2018ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதிப் பரிசினைப் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வழங்குவது என சியோல் அமைதிப் பரிசுக் குழு முடிவு செய்துள்ளது. சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவது, உலகப் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துவது, உலகில் விரைவாக வளர்ந்துவரும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி காணும் இந்திய மக்களின் திறன் மேம்பாட்டினைத் துரிதப்படுத்துவது, ஊழல் ஒழிப்பு மற்றும் சமூக நல்லிணக்க முயற்சிகளின் மூலம் ஜனநாயகத்தை மேலும் மேம்படுத்துவது ஆகியவற்றில் அவரின் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரமாக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே உள்ள சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க “மோடிநாமிக்ஸ்” என்பதை வழங்கி, இந்திய மற்றும் உலகப் பொருளாதாரங்களின் வளர்ச்சிக்கு திரு. மோடியின் பங்களிப்பை விருதுக் குழு அங்கீகரித்து 2018-க்கான சியோல் அமைதிப் பரிசினை வழங்குகிறது. ஊழல் எதிர்ப்பு மற்றும் பண மதிப்பு நீக்கத்தின் மூலம் அரசைத் தூய்மை செய்யும் பிரதமரின் முன்முயற்சிகளுக்காக அந்தக் குழு அவரைப் பாராட்டி உள்ளது. “மோடியின் கோட்பாடு” மற்றும் “செயல் ஊக்கமான கிழக்குக் கொள்கை” ஆகியவற்றின்கீழ் உலகில் உள்ள நாடுகளுடன் ஆக்கப்பூர்வமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலம் பிராந்திய மற்றும் உலக அமைதிக்குப் பிரதமரின் பங்களிப்பையும், இந்தக் குழுப் பாராட்டியுள்ளது.
கொரியக் குடியரசுடன் இந்தியாவின் ஆழ்ந்த நட்புறவைக் கருத்தில் கொண்டு, கவுரமிக்க இந்தப் பரிசு அளிக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் திரு. மோடி, இந்த விருதினை ஏற்றுக்கொண்டார். இருதரப்பினருக்கும் வசதியான நேரத்தில் சியோல் அமைதிப் பரிசு அறக்கட்டளை இந்த விருதினை வழங்கும்.
பின்னணி
உலக அளவில் அமைதி மற்றும் சமரச சூழலை உருவாக்கவும், நட்புறவு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், 160 நாடுகள் பங்கேற்புடன் கொரியக் குடியரசின் சியோல் நகரில் 24-வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில் 1990ஆம் ஆண்டு சியோல் அமைதிப் பரிசு நிறுவப்பட்டது. கொரியத் தீபகற்பத்திலும் உலகின் மற்றப் பகுதிகளிலும் அமைதியைக் கொரிய மக்கள் விரும்புகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக சியோல் அமைதிப் பரிசு நிறுவப்பட்டது.
உலக அமைதிக்காகவும், நாடுகளுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்துவதற்கும், மனிதகுலத்தின் நல்லிணக்கத்திற்கும் பங்களிப்பு செய்கின்ற தனிநபர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சியோல் அமைதிப் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த காலத்தில் ஐநாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் கோஃபி அனான், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருக்கும் சர்வதேச ரீதியில் நன்கு அறியப்பட்ட எல்லைகளற்ற மருத்துவர்கள், ஆக்ஸ் ஃபார்ம் போன்ற அமைப்புகளுக்கும், இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து 1,300-க்கும் அதிகமானவர்கள் முன்மொழிந்த 100-க்கும் அதிகமான பிரமுகர்களை மதிப்பீடு செய்தபின், 2018-க்கான சியோல் அமைதிப் பரிசு பெற மிகவும் பொருத்தமானவர் என்பதால் பிரதமர் திரு. மோடிக்கு இந்தப் பரிசினை வழங்குவது என விருதுக் குழு முடிவு செய்தது.