பிரதமரின் வீட்டு வசதி திட்டம் தற்போதைய ஆட்சியின் கீழ் வேகமாக முன்னேறி வருவதாகவும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏழைகளுக்கு உதவியுள்ளதாகவும் பிரதமர் கூறினார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆறு லட்சம் பயனாளிகளுக்கு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நிதியுதவியை காணொலி மூலம் வழங்கிய பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டு மக்களின் தன்னம்பிக்கையுடன் தற்சார்பு இந்தியா இயக்கம் நேரடியாக இணைந்துள்ளதாகவும் சொந்த வீடு என்பது ஒருவரது தன்னம்பிக்கையை பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். சொந்த வீடு என்பது வாழ்க்கையில் நம்பிக்கையை அளித்து, ஏழ்மையில் இருந்து வெளியில் வரும் உறுதியை வழங்கும் என்று அவர் கூறினார்.
முந்தைய ஆட்சிகளின் போது, தங்களது வீடுகளை கட்டுவதில் அரசு உதவும் என்பதில் ஏழைகளுக்கு நம்பிக்கை இருந்ததில்லை என்று பிரதமர் நினைவு கூர்ந்தார். முந்தைய திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளின் தரமும் நன்றாக இல்லை என்று அவர் கூறினார். தவறான கொள்கைகளின் விளைவுகளை ஏழைகள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று கூறிய அவர், இவற்றையெல்லாம் மனதில் வைத்து, நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குள் ஒவ்வொரு குடும்பமும் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் கடந்த சில வருடங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 1.25 கோடி வீடுகள் பிரதமரின் வீட்டுத் வசதி திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் மத்திய அரசின் பங்களிப்பு ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ 1.5 லட்சம் ஆகும்.
உத்தரப் பிரதேசத்தில் இதற்கு முன் இருந்த ஆட்சிகள் சரியாக செயல்படவில்லை என்று பிரதமர் கூறினார். 22 லட்சம் கிராமப்புற வீடுகள் கட்டப்பட இருப்பதாகவும், இவற்றில் 21.5 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். 14.5 லட்சம் குடும்பங்களுக்கு ஏற்கனவே வீடுகள் கிடைத்து விட்டன, இவற்றில் பெரும்பான்மையானவை இந்த ஆட்சியில் கட்டப்பட்டவை.