புதுதில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை (என்சிசி) அணிவகுப்பில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். பல்வேறு என்சிசி பிரிவுகள் மற்றும் அண்டையில் உள்ள நட்பு நாடுகளைச் சேர்ந்த பிரிவுகள் அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
போடோ & ப்ரூ-ரியாங் உடன்பாடு
வடகிழக்கின் மேம்பாட்டு முயற்சிகள் பற்றி பேசிய பிரதமர், இந்தப் பகுதி ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டிருந்தது என்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடி வருகிறது என்றும், வன்முறையில் அப்பாவி மக்கள் உயிரிழக்கிறார்கள் என்றும் கூறினார். தற்போதுள்ள அரசு முன் எப்போதும் இல்லாத வகையில் வடகிழக்கின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு ஒருபக்கம் முயற்சி செய்த நிலையில், மறுபக்கம் மிகவும் திறந்த மனதோடும், வெளிப்படைத் தன்மையோடும், அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தியது என்று அவர் மேலும் தெரிவித்தார். இதன் விளைவுதான் போடோ உடன்பாடாகும். இதுவே இளைய இந்தியாவின் சிந்தனையாகும். மிசோராம்-திரிபுரா இடையே ப்ரூ-ரியாங் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, ப்ரூ பழங்குடி மக்கள் தொடர்புடைய 23 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது. இதுதான் இளைய இந்தியாவின் சிந்தனையாகும். ஒவ்வொருவரையும் இணைத்துக் கொண்டு, ஒவ்வொருவரையும் மேம்படுத்தி, ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் பெற்று நாட்டை நாங்கள் முன்னேற்றி வருகிறோம்.
குடியுரிமை திருத்தச் சட்டம்
நாட்டின் இளைஞர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த உண்மையை அறிந்து கொள்வது அவசியம் என்று பிரதமர் கூறினார். சுதந்திரத்திற்குப்பின், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும், இதர சிறுபான்மையினரும் தேவைப்பட்டால், இந்தியாவுக்கு வரலாம் என சுதந்திர இந்தியா வாக்குறுதி அளித்தது. அவர்களுக்குத் துணையாக இந்தியா நிற்கும் என்று அவர் உறுதியளித்தார். இது காந்திஜியின் விருப்பமும் ஆகும். 1950-ல் உருவான நேரு-லியாகத் உடன்பாட்டின் உணர்வும் இதுதான். “இந்த நாடுகளில் சமய நம்பிக்கை காரணமாக இன்னலுக்கு ஆளான மக்களுக்கு அடைக்கலம் அளிப்பதும், இந்தியக் குடியுரிமை வழங்குவதும் இந்தியாவின் பொறுப்பாக உள்ளது. ஆனால், இத்தகைய ஆயிரக்கணக்கான மக்கள் அதனை ஏற்காமல் இருந்தனர்” என்று பிரதமர் கூறினார். “இந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியைப் போக்குவதற்காக இப்போது எங்கள் அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் நீண்டகால வாக்குறுதியை நிறைவேற்ற இந்த மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படுகிறது” என்று பிரதமர் தெரிவித்தார்.
பிரிவினையின் போது ஏராளமான மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேறினார்கள். இருப்பினும், இங்குள்ள சொத்துக்கள் மீதான உரிமைகளில் அவர்கள் உறுதியாக இருந்தனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். பல லட்சம் கோடி மதிப்புள்ள இந்த சொத்துக்கள் மீது, இந்தியாவுக்கு உரிமை உள்ள போதும், பல பத்தாண்டுகளாக எதிரி சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். எதிரி சொத்துக்கள் சட்டத்தை எதிர்த்த அதே மக்கள்தான், இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா-பங்களாதேஷ் எல்லைப்பிரச்சினை
இந்தியா-பங்களாதேஷ் எல்லைப்பகுதிகளில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வுகாண உறுதியான நடவடிக்கை எதுவும் இருந்ததில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார். எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படாதவரை ஊடுருவலைத் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார். தீர்வு காணப்படாமல் வைக்கப்படும் பிரச்சினை ஊடுருவல்காரர்களுக்குப் பாதையைத் திறக்கிறது. அரசியல் நடத்த உதவுகிறது.
ஒருவரோடு ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவர் மற்றவரின் கருத்துக்கு செவிமடுத்து, இருநாடுகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில், தீர்வை ஏற்படுத்தி, பங்களாதேஷ் உடனான எல்லைப் பிரச்சினைக்கு அரசு தீர்வுகண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட்டிருப்பதற்காக மட்டுமின்றி, இந்தியா-பங்களாதேஷ் இடையேயான உறவு வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தை அடைந்திருப்பதற்காகவும், வறுமைக்கு எதிராக இருநாடுகளும் போராடுவதற்காகவும் திருப்தி அடைவதாகக் கூறினார்.
கர்தார்பூர் பாதை
பிரிவினை ஏற்பட்ட போது, குருத்வாரா கர்தார்பூர் சாஹிப் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டு, பாகிஸ்தானின் ஒருபகுதியாக ஆனது என்று பிரதமர் தெரிவித்தார். கர்தார்பூர் என்பது குருநானக் பூமியாகும். இந்த புனிதத் தலத்தோடு, கோடிக்கணக்கான இந்திய மக்களின் நம்பிக்கை பிணைந்துள்ளது என்று அவர் கூறினார். கர்தார்பூருக்கு எளிதாகச் சென்று குருவின் பூமியை தரிசிக்கும் வாய்ப்புக்காக சீக்கிய யாத்ரிகர்கள் பல பத்தாண்டுகள் காத்திருந்ததாக அவர் தெரிவித்தார். தமது அரசால் கர்தார்பூர் பாதை அமைக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.