுத்தக் கூடிய அறிவியல் மற்றும் பொறியியல் வெளியீடுகளிலும் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. தொழில் நிறுவனங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் அனைத்தும், இந்தியாவில் தங்களது ஆராய்ச்சிப் பிரிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. சமீப ஆண்டுகளாக, இதுபோன்ற அமைப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்திய இளைஞர்களுக்கு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான சாத்தியக்கூறுகள் முடிவற்றவை என்றும் பிரதமர் தெரிவித்தார். எனவே, ஆராய்ச்சி எந்தளவிற்கு முக்கியமானதோ, அந்தளவிற்கு அதனை அமைப்பு ரீதியாக மாற்றுவதும் அவசியமானது. அறிவுசார் சொத்துரிமையை எவ்வாறு பாதுகாப்பது என்பதை , நமது இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது காப்புரிமைகள் அதிகரிக்கும் வேளையில், அவற்றின் பயன்பாட்டையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். எந்தெந்த துறைகளில் நமது ஆராய்ச்சிகள் வலிமையானவையாகவும், துல்லியமாகவும் அமைகிறோதா, அந்தத் துறைகளில் நமது அடையாளம் வலுவடையும். இது, இந்தியா மீது வலிமையான முத்திரை பதியச் செய்ய வழிவகுக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
விஞ்ஞானிகள், கர்மயோகிக்கு இணையானவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், ஆய்வுக்கூடங்களில் முனிவர்களைப் போன்று தெளிந்த சிந்தனையுடன் அவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளையும் பாராட்டியதோடு, விஞ்ஞானிகள் 130 கோடி இந்திய மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளின் பாதையாக திகழ்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
Why value creation matters in science, technology and industry... pic.twitter.com/jgCOoYUGW4
— Narendra Modi (@narendramodi) January 4, 2021