“பொருளாதாரக் கொள்கை – முன்னோக்கிய பாதை” என்ற தலைப்பில் நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, 40க்கும் மேற்பட்ட பொருளாதார ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த அமர்வில் கலந்து கொண்டவர்கள் பெரும் பொருளாதாரம், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, நகர்ப்புற மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய பல்வேறு பொருளாதார அம்சங்கள் குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு சிந்தனையைத் தூண்டும் ஆலோசனைகளை வழங்கியவர்களுக்கு நிதி அமைச்சர் திரு. அருண் ஜேட்லி தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தனது உரையில் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். பல்வேறு துறை நிபுணர்கள் தெரிவித்த தரமான யோசனைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பொருளாதாரம் குறித்த விஷயங்களைக் கவனிக்கும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். நிதி ஆயோக் துணைத் தலைவர் திரு. அர்விந்த் பனகாரியா மற்றும் நிதி ஆயோக் உயரதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.